Thursday, 27 May 2010

இவர்கள் தான் "மாம்" "டாட்"

குழந்தைகள் பெறுவதற்கு முன் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. தந்தையென தாயென ஆனபின்பு அத்தனையும், அதற்கும் மேலும் நன்றாய் புரிகின்றது. முன்பெல்லாம் வழியில் பார்க்கின்ற எந்த குழந்தையாவது அழுது கொண்டிருந்தால் 'அடடா அழுகிறதே பாப்பா'வோடு கவலை முடிகிறது ; இதே பின்னாளில் மனம் பதறுகிறது, ஓடிச் சென்று பார்க்க துடிக்கிறது; வாரி எடுத்துத் தேற்ற அலைகின்றது.

குசும்பன் அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார், தொட்டில் கைதி------no குசும்பு என்று! அதன் மீட்சியாகவோ இல்லை நீட்சியாகவோ இந்த என் அனுபவத்தை சொல்லலாம்;
.
கார்முகிலுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வகுப்புகள் இருக்கும். அதில் ஒன்று எல்லாரும் தத்தமது குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு பழக விட்டு, கடைசியில் கிளம்பும்போது ரைம்ஸ் பாடி முடிப்பது. இன்று மேற்குறிப்பிட்ட அந்த வகுப்பு இருந்தது. முதல் ஒரு மணி நேரம் எல்லா குழந்தைகளும் மழலைகூட இல்லாத ஒரு சத்தங்களில் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், இழுத்துக்கொண்டும், தவழ்ந்து கொண்டும், விழுந்துகொண்டும் மகிழ்வாய் விளையாடிக்கொண்டு இருந்தனர். திடீரென ஒரு குழந்தை என் துப்பட்டாவை பிடித்து இழுத்து, வாயில் வைக்கப் போனது.  அப்போது அதன் அம்மா சடாரென பிடித்து அந்த குழந்தையை இழுத்துக் கோபத்தோடு "No, its hers" என்று சொன்னாள். அந்த ஏழு மாதக் குழந்தைக்குத் தெரியுமா, அது என்னுடைய துப்பட்டா என்று?  ஒழுக்கம் கற்றுக்கொடுங்கள், ஆனால் இப்போதிருந்தே வேண்டாமே! வருடங்கள் ஓடுகையில் தானாகவே சேட்டைகள் தொலைக்கட்டுமே, நாம் ஏன் அடக்க வேண்டும்?

இன்னொரு குழந்தை மற்றொரு குழந்தையின் கையைக் கிள்ள முயன்று கொண்டிருந்தது. நான் பிரித்து விடலாம் என்று முற்படுகையில் திடீரென அந்த குழந்தையின் அம்மா அதன் சட்டையை பின்னாலிருந்து கொத்தாகப் பற்றி அப்படியே தூக்கி வேறிடத்தில் கொண்டு விட்டாள். "Oh Emiley, your mom turned you as a flying girl" என்று பாராட்டுக்கள் வேறு!! என்ன கொடுமைடா சாமி!! இப்படி நம் ஊரில் செய்தால் "சீ நீயும் ஒரு தாயா" என்று தான் 'பாராட்டுக்கள்' வரும்.

எரிச்சலோடு வகுப்பு முடித்து வெளியில் வந்தால், உச்சமோ உச்சம். அங்கு ஒரு 'dad' ஸ்ட்ரோலரில்(குழந்தைகளை உக்கார வைத்து தள்ளும் வண்டி) இரண்டு குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு இருந்தார். ஒன்று வீரிட்டு கத்துகிறது, பலமாக அழுதுகொண்டே இருக்கிறது; அழும் குழந்தையைக் கையில்  எடுக்காமலேயே அந்தப் பாவி முன்னும் பின்னும் வண்டியை தள்ளிக்கொண்டு இருந்தான். ஒரு நிமிடம் இரண்டு நிமிடங்களல்ல, அரை மணி நேரம். எனக்கு நெஞ்செல்லாம் பதறியது, எந்த பொருளும் வாங்க முடியாமல் கவனம் முழுதும் எப்போது அழுகையை நிறுத்தும் என்றே இருக்கிறது.  ஓங்கி ஒரு அறை அவனை விட்டாலென்ன என்று கூட கோபம் எழுந்தது. அழுது அழுது ஓய்ந்து கடைசியில் அந்தக் குழந்தை தூங்கியே விட்டது. நமக்கு இருக்கும் அந்த பரிதவிப்பு, அந்த அரவணைப்பு இவர்களிடம் ஏன் இல்லை? என்ன சொல்லித் தருகிறார்கள் குழந்தைகளுக்கு? சத்தியமாய் புரியவில்லை.

நம் மக்களைப் பொறுத்தவரை குழந்தைக்கு அர்த்தம் குறும்பு என்று தான் தெரியும்; கடிந்து கொண்டாலும் கூட ரசிக்கத்தான் தெரியும்.இவர்களிடத்தும் பாசம் இருக்கிறது, ஆனால் அதை காண்பிக்கும் முறை நம்மைக் கொஞ்சம் அதிர்ச்சியடையத்தான் செய்கிறது.

Tuesday, 25 May 2010

உச்சகட்ட "பொறுப்பு"

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் "பௌண்டரி"
"இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்"

Thursday, 20 May 2010

வாழ்க்கையை சலித்துக்கொள்(ல்)பவர்களுக்கு...

எங்க அத்தை ஒருத்தங்க சொன்ன கதை இது ...

வண்டியில் போனவன் விமானத்தில் போறவனை பாத்து நெனச்சானாம், என்னடா நம்மால அப்படி போக முடியலையேன்னு ; அவன் முன்னாடி ஒருத்தன் நடந்து போய்கிட்டிருந்தானாம். வண்டியில போற அளவுக்காச்சும் கடவுள் வெச்சிருக்காரே பரவாயில்லைன்னு வேலைய பாக்க போனானாம். நடந்து போறவன் கார்ல போனவன பாத்து நெனச்சானாம், நமக்கு அப்படி முடியலையேன்னு ; அப்போ காலே இல்லாத ஒருத்தர் இன்னொருத்தர் உதவியோட ரோடு கிராஸ் பண்றத பாத்தானாம். நடந்து போற அளவுக்காச்சும் கடவுள் நம்மள வெச்சிருக்காரே சந்தோஷமப்பான்னு நெனச்சிட்டு போயிட்டானாம்.இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு கடவுள் அருளிய வாழ்க்கை திருப்திகரமாகத் தோன்றியது; நல்லா இருந்தும் என்னத்த சாதிச்சு கிழிச்சிருக்கோம் என்றும் தோன்றியது.ஆனாலும் நிக் சொல்வது போல நானும் சொல்கிறேன், I Love my life.

பார்த்து முடித்தபின் நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்பது உறுதி !!

இதோ தொடங்கிவிட்டேன் நானும்...

இன்று நாளை
நாளை மறுநாள்
வாரக் கடைசியில் கண்டிப்பாய்
அடுத்த வாரம் நிச்சயமாய்

திரும்பிப் பார்த்தேன்
திரும்பாமலே காலம்
நாட்களாய் வாரமாய்
இறுதியில் வருடமாய்
பெரும்பாலும் வெறுமையாய்
ஓடியே போனது

சோம்பலே சொந்தமென்றுவிட்டு
கற்பனைத் திறனா
கொக்கலித்துவிட்டு
என்தமிழ் காதலை
திட்டித் தீர்த்துவிட்டு

வேலை அதிகம்
முகில் தூங்கலை
ரைம்ஸ் கிளாஸ்
தலைவலி சளி?

உச்சத்தின் உச்சமாய்
'நல்லா ஆரம்பிக்கனுமே'

எனக்கே பிடிக்கவில்லை
நானுரைக்கும் பொய்கள்
(கிழிக்கவே தொடங்கலை
அதற்குளொரு கவலை
கத்தி மொன்னைஎன்று  :-)

எதுவோ இன்று
உந்தியது என்று
தொடக்கத்தை தொடங்கினேன்
சிந்தித்த சிலதுகளை
சிரித்துவிட்ட பலதுகளை

வழுக்கிவிட்ட வெண்பனி
வெள்ளையர் காதல்
ஈஸ்ட்ஹேம் ஈஸ்வரர்
தீயத்துவிட்ட இட்லி
திமிர்பிடித்த பூனை
மிகரசித்த வீடியோ
மிகப்பிடித்த பொழுதுகள்
எழுதவா பொருளில்லை
அத்தனைக்கும் மேல்

இதோ என் கைகளில் 
'கார்முகில்'

கவிதைஎன்று
கவினுருவாய்
சிரித்துக்கொண்டு
சிறுமுத்தாய்
எழுதம்மா எழுது !!


எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உந்திய என் கார்முகில், எழுத்தாளர்கள் பரிசல், கார்க்கி, குசும்பன்,ஆதி, அப்துல்லா, அனுஜன்யா, நர்சிம், இன்னும் எனக்கு ஊற்று கொடுத்த  எனது அன்பிற்குரிய எழுத்தாளர்கள்  அனைவருக்கும் இந்த வலைப்பூ வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடனும் சமர்ப்பணம்.

இனி வரும் பதிவுகள் அனைத்தும் என் டைரியின் பக்கங்கள், எனக்கு நானே முதல் ரசிகையாய் !! (அலெர்ட் ஆகி ஓடிராதீங்க ப்ளீஸ் !!)