Monday 9 May 2011

ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'-பாகம் 3

பாகம்-1 பாகம்-2
சபதமெல்லாம் அண்ணாமலை ரஜினியாட்டம் நல்லாத் தான் எடுத்தேன். அதை நிறைவேத்தறதுக்குள்ள எத்தன உணர்வுகள்!

"விக்கிலீக்ஸ் தெரியும், ஒய் இட்லி லீக்ஸ்? "
"உப்பு மட்டும் சரியாப் போட்டிருந்தேன்னா.."
"ஒண்ணுமில்லாத ஒன்றை அனா இட்லிக்கு எதுக்குத் தான் அந்த முருகன் இட்லிக் கடைக்கு அத்தன கூட்டமோ"
"கருமம் இந்தக் குளிருல கஷ்டப்படனும்ன்னு என்ன தலையெழுத்தா?"
"ஏங்க, எத்தன தடவ குப்பையில போடறது, இந்த வாட்டி நம்மளே..."

எல்லாத்தையும் சொன்னேன்னா இன்னொரு தொடரும் வரும் (யாருங்க அங்க ஓடறது? உக்காருங்க, நான் இன்னியோட முடிச்சுக்குவேன்).இந்த மாதிரி பலப் பல இடர்கள், இட்லிகளை சந்திச்ச பிறகு, ஒரு நாள் எதிர்பாத்தபடி வந்திச்சப்பா இட்லி-பஞ்சாட்டமா, மல்லியப்பூவாட்டமா !

ஆபரேஷன் ஜாஸ்மின் இட்லி சக்சஸ் !!
 (இட்லியும், மீன் கொழம்பும்)

வழிமுறைகளும், குறிப்புகளும் (எனது அனுபவத்தில், குளிர்நாடுகளுக்கு ஏத்தபடி):

இட்லி-சுடும்போது மட்டும் வர்றதில்ல அதோட குணம். மாவுக்கு ஊறவெக்கரதுல இருந்து, பதமா ஆட்டி, அப்புறம் புளிக்க வெக்கற வரைக்கும் ரொம்ப முக்கியம்.  அரிசி-நல்ல இட்லி வேணும்ன்னா வேற வழி இல்லை, இட்லி அரிசி தான் வேணும். உளுந்து-எந்த உளுந்துன்னாலும் பரவா இல்ல. பொட்டுளுந்து (தோல் நீக்காதது) நெறைய மாவாகும், ஆனா வேலை எடுக்கும். வெந்தயம்- அதே மாவ தோசைக்கும் வெச்சுக்கலாம்ன்னா சேத்துக்கலாம்; தோசை பொன்னிறமா வரும். இந்த மூனையும் 4 கப் :1 கப் :1 ஸ்பூன் விகிதத்துல எடுத்துக்கங்க. அரிசியை தனியாவும், மத்த ரெண்டை தனியாவும் ஊற வெச்சுக்கலாம்.

எட்டுல இருந்து பத்து மணி நேரம் ஊறனும். அப்ப தான் மாவு ஆட்டுனதுல இருந்தே புளிக்கிறதுக்கு தயாராகும். மிக்சியில மாவு ஆட்டலாம். ஆனா ரொம்பப் பொறுமை வேணும் அதுல மாவு அரைக்க; நிறுத்தி நிறுத்தி, கொஞ்சங் கொஞ்சமா, மிக்சி மோட்டார், மாவு சூடாகாம ! இட்லி மேல அவ்வளோ பிரியம் வெச்சிருக்கீங்கன்னா கிரைண்டர் ஒன்னு வாங்கரதுல தப்பே இல்லை;

மொதல்ல உளுந்து+வெந்தயம் நல்லாக் கழுவிட்டு அரைக்கணும். எடுத்த உடனே நெறையா தண்ணி ஊத்தி அரைக்கட்டும்ன்னு விட்றாதீங்க. இங்கதான் விஷயமே. மொதல்ல கொஞ்சமா தண்ணி ஊத்தி, உளுந்து நல்லா அரைபட அரைபட அப்பறமா தேவையான தண்ணி சேக்கணும். அப்பதான் உளுந்து மாவு நல்லா நுரச்சு வரும்; அதுதான் இட்லி பஞ்சாட்டமா வர்றதுக்கான காரணமே.. நல்லா நைசா அரச்சு முடிச்சுட்டு அத்தனயும் தனியா ஒரு பெரிய பாத்தரத்துல எடுத்து வெச்சுக்கோங்க. அடுத்தது அரிசியக் கழுவிட்டு, அதே மாதிரி தண்ணி கொஞ்சமா விட்டு விட்டு நைசா அரச்சதுக்கு அப்புறம் அதை உளுந்து மாவோட சேத்துக்கோங்க. ரெண்டு பகுதியில எந்த மாவு அரைக்கும்போதாவது தெரியாம தண்ணி ஜாஸ்தியாப் போயிடுச்சுன்னா அடுத்ததுக்கு கம்மியா இருக்கட்டும். இப்ப ரெண்டு மாவையும் ரெண்டு ஸ்பூன் உப்பு போட்டு நல்..லாக் கலக்கணும். இந்த இடத்துக்கு சுத்தம் சோறு (இட்லி) போடாதுங்க. என்னதான் கொஞ்சம் ஈஸ்ட் சேத்துகிட்டாக் கூட கையில கலக்கினா தான் மாவு புளிக்கும். நோ கரண்டி கலக்கிங்க்ஸ். ("இதெல்லாம் தெரியாமலா இருக்கோம் நாங்க?"-அவ்வ்வ்வ்)

நம்மூருபக்கம்ன்னா அடிக்கிற வெய்யிலுக்கு மத்யானம் மாவாட்டி வெச்சா சாய்ந்தரதுக்கே இட்லிதோசை சாப்பிடலாம். குளிர் நாடுகள்ல? ம்ஹூம் பொறுமை; பொறுமை எருமையை விடப் பெரியது. மாவுப் பாத்திரத்தக் கொண்டு போயி ஹீட்டர் மண்டை மேல வெக்கக்கூடாது; மாவு கோவிச்சுக்கும். புளிக்கறேன் புளிக்கறேன்னு கடசீல கெட்டே போகவும் வாய்ப்பிருக்கு. எந்த ரூம் ஹீட்டர் போட்டு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்குமோ, அங்க வெச்சாலே போதும். இல்லைன்னா ஓவன்ல லைட்டு போட்டு மாவுப் பாத்திரத்த அதுக்கு உள்ள வெச்சிருங்க, அடுத்த நாளே(ளே?) புளிச்சுரும்.

நான் இப்பெல்லாம் முந்தின நாள் சாயந்தரம் மாவாட்டி வெச்சா அடுத்த நாள் காலைல இட்லி ஊத்தறேன். ஓல்டு ஸ்டைல் இட்லி தட்டுன்னா துணி போட்டு எண்ணை இல்லாம வேகும்; ஆனா சில்வர் தட்டுன்னா? சில பேரு இட்லி தட்டுல ஒட்டாம வர லேசா எண்ணை தேச்சு அப்புறம் மாவு ஊத்துவாங்க. ஆனா அப்படி தேவை இல்லை. இட்லித் தட்டை ஒரு கழுவு கழுவி, ஈரப்பதத்துல மாவு ஊத்துங்க. பத்து நிமிஷத்துல இட்லி ரெடி ஆய்டும் (சந்தேகமிருந்தா கருவேப்பில்லைக் குச்சி அல்லது போர்க்கில் குத்திப் பார்க்கவும்). கொஞ்ச நேரம் ஆற விட்டுட்டு எடுத்தாலோ அல்லது இட்லித் தட்டை திருப்பி டேப் தண்ணீரில் கொஞ்சம் குளிரவைத்தோ இட்லி எடுத்தால், ஒட்டாமல் வரும். அவ்வளவுதான் ! இனி என்னா? லபக் லபக் தான் !! இந்த செய்முறை எனக்கு வந்தது அடிப்படையில தான். இன்னும் எக்ஸ்பர்ட் தங்கமணிகள்/ரங்கமணிகள் இருந்தா, குறிப்பு குடுங்க, இட்லி கொட்டா (குப்பையில) சமுதாயத்தை உருவாக்குவோம்.
(சத்தியமா நாஞ்சுட்ட இட்லிதான்)

என்னதான் எங்க மாமியார் அளவுக்கு இல்லைன்னாலும், இங்க இருக்கற நட்புகள், சொந்தங்கள் எல்லாரும் பாராட்டற அளவுக்கு இப்போ இட்லி சுட வருது. சிலர் நல்லா இருக்குன்னு மாவு வாங்கீட்டுப் போயிருக்காங்க. "ஜாஸ்மின் இட்லி" ன்னு இங்க லண்டன் ல ஒரு இட்லிக்கடை போடலாம்ன்னு.. எனி பைனான்சியர் ப்ளீஸ்? :)

Thursday 5 May 2011

ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'-பாகம் 2

பாகம் 1

ராத்திரி கனவெல்லாம் இட்லியும் சட்னியும் தான் போங்க. காத்தால எந்திரிச்சுப் பாத்தா, அட, மாவு லேசாப் பொங்கின மாதிரி இருக்கு. சந்தோசத்துல தூங்கீட்டு இருந்த மச்சான ஓடியாந்து எழுப்புனா, நாலு மணிக்கு எதுக்கு எழுப்புறேனு திட்டீட்டு மறுபடி தூங்கீட்டாரு. அடக்கெரகமே மணி நாலுதான் ஆச்சான்னு மாவக் கலக்கி ப்ரிட்ஜுல எடுத்து வெச்சுட்டு நானும் தூங்கிட்டேன். அப்புறம் ஆறு மணிக்கெல்லாம் ("மத்த  நாள்ல எட்டு மணிக்கு எந்திரிக்கிற ஆளு தானே நீயி?") எந்திரிச்சு இட்லி சுட்டு டிபன் பாக்சுக்குப் போட்டுக் குடுத்தாச்சு. யெஸ் யெஸ், அம்மாகிட்ட போன் போட்டு எப்டி இட்லி சுடறதுன்னு கேட்டுத் தான் ..ஹி ஹி . இட்லி பிடிக்கும்ன்னு சொன்னாரில்ல? அதனாலதான் லஞ்ச்சுக்கு போட்டுக் குடுத்து விட்டேன்.

இன்னொரு ரவுண்டு இட்லி ஊத்திவெச்சு, சுடச்சுட ப்ளேட்ல போட்டு சட்னி ஊத்தி பிச்சு வாயில வெக்கப்...
"ட்ரிங் ட்ரிங்"
"டேய், அந்த இட்லிய சாப்ட்டுடாதே"
"ஏங்க, உங்களுக்கு நைட்டு வேணும்ன்னா மறுபடி ஊத்திக்கலாங்க"
"மறுபடியுமா.....? மாவப் புளிக்க வெச்சு வெச்சு, கடசீல கெட்டே போச்சு போலிருக்கு, பாரு ! "

அட ஆமாம், ஒரு மாதிரியாத் தான் வாசம் வருது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலியேன்னு நொந்து போயி எல்லா மாவையும் குப்பையில இல்ல இல்ல, (குப்பை எடுக்க வர்ற கவுன்சில்காரன் செத்துகித்து போயிட்டான்னா?)  சிங்க்ல கொட்டினேன். எங்கம்மா வேற, இட்லி எப்படி வந்துச்சுன்னு கேட்டாங்க; பொய் சொல்றதுன்னு ஆச்சு, அப்பறமென்ன? "ஹா, நீ கூட இந்த அளவுக்கு அருமையா இட்லி செய்ய மாட்டே, அவரு இனிமே தெனம் இட்லி வேணும்ன்னு சொன்னாரு"-எப்புடி !

அப்புறம் ஒரு நாள் இங்கிருக்கற என் பிரெண்டு ஒருத்திகிட்ட பேசிட்டு இருக்கும்போது யதேச்சையா இட்லி பத்தி பேசினோம். மீண்டும் ஒரு சலனம், மறுபடி இட்லி செஞ்சு பாப்போம்ன்னு. இந்தத் தடவை அளவக் கொஞ்சம் கொறச்சு (3 : 1.5 ) மாவாட்டி உடனேயே ஹீட்டருக்குப் பக்கத்துல வெச்சுட்டேன். சாயங்காலத்துல இருந்து அடுத்த நாள் காலைல வரைக்கும்தான், அப்புறம் புளிச்சிடுச்சு. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல.. மச்சானப் போயி கூட்டீட்டு வந்து காமிச்சேன். பாத்துட்டு அவரும்,  அடா, பரவாயில்லையே! அப்படீன்னு அவரும் பாராட்டினாரு. எல்லாம் சாயந்தரம் சாப்ட்டுக்கலாம்,ம்ம் ம்ம் , இப்போ கெளம்புங்க ன்னு பெரிசா மிரட்டல் வேற.. செஞ்சுகுடுக்கற மொக்கை இட்லிக்கு எத்தன வெட்டி பில்டப்பு!

சாயந்தரம் உருளைக்கிழங்கு கொழம்பு வெச்சுட்டேன். இட்லி ஊத்தி எடுத்து வெச்சுட்டு, இவரு எப்போ வருவாருன்னு பாத்துட்டு இருந்தேன். வரும்போதே போன் பண்ணி என்ன கொழம்புன்னு கேட்டு தெரிஞ்சுகிட்ட மச்சான்,  தான் சோதனை எலி ஆய்ட்டோம்னு தெரியாம ஆசையா சாப்பிட உக்காந்தாரு. ஒரு வாய் சாப்ட்டுட்டு என்னைப் பாத்தாரு பாருங்க ஒரு பார்வை; "உன்ன மாதிரி பொண்டாட்டி கெடைக்க எத்தன ஜென்மம் நான் புண்ணியம் பண்ணி இருக்கணும்" ங்கறா மாதிரி இருந்துச்சு.

நான் வேற உணர்ச்சிவசப்பட்டு "ச்ச, பரவா இல்லைங்க, உங்களுக்கு பிடிக்கறதெல்லாம் இனி ஒன்னொன்னா செஞ்சு குடுக்கறேன். நீங்க சாப்ட்டா சரி" ன்னு டயலாக்கு !!
"இந்த இட்லி மாதிரி ஒண்ணுன்னும் செஞ்சீன்னா, சீக்கிரம் எனக்கு தியாகி சிலை நானே வெச்சுக்குவேன்"
அப்டி என்ன பிரச்சனை கண்டுபுடிச்சாரோ ? ஒன்னுமில்லீங்க, லேசா வேகாத மாதிரி இருந்துச்சுன்னு எல்லா இட்லிகளையும் ஒரு பத்து நிமிஷம் (ஆமாம் பத்தே நிமிஷந்தான்) மைக்ரோவேவ் பண்ணினேன், அவ்ளோதான். இதுக்குப் போயி.. என்னன்னு இட்லிய ஒரு வாய் பிச்சுப் பாத்தா... வெளில எந்த சுவடும் தெரியாம உள்ள பூரா கருகி.. கிக்கிக்கி...

நல்லவேளை கொழம்பு வெச்சதால சம்பவத்துக்கு (?!?) அப்புறம் ரைஸ் வெச்சு சாப்ட்டோம்.இந்த எடத்துல நீங்க நெனைக்கிறது கேக்குது. இட்லி தான் செய்யத் தெரியாது மக்களே; மத்ததெல்லாம் சாப்பிடற மாதிரி நல்லாத் தான் இருக்கும். அதுக்கப்புறம் குட்டிப் பையனுக்கு அவுங்கப்பா அம்மா, ஆடு, இட்லின்னு சொல்லிக் குடுத்து பாவம் சந்தோஷப்பட்டுக்குவார். ஆனா பாருங்க விதி வலியது, இல்லையா? ஒரு நாள் சரவணபவன் வழியா போகவேண்டி வந்தது. அப்போ எடுத்தேன் ஒரு சபதம். வேறென்ன? இன்னும் ரெண்டே வாட்டி, செய் அல்லது தின்னாமல் மடி. பிடிச்ச விஷயத்துக்காக போராடறதுல அர்த்தம் இருக்கு- இட்லியோ, இதயமோ. என்ன நாஞ்சொல்றது? (தொர தத்துவம்லாம் பேசுது)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் , மீண்டும் வேதாளத்தை தேடி முருங்கை மரம் ஏறினான். 

(அய்யய்யோ, இன்னைக்கும் முடிக்க முடியலையே.. சரி, நாளைக்கு முடிச்சுக்கலாம், ஓகே?)

பாகம்-3

Tuesday 3 May 2011

ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'

முஸ்கி: எழுத எழுத பதிவு பெரிதாகி வி( டும் / ட்டால்), தொடரும் போடப்படும்.

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நாவூறினால், நீங்கள் நிச்சயம் இந்தப் பதிவினைத் தொடர்ந்து படிப்பதில் அர்த்தம் இருக்கிறது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இட்லிருசி காணா தார்.
- (எழுதியவர்: புலவர் 'தின்னுவர்'.. ஹி ஹி )

வீட்டு இட்லியை பொறுத்த வரை வெகு சிலர் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் கடையில் பிரசாதம் பெற்றுக் கொள்ளவேண்டியது தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், இட்லியை நினைத்தால். சென்னையில் என் ஆபீசுக்கு எதிரில் முருகன் இட்லி கடை இருந்தது முதல், வாக்கப்பட்டுப் போன இடம் வரை, அட்டகாசமான இட்லிக்குப் பஞ்சமே இல்லை. நம் ஊர் மக்கள் யாரிடமும் சொல்லிப் பாருங்கள் இட்லி என்ற ஒரே ஒரு வார்த்தையை. எங்க போனாலும் இட்லி சாப்பிடற மாதிரி வருமா என்று ஆண்கள் அதோடு நிறுத்திக் கொள்வார்கள்; ஆனால் பெண்களிடமிருந்து, அதுவும் முக்கியமாகத் தங்கமணிகளிடமிருந்து உடனே அடுத்த கேள்வி கிளம்பும். 'உங்களுக்கு நல்லா இட்லி சுட வருமா, பஞ்சு மாதிரி' என்று. ஒன்பது மணிக்கு மீட்டிங் என்றாலும் கூட எட்டு ஐம்பதிற்கு சரவணபவனிலும் சங்கீதாவிலும் சாம்பாரும் ஸ்பூனுமாகப் பலரை உட்கார வைத்தது எது? அப்படி என்ன தான் வரலாற்று முக்கியத்துவம் அந்த இட்லிக்கு? இனி...

சென்னையில பிரெண்ட்ஸ் கூட தங்கி இருந்தப்போ சமைக்கிறோம் பேர்வழின்னு பாத்திரம் எல்லாம் இருக்குமே தவிர ஒன்னையும் செஞ்சதில்ல. தோசை மாவு வாங்கி தோசை ஊத்திக்குவோம். அவ்ளோதான். இட்லி குக்கர் எல்லாம் கெடையாது. வேணும்ன்னா எந்த ஹோட்டல்ல இருந்தும் ஆர்டர் பண்ணிக்கலாமே. சென்னை வாழ்கன்னு சொல்லிட்டே நெறைய தடவை எட்டு இட்லி (நிஜமாவே எட்டு தாங்க), ரெண்டு வடை, மூணு கப் சாம்பார்ன்னு செம்ம கட்டு கட்டியிருக்கேன். ஆனா அதெல்லாம் சங்ககாலம் மாதிரி திங்ககாலம்ன்னு நெனச்சுக்குவேன்.

UK ரங்கமணிக்கு கல்யாணப்பட்டு (வாக்கப்பட்டுன்னு சொல்றோம், கல்யாணப்பட்டுன்னு சொல்லக் கூடாதா) , சென்னை இனிமே ஊருக்கு போற வழில இருக்குற எடம் அவ்ளோதான்னு ஆய்டிச்சு. அன்னிக்கு தான் அன்னிக்கே தான் மொதல் தடவையா பீல் பண்ணினேன், நல்ல இட்லிக்கு நம்ம எங்கே போறதுன்னு. ரங்கமணி கிட்ட மொதல் தடவை பேசும்போதே நைசா கேட்டேன், உங்களுக்கு இட்லி பிடிக்குமான்னு; ரொம்ப புடிக்கும், இத்தன நாள் இங்க இட்லி சாப்பிடாம வாழ்ந்துட்டேன், நல்லவேளை நீ வந்ததுக்கு அப்புறம் அந்த பிரச்சனை இல்லைன்னாரு. கிழிஞ்சுது போன்னு நெனச்சுகிட்டு , பாவம் என்னை மாதிரியே அவருக்கும் இட்லி சுடத் தெரியாதுன்னு விட்டுட்டேன் (பின்ன? சமைக்கத் தெரியும்ன்னு சொல்லியில்ல கல்யாணம் பண்ணிகிட்டாரு)

புது பொண்டாட்டி ஸ்டேடஸ் இருக்கே, அதுல வர்ற நன்மைகள் விட எதிர்பார்ப்புகள் தான் நம்மை டாரு ஆக்கும். "எல்லாம் நாந்தான்" ன்னு இப்ப சலிச்சுக்குற அதே அவர்தான் முன்னாடி "எல்லாமே அவதான்" ன்னு பெருமையா பீத்திக்குவாரு( அறியாப் பிள்ள பாவம், வேற என்ன சொல்லுவார்). இப்பிடியாப் போயிட்டு இருக்கும்போது UK க்கு வந்தப்புறமா ஒரு நாள், ஒரு மொக்கை படம் பாத்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சிந்தனை; அவருக்குத் தான் புடிக்கும்ன்னு சொன்னாரே, நம்ம ஏன் முயற்சி செஞ்சு நம்மளே இட்லி சுடக் கூடாது? இட்லித் தட்டு எடுத்துட்டு வந்திருக்கேன்; அப்புறம்ம்ம் .. மிக்சி இருக்கே, அரிசி-இருக்கு; உளுந்து? ம்ம்.. தேடித் பாத்தா அதுவும் ஊர்ல இருந்து கொண்டு வந்திருக்கேன்(வட சுடனும்ல?ஹி ஹி). ஆனா ரெசிபி? போடு ஊருக்கு ஒரு ஸ்கைப் வீடியோ கால். நம்புனா நம்புங்க, அரிசி ஊற வெச்சதுல இருந்து மாவாட்டி வெக்கற வரைக்கும் அம்மா லைன்ல இருந்தாங்க. நமக்கு அவ்வளவு நாலேஜ் இட்லி செய்முறைல !

எங்கம்மா அரிசியும் உளுந்தும் மொதல்ல ஊறவெய்யின்னு சொல்லி வாய மூடறதுக்குள்ள கடகடன்னு செஞ்சுட்டோம்ல.. நாங்கெல்லாம் முட்டைன்னா ஆம்லெட்டா நிக்கறவங்க. பாஸ்மதி அரிசிய ஊற வெச்சு, அதுவும் சும்மா இல்லீங்க, 6 கப்( ஒரு வாரதுக்காமா..). உளுந்து என்னா உளுந்துன்னு நெனைக்கறீங்க? பொட்டுளுந்து. அப்பத் தான் மாவு நெறைய ஆகும்ன்னு எங்கம்மாயி சொன்ன ஞாபகம். அது ஒரு அஞ்சு கப் (எந்த ஊர்லயாச்சு இந்த அளவிகிதம் போட்டிருக்காங்க?). நல்லவேளையா வெந்தயம் வீட்ல இல்ல. இல்லேன்னா, அது ஒரு ரெண்டு கப் போட்டிருப்பேன். எங்கம்மாவும் விகிதம் சொல்லல, நானும் கேக்கல. ஹி ஹி .

மாவு ஆட்டறதெல்லாம் எங்கம்மா சொன்னபடி தனித்தனியா ஆட்டி, கலந்து ஒரு பாத்திரத்துல வெச்சாச்சு. அம்மாவுக்கு அங்க நைட் ஆய்ட்டதால மாவு புளிச்சதுக்கு அப்புறம் இட்லியோ தோசையோ ஊத்திக்கன்னு சொல்லீட்டு கெளம்பீட்டாங்க. சரி, ஊர்ல எல்லாம் மத்யானம் ஆட்டி வெச்சா ராத்திரிக்கு புளிச்சுருமே (புளிச்சு பொங்கி வழியுறத காப்பாத்தாம வேடிக்கை பாத்து வாங்கிக் கட்டின ஞாபகம்), நைட்டு டிபனுக்கு இட்லி ஊதிக்கலாம்ன்னு ஒரே சந்தோஷமா போய்டுச்சு.

இட்லி வேலை முடிஞ்சுது (பார்றா !), சட்னி? தேங்காய் சட்னி வேண்டாம், புதினா சட்னி பண்ணுவோம், நல்லா இருக்குமேன்னு அதையும் ஆறு மணிக்கே செஞ்சாச்சு. நானும் நாலுமணியில இருந்து பாக்கறேன், மாவு புளிக்கவே இல்லையே! சரி, இன்னைக்கு ஆகாதுன்னு சட்னியத் தூக்கி ப்ரிட்ஜுல வெச்சுட்டு வேற என்னம்மோ சமச்சுட்டேன். அடுத்த நாள் காலைல பாக்கறேன், ம்ஹூம். அப்பவும் மாவு புளிக்கல. மைல்டா டவுட்டு வந்துச்சு. இந்தத் தடவை ஆன்லைன் ரெபரன்ஸ். குளிர் நாடுகளுக்கு மாவு புளிக்க நேரம் எடுக்கும், ஹீட்டார் பக்கத்துல வெக்கணும்ன்னு புரிஞ்சுது. அதே மாதிரி வெச்சுட்டு ராத்திரிக்கு புளிச்சுரும்ன்னு நம்ம்பி காத்துகிட்டு இருந்தேன் .. அப்பவாச்சி புளிச்சுதா? இல்லியே..அடுத்தநாள் காத்தால பாத்தா..

(பெரிய்ய க்ரைம் ஸ்டோரி.. தொடரும் வேற !) ஹி ஹி

பாகம்-2
பாகம்-3

Sunday 1 May 2011

ராஜ கலியாணத்துக்குப் போனேனா..

முன்குறிப்பு: நம்மள மட்டும் கலியாணத்துக்கு கூப்டாங்கன்னு மித்தவங்க எல்லாம் கோவிக்க கூடாது பாருங்க. அதனால நான் நான் யாரு கிட்டயும் முன்னாடியே சொல்லல.

28 ஆம் தேதி-பெரிய்ய நீளமான காரு. பேரு என்னம்மோ சொன்னாரு லியோவோ, லிமோவோ. அதை தான் அனுப்பி இருந்தாங்க. காலைல முஹூர்த்தம்ங்கறதால நைட்டே வரச் சொல்லீட்டாங்க அந்த ஓட்டலுக்கு. பேரெல்லாம் நமக்கு நெனப்பில்லீங்க. நீங்க டீவீல பாத்தாலும் பாத்திருப்பீங்க.. நைட்டு ரிசப்ஷன் இல்ல, அடுத்த நாள் தான். முப்பது வருஷங்கழிச்சு நடக்குறதால இவுங்க முறைப்படி சீர்க்கல்யாணம் தான். ஆனா ராத்திரி பூ கட்ற வேலை கூட இல்ல பாத்துக்கோங்க. எல்லாம் அவுங்களே ஆளுங்கள உட்டு பண்ணீட்டாங்க.

29 ஆம் தேதி : காலைல எந்திரிச்சு நாங்கெல்லாம் ரெடி ஆகியாச்சு, பொண்ணு பத்து அம்பதுக்கு தான் கெளம்பனுமாமே, பொள்ளாச்சி ஜோசியரு சொல்லீருப்பாரு போல. பத்தேகால்.. வில்லியம்ஸ் கெளம்பீட்டாரு அவுங்க வீட்டுல இருந்து. நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் மாப்பிள்ள பரவால்லீங்க, நல்ல குணம். காரு போற வழில எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு போறாரு; வாத்தியக்கார மக்களுக்கெல்லாம் சல்யூட்டு வேற வெச்சாரு; சர்ச்சுல எல்லாருகிட்டயும் நல்லா பேசறாரு; ஆனா இத்தன செலவு பண்றாங்க, பாவம் அவுருக்கு ஒரு பட்டு வேட்டி சட்டை வாங்கீருக்கலாம், யூனிபாரத்துலியே வந்தாரு. ஒரம்பரைங்க எல்லாம் முன்னாடியே வந்துட்டாங்க. ராஜ பரம்பரை எல்லாம் அப்புறம் தான் வந்தாங்க; பொண்ணோட அம்மாவும் தம்பியும் ஒரு வண்டில வந்தாங்க. அவுங்க நின்னு எல்லாரயும் கும்புடு போட்டு வாங்கன்னு சொல்லணும், மெதுவா வந்தா என்ன அர்த்தம்? இதப் போயி குறை சொன்னா சங்கடப்படுவாங்கன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.

அப்புறம் 85வயசு ராணியம்மா வந்தாங்க, நல்லா மஞ்சா கலர் கோட்டும், தொப்பியும் போட்டுக்கிட்டு. நானு ஒரு நிமிஷம் எங்க அப்பத்தாவ நெனச்சுகிட்டேன், அது எப்பிடி இருக்கு, இவுங்க எப்படி இருக்காங்கன்னு.

நம்மூரு மாதிரியே கடசீல வந்திச்சுப்பா பொண்ணு கேதரின், அவங்கப்பா கூட. செம வரவேற்ப்பு பொதுமக்கள் கிட்ட இருந்து. பொடவ முந்தானியாட்டம் கவுனுக்குப் பின்னாடி நீளமான துணி-ரெண்டு மீட்டர் இருக்கும்.எல்லாரும் பொண்ணு என்ன போட்டிருக்கும் , என்ன சிங்காரிச்சு இருக்கும்னு ஒரே ஆர்வம். பின்ன, எந்தத் துணிக்கடை, எந்த டைலருன்னு சீக்ரட்டா வெச்சிருந்தாங்க. எனக்கென்னம்மோ மருதாணி போட்டிருந்தா நல்லா செவசெவன்னு இருக்கறதுக்கு நல்லா இருந்திருக்கும்ன்னு தோணுச்சு. என்ன பீட்டிபார்லர் பொண்ணோ, ஒழுங்காவே பண்ணுல போங்க.

தொனப்பொண்ணு நல்லாத் தான் இருக்குது. பொண்ணோட தங்கச்சியாமா. (ஆங் மறந்துட்டேன், நல்ல பையனா இருந்தா ஜாதகம் அனுப்பி வெக்க சொன்னாங்க.)

மாப்பிள்ளை மொதல்ல போயி பாதிரியார் முன்னாடி நின்னாரு. பொண்ணு அழகா வெக்கபட்டுகிட்டே சிரிச்ச மொகமா இருந்துச்சு போங்க. அவங்கப்பா கைய்யப் புடிச்சுக் கூட்டீட்டு வந்து மாப்பிள்ள பக்கத்துல நிக்க வெச்சாரு. தார வாத்துக் குடுத்து, அப்புறம் ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது.


ஒருத்தர் ஒருத்தரா மணமக்கள வாழ்த்திப் பேசினாங்க. வட்டம் வட்டாரம் இதெல்லாம் பத்தி பேசாம போறது இந்தூர்ல தான் போங்க. அப்புறம் ரெண்டு பேரும் தம்பதி சகிதரா குதிரை சாரட்ல அரண்மனைக்குத் திரும்பினாங்க. வழியெல்லாம் மக்கள் கூட்டம் கடலாட்டம். யப்பப்பா, எள்ளு வுளுந்தா எண்ணை ஆகி, அது ஆவியாவும் போயிரும் போங்க. அப்புறம் அரண்மனையில நாந்தான் ஆரத்தி எடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் குடுத்துட்டு உக்கார சொன்னேன். அப்புறம் வில்லியமு தான் , சரியக்கா, மச்சான் எப்பிடி இருக்காங்கன்னு கேக்க ஆரம்பிக்கையில ...

(ட்ரிங்... ட்ரிங்..) "அப்டீங்களா, சரி கெளம்பி வர்றேன்"

எம்புள்ள ராத்திரியில இருந்து அம்மாவக் காணமேன்னு ஒரே அலுவாச்சீன்னு மச்சான் தான், போனுல. அப்புறம் என்ன பண்றது, சொல்லீட்டு கெளம்பீட்டேன்.

வரையில நெனச்சுட்டே வர்றேன், இந்தூரு பொம்ளைங்க எல்லாம் பேசிக்க மாட்டாங்களா? இந்த நகை எங்கே வாங்கினது, இந்த பொடவை எங்கே வாங்கினது, தொப்பி, செருப்பு என்ன வெலைன்னு? அதெல்லாம் பேசாத என்ன கலியாணமோ !

வீட்டுக்கு வந்தப்புறம் நடந்ததெல்லாம் மூணாவது மனுசியாட்டம் டிவியில பாத்து தெரிஞ்சுகிட்டேன். நானில்லைன்கிற தைரியத்துல சோடி ரெண்டும் ..ம்ம்..

இன்னைக்கு காலைல புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும் எங்கியோ கெளம்பி ஹெலிகாப்டர்ல போனாங்க, எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரீல..ஷ்ஷ் .. யாருகிட்டயும் சொல்லிப்போடாதீங்க, எங்கூட்டுக்கு தான் சோறாக்கிப் போட வரச் சொல்லி இருந்தேன்.

இந்த போட்டோ தான், பாத்துக்குங்க.


நானெப்படி இதுல இருப்பேன்? எடுத்ததே நான்தானே? ஹி ஹி ....

Monday 21 February 2011

மலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை

இசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய்  மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.


முதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் !! அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.

கோடைக் காலக் காற்றே ...
https://youtu.be/tBmfvRpTkNY

ஆகாய கங்கை....
https://youtu.be/bfFT7danA_A

பொதுவாக எம்மனசு தங்கம்....
https://youtu.be/PrTibJi6q9I

ஆசை நூறு வகை....
https://youtu.be/rpg32O9udHA

என்னம்மா கண்ணு.....
https://youtu.be/EmO6YJl3nm8

இது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.

https://youtu.be/eXFqHsWDNkE








Friday 18 February 2011

மின்சாரக் கண்ணா...எல்லாருக்கும் உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா?

தலைமுறை கடந்த கலைஞர் அவர்; சக கலைஞர்களின் அன்புக்கும் உரியவர்; திரையில் தோன்றும் அந்த நொடி  விசில் பறக்கும்; என் பையனுக்கு, எனக்கு, என் அப்பாவுக்கு, அட எங்க அம்மாயிக்கு கூட பிடிக்கும்ன்னா பாருங்களேன்..  நடிப்போ ,ஸ்டைலோ,  நல்ல மனசோ, எளிமையோ- ஏதாவது ஒரு விஷயத்தில் அவரை எல்லோருக்கும் பிடிக்கும் காரணம் இதுதான்.
Super Star Rajinikanth


NDTV வழங்கிய இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் விருதுக்கு ஒரு ரசிகையாக, ஒரு தமிழ்மகளாக வாழ்த்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்வை அடைகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஜினி சார் !!

வில்லனோ ஹீரோவோ, கலக்குவார். நக்கல் பண்ணிகிட்டே சுத்துற பரட்டை, ஷீலான்னு கூப்பிட்டுகிட்டே நடந்து வர்ற அலெக்ஸ் பாண்டியன், பில்லா, அயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன், சம்போ சிவசம்போ தீபக், தளபதி சூர்யா, மன்னன் கிருஷ்ணா, மாணிக் பாஷா, ஆறுபடையப்பன் , வேட்டையன் ராஜா, மொட்டை MGR , சிட்டி ம்ம்ம்...மே இதெல்லாம் அசத்தோ அசத்துன்னு அசத்தின பாத்திரங்கள்.

மிக ரசிக்கப்பட்ட,/கைதட்டப்பட்ட/விசிலடிக்கபட்ட சில காட்சிகள் ..




வாழும் நாள் வரை வெற்றி நடைபோடுங்கள் !!

டிஸ்கி: (இது தானா உன்னோட டக்கு-ன்னு நினைப்பவர்களுக்காக..ஹி ஹி )இரண்டு நாளுக்கு முன்பே போட்டிருக்க வேண்டியது; ஒரு முக்கியமான வேலை குறுக்கிட்டதால் தாமதம். 

Wednesday 26 January 2011

மௌன (தேசிய) கீதம்

நம் தேசிய கீதத்துக்காக இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடத் தோன்றாத மக்களையும் பார்க்கிறோம்; இவர்களையும் பார்க்கிறோம் -ஒரே பாரதத்தில்.





(பகிர்ந்தே ஆகவேண்டிய ஒன்றாய் நெகிழ்வித்தது-ஆதலால்)