Wednesday 15 December 2010

முடிவெட்டப் போலாமா?

கண்ணைத் திறந்து கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதால் மூளையின் அருமை நமக்குத் தெரிவதில்லை. கேட்கும் சத்தங்களில் இருந்தே சம்மந்தப்பட்ட அந்தப் பொருள் இருக்கும் தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்லுமாம் மூளை. சில சமயம் நாம் சில பாடல்கள் ஹெட்போனில் கேட்கும்போது ,'அட, என்ன ரெக்கார்டிங் போ'ன்னு நினைப்போம் .. அந்த அளவுக்கு இடம் வலம்ன்னு மாறி கேக்கும் பாட்டு நமக்கு. அது போன்றதொரு ஒலிப்பதிவு தான் இது. பலரும் இதை முன்பே  கேட்டிருப்போம். இருந்தாலும் மேற்கூறிய மூளையின் செயல்பாட்டுத் திறனுக்காக மீண்டும் ஒருமுறை கேட்கலாம். அமைதியான வேற எந்த சத்தமும் இல்லாத இடத்தில் , கண்களை மூடிக்கொண்டு , நல்ல தரமான ஹெட்போன் வைத்து, 90% சத்தத்தில்  கேட்கவும்  (அபீஸ் மக்கள் இவ்வாறு செய்தால் தூங்கிவிட்டதாகக் கருதப்பட்டு சீட்டுக் கிழிந்தால் கம்பெனி பொறுப்பல்ல)  



புதிதாகக் கேட்பவர்களுக்கு பிரமிப்பு நீங்கவில்லை அல்லவா? எப்படி இது போல் இசையை பதிவு செய்ய முடிந்தது என கூகுள் செய்த போது இதனை Binaural Recording எனக் கண்டறிந்தேன். நம் காது எப்படி ஒரு இயந்திரம் போல வேலை செய்கிறது எனப் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். அறிவியல் அதிசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கை அதிசயங்களே மிக ஆச்சர்யம் தருகின்றன.

**********************

இப்போதைய குழந்தைகள் ரொம்பவே அறிவாளியாகவும், திறமைசாலிகளாகவும், கூர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.. அதே போலவே அம்மா அப்பாக்களும் ரொம்ப ட்டூ மச்சாக இருக்கிறார்கள். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளுக்குள் கட்டாயத்தை திணித்து எரிச்சலடையச் செய்கிறார்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்  சென்ற சீசனில் இதற்கு அருமையானதொரு எடுத்துக்காட்டு கொடுத்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் "ஸ்ரீகாந்த் அப்பா". ஒவ்வொரு கட்டத்தையும் அவன் தாண்டி வருவதற்குள் அந்தத் தகப்பன் எதிர்கொண்ட டென்ஷன் இருக்கிறதே, அப்பப்பா , அந்தக் குழந்தை கூட எதையும் பெரிதாகக்  கண்டுகொண்டிருக்காது.
அவ்வளவு தூரம் போவானேன்? என் வீட்டிலேயே நடந்த ஒரு தமாசு சொல்கிறேன்.  என் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தாயார் ஊரிலிருந்து வந்திருந்தார். தனது இரண்டு வயது பேரனையும் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். சிறிது நேரம் கழித்து பேச்சு அந்தக் குட்டிப் பையனின் பிரதாபங்கள் பற்றி ஆரம்பித்தது.
"வினய் , ஊர்ல பால் வண்டி அண்ணா பேரு என்னன்னு சொல்லுப்பா"
"மாநிக்கோ (மாணிக்கம்) அண்ணா"
"உன்னோட பொம்மை என்னன்னு பாடும்?"
"ரோ ரோ ரோ போத் " (Row Row Row your boat)
"ம்ம், அப்புறம் நீ யாரு புள்ளைன்னு சொல்லுப்பா"
"  "
"சொல்லுப்பா ராஜா"
"   "
"சொல்லுடா ராஜா "
இத்தனை நேரமும் கேட்ட கேள்விகளுக்கு அவன் எரிச்சல் அடைந்திருக்க வேண்டும். மூன்றாம் முறை சடாரென பதில் வந்தது ,
"காக்கா புள்ள"

தேவையா இது ?

**********************

பனிப்பொழிந்த வெள்ளைக் காலையில் ஒருநாள் என் ஜன்னல் வழியாக இங்கு குதித்த கவிதை(?) ஒன்று... தலைப்பில்லாமல்.

இலைகள் முழுதும்
உதிர்ந்து விட்டாலும்
வசந்தம் மீளுமென
கம்பீரமாய்க் காத்திருக்கும்
மொட்டைமரத்தின் நம்பிக்கை
சொல் மனிதா
உன்னிடம் மட்டும்
ஏன் இல்லாமல்?

**********************


Thursday 14 October 2010

லட்சுமி கதை- பாகம் 4 (இறுதிப் பாகம்)


முந்தின நாள் என்ன தான் நடந்திருந்தாலும், எதுவுமே நடக்காத மாதிரி தூங்கற டைப் நானு. மணி சுமார் ஆறு இருக்கும். காலிங் பெல் சத்தம் கேட்டு எந்திரிச்சு (நாம்போயி எந்திரிப்பேனா?) என்னை வந்து எழுப்பினார் அப்பா. கீழ லட்சுமி வந்திருக்கு ன்னு சொன்னதும் தான் நேத்திக்கு நடந்ததும், நான் செம்ம கோபமா இருந்ததும் நியாபகத்துக்கே வந்திச்சு. சரின்னு போயி பாத்தா, இன்னும் ரெண்டு மூணு கார்டு  !

இனிமேலும் தேடுன்னு அனுப்பி, கார்டு எதுவும் டேமேஜ் ஆக்கிக் கொண்டு வந்தாத் தாங்காது சாமின்னு அப்பாவைப் பாத்தேன், அவரும்  ரெடி ஆன மாதிரி தெரிஞ்சுது. இப்ப நேரடியா லட்சுமி கிட்ட கேட்டா நான் திருடலன்னு சொல்லிட்டுப் பட்சி பறந்திரும், ஊரெல்லாம் போயி நாங்க அதுக்குத் திருட்டுப் பட்டம் கட்றதா வேற சொல்லிரும்ன்னு அம்மாயி சொன்னாங்க.. சரி மேல வா லட்சுமின்னு சொல்லிட்டு பழனிச்சாமி போலீஸ்காரருக்கு போன்ல கூப்பிட்டு விஷயத்த சொன்னோம்.

எங்களுக்குத் தான் வாய் அடங்காதே ! அதுக்குள்ள நான், அம்மாயி, அம்மா மூணு பேரும் பொறுக்க முடியாம கேட்டே போட்டோம்.
லட்சுமி, நீ தான் எடுத்தேன்னு தெளிவாத் தெரிஞ்சு போச்சு. உன்னையப் போயி நம்புனம் பாரு
ஐயோ, காணாம போனதைத் தேடிக் கொண்டாந்து குடுத்தாத் திருட்டுப் பட்டம் கட்றீங்களா அழுகுது வேற ! (நான் குடுத்த அதே ஆஸ்கார் ஆக்டிங்க எனக்கே திருப்பிக் குடுத்துச்சு)
இந்த பாரு, பொய்யெல்லாம் பேசீட்டிருந்தா வேலைக்காகாது. வா, போயி மினியப்ப சாமிகிட்ட காசு வெச்சு பாப்போம்; சாமி கண்டீப்பா காமிச்சுக் குடுத்துரும்
( முனியப்ப சாமி லட்சுமியக்காவோட குல காவல் தெய்வம்; அங்க போயி நூத்தியொரு ரூவா குடுத்து திருடுன பொருள் திரும்பி வரணும்னு வேண்டீட்டா திருடுன பொருளு திரும்பி வருதோ இல்லையோ, திருடுனவனுக்கு எதாச்சும் ஆகும்-இது நம்பிக்கை, ரெண்டு மூணு தடவை நடந்தும் இருக்கு )

ஹ, இந்த மெரட்டலுக்கெல்லாம் லட்சுமியக்கா பயப்படுமா?

வாங்க கோயலுக்கே போலாம், உண்மையாத் திருடுனவன சாமிதான் காமிக்கணும்
அப்ப நீ எடுக்கலைங்கற?
சத்தீமா, சாமிக்குப் பொதுவா எடுக்கலைங்
அப்பறம் எப்படி தீபா பர்சுல இருந்து ஒன்னொன்னா கரக்டா கொண்டுட்டு வந்தே?
அவிங்க தேடச் சொன்னாங்க, நல்லாத் தேடித் பாத்தேன். அங்கங்க  கெடந்துச்சுங்க ஒன்னோன்னும்
காசு வேணும்ன்னா கேட்டாக் குடுக்கறோம், இப்படித் திருட்டுப் பெரட்டுப் பண்ணாட்டி என்ன ?
தேடிக் கண்டுபுடிச்சுக் குடுத்ததுக்கு திருட்டுப் பட்டம் கட்டறீங்க பாத்தீங்களா?
இப்ப தீபாங்கப்பா போலீசுக்கு போன் பண்ணிருக்கறாரு. உண்மையச் சொல்லீட்டீனா இதோட விட்ருவோம். இல்லீனா ஜெயிலு தான்

அப்பக் கூட எடுத்தேன்னு சொல்லி இருந்தா விட்டுரலாம்ன்னு தான் அவங்கெல்லாம் நெனச்சாங்க (நான் அப்டி நெனைக்கல; ரெண்டு அடியாவது போடனும் போல எனக்கு இருந்துச்சு). ஆனா மறுபடியும் அந்தக்கா பொய் சொல்லிட்டே தான் இருந்துது.

ஆக்ஷன் கிங் பழனிச்சாமி போலீஸ்காரர் வந்தார். எங்கள மாதிரி வெட்டி நாயம் எல்லாம் பேசல அவரு.
பர்ஸ் எங்கே?
ஐயோ சாமீ நான் திருடவே இல்லீங்க
வேலை செய்ய வந்துட்டு கை வேச்சிருக்கற; எல்லாம் எனக்குத் தெரியும். உணர பொய்யெல்லாம் வேற எங்காச்சும் வெச்சுக்க. ஒழுங்கா உண்மையச் சொல்லீரு
இல்லீங்க. நாந்தாங்க காணாம போனது ஒன்னோன்னும் தேடிக் கண்டுபுடிச்சேன். திருட்டுப் பட்டம் கட்டறாங்க
 போலீஸ்காரர் உட்டாரு பாருங்க ஒரு அறை; ப்பொளீர்ன்னு. நாங்களே எதிர்பாக்கல.
இப்ப என்ன பண்றே, ஓடிப்போயி, பர்சு, அதுல இருந்த காசு, மிச்சமிருக்கற கார்டு எல்லாத்தையும் ஒன்னு விடாம கொண்டு வர்றே. பத்தே நிமிஷம், நீ இங்கிருக்கணும்

அடி ஒதவ மாதிரி அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்கன்னு சொல்றது ரொம்ப கரெக்ட். சொன்ன மாதிரி பத்தாவது நிமிஷம் லட்சுமி அக்கா என்னோட பர்சோட வந்து நின்னுச்சு.
இப்ப எப்படி காசு வந்துச்சு?
என்ற கைக்காசு போட்டு, கடன் வாங்கிக் கொண்டுவந்தங்க (சத்தியமா சிரிக்க ஆரம்பிச்சுட்டோம் எல்லாரும்)
யாரு நீயி? அரிச்சந்திரன் பொண்டாட்டி, உன்னைய நம்பி கடன் வேற குடுக்கறாங்களா? மறுபடி மறுபடி பொய் சொன்னே, ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவேன். எல்லாம் சரியா இருக்கான்னு பாரு தீபா
என்னோடது எல்லாம் சரியாத்தான் இருந்திச்சு. ஆனா பிரபுவோடது? நாங்க யாரும் அதை கவனிக்கல, அவன் பர்ச நைசா சுருட்டீரலாம்ன்னு நெனச்சிருக்கு.
என்னோடது எல்லாம் இருக்குங்கண்ணா. பிரபுவோட பர்சு இன்னும் வரலைங். அதையும் தான் எடுத்துட்டுப் போயிருக்கு

பழனிச்சாமி அண்ணன் லட்சுமியப் பாத்து ஒரு மொறை மொறச்சாரு. அவ்வளவு தான்; அடுத்த அஞ்சாவது நிமிஷம் பிரபுவோட பர்சும் வந்தாச்சு.
இனிமே எங்கியாச்சும் திருடுனே, நீயி, உன் வீட்ல இருக்கற எல்லாரையும் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவேன். இவங்க பாவப்பட்டு கேஸ் குடுக்கல, அதனால தப்பிச்சே. ஒழுக்கமா இருந்துக்கோ என்றபடி கிளம்பினார்.
காணாம போனதைத் தேடிக் கொண்டாந்து குடுத்தாத் திருட்டுப் பட்டம் கட்றாங்க என்று முணுமுணுத்தபடி கிளம்பியது அரிச்சந்திரன் பொண்டாட்டி.


Wednesday 13 October 2010

லட்சுமி கதை- பாகம் 3






ஊரெல்லாம் தேடு தேடுன்னு தேடி லட்சுமி கொண்டுவந்தது ATM கார்ட் இல்லிங்க, என்னோட கல்யாண பிளவுஸ் தெக்கக் குடுத்த டைலரோட இங்கிலீஸ் விசிடிங் கார்ட். அதுவும் என்ன கதையோட வந்துச்சுன்னு கேளுங்க..

நானும் குப்ப மேடே பூரா தேடீட்டனுங், கறுப்புப் பர்ஸ் ஒண்ணுமே காணங்(எப்ப சொன்னோம் பர்ஸ் கருப்புன்னு?), இருட்டு வேற ஆனதால டார்ச் வெச்சுத் தேடினா எல்லாரும் என்ன என்னன்னு கேக்கறாங், குப்பைல கெடந்தாலும் வேற யாராச்சும் எடுத்துட்டுப் போய்ட்டாங்கன்னா? (யாராச்சும்? எப்புடியெல்லாம் யோசிக்காறாங்க பாருங்க!). ரொம்பத் தேடினதுல இந்த கார்டு மட்டும் இருந்துதுங் (அந்த கார்டு வெச்சு நான் வெளிநாடு போக முடியும்ன்னு நெனச்சிடுச்சு)- எப்படி?

ஆனாலும் பர்சுல இருந்த எல்லாமே வரணுமே ! அதுவும் இல்லாம பிரபுவோடதும் திருப்பிக் குடுக்கணும். சரி, லட்சுமி போற ரூட்டுலையே போக வேண்டியதுதான்...லட்சுமியக்கா இது என்னோட பர்சுல இருந்தது தான், இதே மாதிரி சைசுல மத்த வெளிநாடு போற கார்டு இருக்கும், என்னோட போட்டோ கூட அதுல ஒட்டியிருக்குமக்கா. இன்னும் கொஞ்சம் கூடத் தேடித் பாருங்க மறுபடியும் ரீலு விட்டேன்.

லட்சுமியோட அறிவுக்கு எட்டின அளவுக்கு மத்த கார்டுல எதோ ஒன்னு தான் எனக்கு முக்கியமாத் தேவைன்னு புரிஞ்சுது; ஆனா அது எதுன்னு தான் புரியல. இந்தத் தடவை தேடிக்(?) கொண்டு வந்தது என்னோட ஒரு ATM கார்டு-கண்ண்டபடி மடக்கி கால்ல போட்டு மிதிச்சது, சாணி அப்பின Globus Membership கார்டு, அப்புறம் PAN கார்டு (அதுல தான் போட்டோ இருக்கே). இதெல்லாம் யாரோ குப்பையில போட்டாங்களாம், நாங்க நம்பனுமாம்? டைலாக் என்னன்னு சொல்லலையே? என்ற பையனும் வந்து தேடித் பாத்தான், அவன் கையிக்கு இதெல்லாம் சிக்குச்சுங். ஆனா அந்த சாமிக்கே பொறுக்காது, இப்படிப் பண்ணிப் போட்டானே. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு.

பண்ற திருட்டையும் பண்ணிட்டு கார்ட மடக்கிக் குடுத்தா எப்படியிருக்கும்? எனக்கு ஆத்திர ஆத்திரமா வந்துச்சு. மவளே, உனக்கு இன்னிக்கு இருக்குடீ ஆப்புன்னு பல்ல வெறுவீட்டு திட்டறதுக்கு வாயத் தொறந்தேன்; எங்கப்பா என்னை அப்போதைக்குத் பேசாம இருன்னுட்டார்.. இந்நேரத்துக்கு போலீசைக் கூப்பிடவும் முடியாது, மிச்ச கார்டையும் ஒரேயடியாகக் கேட்டா புரிஞ்சு போயி குறுக்க திரும்பீருவா, காலைல வரைக்கும் விட்டுப் பிடிப்போம்ன்னு என்னை சமாதானப் படுத்திட்டு லட்சுமி கிட்ட,
லட்சுமி, இதுவும் இல்ல, வேற கார்டு. பர்சத் தூக்கிட்டுப் போன நாயி (தப்பேயில்லை) வேற குப்பத் தொட்டியில கூடப் போட்டிருக்கும். நீ டார்ச்ச எடுத்துட்டுப் போ; நாளைக்குக் காலைல நல்லாத் தேடித் பாரு மறுபடியும். கண்டிப்பா எங்கியாச்சும் மத்ததெல்லாம் கெடக்கும் ன்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள நானும், அக்கா, உங்க கண்ணுக்குத் தான் ஆண்டவன் இதெல்லாம் காட்டி இருக்கான் பாருங்க, நீங்க தெய்வமாட்ட எனக்கு (போடு படத்த); மத்ததெல்லாம் எப்படியாச்சும் தேடிக் குடுத்திருங்கக்கா.. பணம் போனாத் தொலையுது போங்க (ரிப்பீட்டேய்) அந்த கார்டெல்லாம் மட்டும் கண்டுபுடிங்கக்கா அப்படீன்னேன்.

லட்சுமியக்கா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனமாதிரி தெரிஞ்சுது. சரி பாப்பா, நான் நாளைக்குக் காலைல எப்படியாச்சும் தேடிக் கண்டுபுடிச்சுக் கொண்டுவர்றேன்னு சொல்லிட்டு ஜாலியா வீட்டுக்குக் கிளம்பிருச்சு.
      
                               (அடுத்த பாகத்தில் முடியும்)





Sunday 10 October 2010

லட்சுமி கதை- பாகம் 2

பாகம் -1

ரெண்டு பேரோட பர்சும் காணாம போயிடுச்சுன்னு சொன்னா அப்பா நல்லாக் கொஞ்சுவாரு ; இருந்தாலும் திருட்டாச்சே, சொல்லித் தானே ஆகணும். என்னோட பர்சுல லைசென்ஸ், PAN கார்டு, ரெண்டு மூணு ATM கார்டு, ரெண்டு கிரெடிட் கார்டு, நாலஞ்சு ஷாப்பிங் கார்டு, பணம் ஒரு 2000 கிட்ட இருந்திச்சு. பிரபு பர்சுல லைசென்ஸ், ஒரு ATM கார்டு, அறுவது ரூபா பணம் இருந்திச்சு. விஷயத்த மெதுவா அப்பாகிட்ட சொல்லும்போதே அவருக்குத் தலைவலி கிலைவலி எல்லாம் பறந்துருச்சு. எல்லாரும் கெளம்பினதுக்கு அப்புறம் ஆரம்பிச்சாரு.

"சரி, யாரோ எடுத்திருக்காங்க ரெண்டையும், கண்டுபுடிக்கணும், ஆனா எல்லாரும் மண்டபத்துல தானே இருந்தோம்? இங்க யாராரு இருந்தா?"
"அம்மாயி, லட்சுமி. வேற யாரும் வரலீங்ப்பா  "
அப்பா லட்சுமியைக் கூப்பிட லட்சுமி அக்கா வந்தது. பிரபுவோட பர்சும் காணோம்ங்கறதச்  சொல்லாமையே கேட்டாரு,"லட்சுமி, தீபா பர்சக் காணமாம்; நல்லா யோசிச்சுச் சொல்லு, யாராச்சும் புதுசா வந்தாங்களா இங்க?"
"இல்லீங், நானும் அம்மாய்ங்களும் மட்டும் இருந்தமுங்; நாங்கூட ரூமெல்லாம் கூட்டிட்டு நீங்க வந்ததும் கெளம்பலாம்ன்னு இருந்தங்."

அம்மாவுக்கு லேசாக சந்தேகம் வந்துச்சு. ஏம்மா, நான்தான் எந்த வேலையும் ரெண்டு பேரும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லீட்டுப் போனனே, என்னத்துக்கு பெட்ரூம் கூட்டச் சொன்னேன்னு கேக்க , அம்மாயி சொல்லிச்சு, "நான் கூட்டவே வேண்டாம்ன்னு சொன்னேன், லட்சுமி கேக்கவே மாட்டீன்ட்டா ".நாங்க இல்லாதபோது ரூமக் கூட்டுனது, நாங்க இருக்கும்போது கீழ கெடந்த தோடு எடுத்துக் குடுத்தது-எல்லாமாச் சேந்து விஷயம் வெளங்கிச்சு எனக்கும் அப்பாவுக்கும். சரி தூண்டில்  போடுவோம்ன்னு ஆரம்பிச்சோம் லட்சுமி அக்கா கிட்ட.

"லட்சுமி, போயி நீயும் தேடு, நாங்களும் நல்லாத் தேடுறோம். வாசல்பக்கம் எங்கியாச்சும் கெடக்குதான்னு பாரு"ன்னுட்டு நாங்க லட்சுமி அக்காவைக் கவனிக்க ஆரம்பிச்சோம்.லட்சுமியும் தேடுவதைப் போல பாவலா காட்டுச்சு நல்லா.கொஞ்சம் கூட டென்ஷன் ஆகலை , சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்ன்னு மட்டும் சொல்லிட்டு நிறுத்திகிச்சு..

குட்டு வெளி வரதுக்கு எதாச்சும் க்ளு வேணுமே எங்களுக்கு? நான் ஆஸ்க்கார் ரேஞ்சுக்கு ஒரு அழுவாச்சி அழுதேன். "அக்கா, எனக்குப் பர்சு கூட முக்கியமில்ல, அதுல ஒரு கார்டு இருக்கும், அது இல்லீன்னா வெளிநாட்டுக்கு போகவே முடியாதக்கா, ஐயோ, நான் மாப்பிளைட்ட என்ன சொல்றது, நான் எப்புடி வெளிநாடு போறது" - பாஸ்போர்ட், ATM கார்டு  எல்லாம் அந்தக்காவுக்கு எதுவுமே தெரியாது. பர்சுல ஏதோ பணத்த விட முக்கியம்ன்னு மட்டும் புரிஞ்சுது.
"கண்ணு , யாரேடுத்தாங்கன்னே தெரிலயே பாப்பா, இத்தன முக்கியமா அதுல இருந்துச்சா சாமி" (தெரிஞ்சிருந்தா பணத்த மட்டும் எடுத்திருப்பனேன்னு லேசா பீலிங் தெரிஞ்சுது).ஆனா உண்மைய மட்டும் சொல்லல.

 அப்பா போன் எடுத்துப் பேச ஆரம்பிச்சாரு.
"பழனிச்சாமி, தீபா பர்சு திருடு போய்டிச்சு, என்ன பண்ணலாம்?"
" Beep, Beep, Beep" (ஹி ஹி , போன் தான் யாருக்குமே பண்ணலையே)
"ம்ம், அவுங்க அம்மாயி, அப்புறம் லட்சுமின்னு வேலைசெய்ய  வந்த பொண்ணு"
"Beep, Beep, Beep"
"ஆமாம், புது ஆளு லட்சுமி தான்"
"Beep Beep"
" லட்சுமி யாரும் புதுசா வரலேன்னு சொல்லுது"
 (மறுபடி மறுபடி லட்சுமியையே டார்கெட் செஞ்சாரு)
"சரி, அட்றஸ் தானே, வாங்கி வெக்கறேன், நீங்க ஒரு அரை மணி நேரத்துல வந்திருங்க"

அப்பா அம்மாயக் கூப்பிட்டு சும்மாச்சுக்கும் அட்ரஸ் எழுதிகிட்டார். லட்சுமியக்கா கிட்ட அட்ரஸ் சொல்லுன்னு கேட்டா,வீட்டுக்குப் போகணும், யாரோ வீட்டுக்குப் புது ஆளு வந்தா மாதிரி இருந்திச்சு  , நாஞ் சத்தியமாத் திருடலைங்க்ன்னு மாத்தி மாத்தி ஒளறிட்டே இருந்திச்சு. அப்பக் கூட தப்பிக்கலாம்ன்னு தான் பாத்துச்சே ஒழிய கொஞ்சங்கூட பயக்கல.

சரி நம்ம ஆஸ்கார கண்டின்யூ பண்ணுவம்ன்னு எச்சா அழுதேன், "அக்கா , எப்புடியாச்சும் கண்டுபுடிக்கனுமக்கா, பணம் போனாத் தொலையுது , அந்த கார்டு தான் வேணும், இல்லீன்னா ஆயுசுக்கும் என்னால வெளிநாடு போகமுடியாது ".திரும்பத் திரும்ப பணம் முக்கியமில்லை, கார்டு தான் முக்கியம்ன்னு சொல்லிட்டே இருந்தோம். சரி கார்டெல்லாம் தந்துடலாம்ன்னு முடிவு பண்ணினா , திருப்பித் தர்றதுக்கு வாய்ப்புக் குடுக்கணுமே?

"லட்சுமி,  நீ எடுத்திருக்க மாட்டே, ஆனா அந்தப் பக்கங்கீது  எங்காச்சும் குப்பை கூட்டும்போது கீழ விழுந்துருக்கும், போயித் தேடிப்பாரு" ன்னு சொல்லிட்டு நாங்க இந்தப் பக்கம் வந்துட்டோம்.
தேடறேன்னு சொல்லிட்டு குப்பைக் கூடையை கிளர்ற சத்தம் கேட்டுச்சு. அஞ்சு நிமிஷங்கழிச்சு இங்க இல்ல பாப்பான்னு குரல்.

அடுத்த அஸ்திரம்-மறுபடியும் அம்மாயி தான் பாவம்.
"இந்த அம்மாயி வயசாயிடிச்சு, எதுவும் பாக்கவே பாக்காது,  கீழ கெடக்கறது குப்பையா, இல்ல வாழைப்பழத் தோலான்னு கூடப் பாக்காம கூட்டித் தள்ளீரும், ஒரு வேளை வெளில குப்பைத் தொட்டிக்கு எங்கியாச்சும் போயிக் கொட்டியிருந்தா? லட்சுமி கொஞ்சம் போயிப் பாத்துட்டு வர்றியா?"
"எங்கீங்க இருட்டுல போயித் தேடறது, எனக்கு வேற ஊட்டுக்குப் போறக்கு நேரமாச்சுங்க" (மறுபடியும் 'சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்?')

கையில டார்ச் ஒன்னு குடுத்து லட்சுமியக்காவப் போயி வெளில தேடித் பாத்துட்டு வரச் சொன்னோம். போன அஞ்சாவது நிமிஷமே திரும்பி வந்துச்சு, கைல ஏதோ ஒரு கார்டக் கொண்டுட்டு.

Wednesday 6 October 2010

லட்சுமி கதை- பாகம் 1

கதைன்னு தலைப்புல போட்டிருந்தாலும் நான் சொல்லப் போறது கதை இல்லீங்க.. நிஜம்; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த மறக்க முடியாத சம்பவம். சவால் சிறுகதைப் போட்டிக்கு எல்லாம் நம்ம எது எழுதினாலும் படிக்காம கூடத் திரும்பி ஓடியாந்திடும்ங்கறதால மனசத் தேத்திகிட்டு இப்படி ஒரு பகிர்வு. தமாசு லேசா சீரியசு கலந்து கொஞ்சம் நீளங்கறதால ரெண்டு மூணு பாகமா எழுதலாம்ன்ட்டுங்க.

கதைல நான், என் தம்பி பிரபு , எங்கப்பா, அம்மாயி, பழனிச்சாமி போலீஸ்காரர் அப்படீன்னு நாலஞ்சு கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், கில்லாடி லட்சுமி தான் ஹீரோயின். லட்சுமி எங்க வீட்டுக்கு என்னோட கல்யாண சமயத்துல வேலை செய்ய வந்த ஒரு அக்கா. வயசு ஒரு 38 இருக்கும். சின்னவங்க எல்லாரயும் சாமின்னு தான் கூப்பிடும், என்னை பாப்பான்னு கொஞ்சம் பாசமா கூப்பிடும். 

என்னோட நிச்சயதார்த்தம் எங்க ஊர்ல ஒரு மண்டபத்துல நடந்ததால வீட்ல அம்மாயி கிட்ட அம்மாயி, நீயிரு, லட்சுமி வந்தா எந்த ரூமையும் தெறக்க வேண்டாம், மத்தியானமா வீட்டுக்கு யாராச்சும் வந்ததுக்கப்புறம் மண்டபத்துக்கு ரெண்டு பேரும் சாப்புட வந்துருங்கன்னு சொல்லிட்டு எல்லாரும் கெளம்பிட்டோம். நமக்கு சுண்ணாம்பு அடிச்சு, பொடவை எல்லாம் சுத்திட்டு, நகநட்டு பூட்டிகிட்டு மண்டபத்துக்குக் கெளம்புற அவசரத்துக்கு ஒரு கெரகமும் நெனப்புக்கு வரல; கெடக்கறதல்லாம் கெடக்கட்டும், பீரோவுல நகையெல்லாம் வெச்சு மட்டும் பூட்டிட்டு மத்ததெல்லாம் அப்புடியே போட்டுட்டு  ஓடியாச்சு.

நிச்சயமெல்லாம் முடிஞ்சு வேத்துவடிஞ்சாலும் நல்லா தின்னுட்டு மூணு மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தாச்சு அத்தைகூட்டத்தோட. அம்மாயி வரலன்னுட்டு வீட்டுக்கே சாப்பாடு குடுத்தும் விட்டாச்சு. எல்லாரும் டீ குடிச்சுகிட்டே பேசிகிட்டு இருந்தோம். லட்சுமி குப்பை கூட்டிகிட்டு இருந்திச்சு.

"அட லட்சுமீ , உன்னைய மண்டபத்துக்கு சாப்புடறதுக்கு வரச் சொன்னோமில்ல வர வேண்டீது தான?" -இது எங்கத்தை. 
"இல்லீங்க நான் அம்மாய்ங்க தனியா இருக்கறாங்கன்ட்டு வீட்டுக்கு போயி சாப்ட்டும் வந்து இங்கியே இருந்துட்டங். "
"அப்புடியா, செரி செரி"
கூட்டிகிட்டே இருக்கும்போது லட்சுமி என்னுடைய Imitation தோடு ஒன்ன கீழ கெடந்து  அத்தை கிட்ட எடுத்துக் கொடுத்திச்சு.
"பாருங், இது பாப்பளுதுங்களா, கீழ கெடந்துச்சுங்" 
"அட அஆம். அவ தான் இந்த மாரி போட்டுட்டுக் கெடப்பா" 

எனக்கு ஒன்னும் புரியல. இது டிரெஸ்ஸிங் டேபிள்ல ஒரு டப்பாவுல இல்ல இருந்திச்சு, நான் எடுக்கவே இல்லியே, எப்புடி ஒன்னு மட்டும் கீழ கெடக்குது.. நம்ம அவரசரக்குடுக்கை மட்டுமில்லாம மறதி மண்டையும் ஆச்சே..வேற எதையாச்சும் எடுக்கப் போயி இது விழுந்தாலும் விழுந்திருக்கும். லட்சுமி பரவா இல்ல போன்னுட்டு எல்லாரும் மறுபடி நாயத்துல முசுவா எறங்கிட்டோம். அதுக்குள்ள அப்பா அந்தப்பக்கமிருந்து கூப்பிட்டாரு. 

"எனக்கு ஒரு தலைவலி மாத்தர வாங்கிட்டு வரச் சொல்லு, பயங்கரமா வலிக்குது"
"பிரபு, போயி ஒரு மாத்தர வாங்கிட்டு வாடா"
"எங்கிட்ட சில்லறை இருக்காதுன்னு நெனைக்கறேன், உன்கிட்ட இருந்தாக் குடு"
என்னோட Walletல சில்லறை எடுக்கலாம்ன்னு ஹேன்ட் பேக்க தூக்கினா , பொங்குன்னு இருந்திச்சு பேக். இதென்னடா எப்பவும் வெயிட்டா இருக்கும் இப்ப கனமே இல்லியேன்னு  தெறந்தா உள்ள Wallet  இல்ல. சரி இங்க தான இருக்கும்ன்னு பீரோவுல, பெட்டிக்கு அடிய, அங்க இங்கன்னு அந்த ரூமுலயும் தேடிட்டேன், பக்கத்து ரூமுலயும் தேடிட்டேன். இருக்கற மாதிரி காணம். 

"டேய் பிரபு , என்னோட Wallet டக் காணம், அப்புறமா தேடனும், உன்கிட்ட சில்லறை இருக்கா பாருடா"

அந்தப் பொறுப்பாளி காலைல தான் ஊருக்கே வந்துச்சு.  குளிச்சுட்டு அவனோட 
Wallet -ட பான்ட் பாக்கட்டுலையே விட்டுட்டு அதையும் பாத்ரூமுலையே போட்டுட்டு மண்டபத்துக்கு வந்துடுச்சு.. சில்லறை கொண்டு வருவான்னு பாத்தா ஒரு பத்து நிமிஷம் ஆளக் காணோம். 

அப்புறம் வர்றான், "என்னோட பர்சையும் காணோம் டீ" ன்னுகிட்டு.


Tuesday 5 October 2010

சன் பிக்சர்ஸ் கில்லாடிகள்

நானும் எந்திரன் விமர்சனம் எழுதி உங்களை எல்லாம் 'எத்தன பேரு'ன்னு எரிச்சலாக்கற எண்ணம் எதுவும் இல்லீங்க; ஆதி அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தாரு(இங்கே). அதை ஆமோதிச்சுப் பின்னூட்டம் போடப் போயி இத்தனையும் எழுதிட்டேன்.

சன் பிக்சர்ஸ் மக்கள் 'எந்திரன்'-ன்னு ஒன்னொன்னையும் விளம்பரப்படுத்தறதும் காசாக்கறதும் இருக்கே, அடேயப்பா !! மத்த படத்துக்குப் போடறா மாதிரி திருப்பி திருப்பி வெறும் விளம்பரத்தைப் போட்டா வேற சேனல் மாத்தாம மக்கள் டிவியே ஆப் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சு போய்டிச்சு அவங்களுக்கு. ரஜினி, ஐஸ், ரஹ்மான் அவங்கெல்லாம்  படத்தப் பத்தி சொல்ற மாதிரி விளம்பரப்படுத்தறாங்க. இன்னா ப்ளானிங்கு,  இன்னா ப்ளானிங்கு !!  ஞாயித்துக்கிழமை போட்டிருந்தானே ஒரு நிகழ்ச்சி, 'எந்திரன் வெளியீட்டுக் கொண்டாட்டங்கள்'ன்னு. பாலபிஷேகங்கற கேணத்தனம் எப்பவும் நடக்கறது ; இப்போ உடம்புல குத்தி தேரிழுக்கறதும், மொட்டை போட்டுக்கறதும், பச்சை குதிக்கறதும், பால்குடம் எடுக்கறதும்.. ஹ்ம் சொந்த மக, புருஷன்/பொண்டாட்டி, அப்பா/அம்மாவுக்காக இப்படி என்னிக்காச்சும் வேண்டியிருக்காங்களா? பார்க்கப் பார்க்க கோபம், எரிச்சல் தான் வந்துச்சு. எல்லாம் சரி, நிகழ்ச்சி முடியும்போது ரெண்டு லைன் போட்டாங்களே !! "நீங்களும் எந்திரனை கொண்டாடி விட்டீர்களா?  இது போல் கொண்டாட்டங்கள் இருந்தால் , DVD அனுப்பவும்"ன்னு. அடப்பாவிகளா, மிச்சமிருக்கற மக்களையும் சட்டையக் கிழிச்சுட்டுத் திரியச் சொல்றீங்களாடான்னு நெனச்சேன்.

ஆதி அவர்கள் சொன்னபடி //குறைந்த பட்சம் ‘நான், கடவுள் அல்ல, என் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்ற நான்சென்ஸுகளையாவது கைவிடுங்கள்’ என ஒரு அறிக்கை விடலாம்தான்// மனிதநேயமிக்க ஒவ்வொருவரின் எண்ணமும் இதுவே !! அதக்கூடவா ரஜினி செய்ய மாட்டாரு?

இத்தோட நம்மள எல்லாம் விட்டுட்டா எப்படி? இன்னும் வரும்.. "எந்திரன் படப்பிடிப்புக் காட்சிகள்", "எந்திரன் பாடல்கள் உருவான விதம்", "எந்திரன் சந்தித்த சோதனைகள்", "எந்திரன்-நடிகர்கள் பார்வையில்", "எந்திரன் பற்றி ஹாலிவுட் நடிகர்கள்" , "எந்திரன்- தொழில்நுட்பம்",  "எந்திரன்-100 வது நாள்", "எந்திரன்-250 வது நாள்", "எந்திரன்-366 வது நாள்", "எந்திரன்-500 வது நாள்" --இருங்க கொஞ்சம்  தண்ணியக் குடிக்கறேன்.

சாமீ இதெல்லாம் எந்திரனப் பாத்துட்டு எழுதுனது இல்லீங்க; படத்துக்கு சம்மந்தம் இருந்தாலும் நடக்கற விஷயங்கள்ல இவங்களுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் மனசாட்சிக்கே தப்புன்னு தோணாதாங்கற ஆதங்கம், வேறொன்னும் இல்லீங்க.

ஹ்ம்ம்.. என்ன பேசி என்ன? என்னை யாரும் எந்திரன் பாக்கக் கூட்டிட்டுப் போக மாட்டீங்கறான்களே !!
ஹ்ம்ம்..

Thursday 1 July 2010

உன்னக் கொல்லாம விட மாட்டேன் ...

UK Visa... இதுக்கும் நமக்கும் (எனக்குங்க ! ) எப்பவுமே ஏழாம் பொருத்தந்தான். அந்த நாட்டுக்கு போவோம்ன்னு முடிவு பண்ணின நாள்ல இருந்து இன்னிக்கு, இந்த நிமிஷம் வரைக்கும் எப்ப அப்ளை பண்ணினாலும், எனக்காக யாரு அப்ளை பண்ணினாலும் எந்த தடங்களும் இல்லாம முடிஞ்சதே இல்லீங்க !! ராசி, கீசில எல்லாம் எப்பவும் நம்பிக்கை இருந்ததில்லைன்னாலும், ஒவ்வொரு தடவையும் எதாச்சும் நடந்ததுக்கு அப்புறம் யோசிச்சு பாத்தா செம காமடியாவும் ஒரு பாடம் கெடைக்கும்படியும் இருக்கும். ஒன்னு விடாம மெனக்கெட்டு நாப்பத்தஞ்சு பவுண்டு செலவு பண்ணி எல்லா டாக்குமெண்டும் அனுப்பி வெப்போம், அந்தப் புண்ணியவானுங்க லைட்டா அதுல எதாச்சும் லொள்ளு பண்ணுவாங்க.

அப்பாவுக்கு விசா வாங்க சென்னை போனாங்க தம்பியும் அப்பாவும். எல்லாம் பக்காவா இருக்கு.. ஆனாலும் விசா ஆபீஸ் உள்ள போன வேகத்துலேயே அப்பா வெளில வந்துட்டாரு. 

இன்னிக்கு காத்தால நாலு மணி..
போன் அடிக்குது, தூங்கிட்டு இருக்கற நான் அரக்க பறக்க எடுத்து மறுபடி கூப்பிடறேன்னு சொல்லி வெச்சேன்.. அட பரவா இல்லையே, இந்நேரத்துக்கே அப்பா விசா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் குடுத்துட்டு வெளில வந்துட்டாங்களேன்னு நெனச்சுட்டே திருப்பி கூப்பிடறேன்..தம்பி !!

'சொல்லுடா, அதுக்குள்ள முடிச்சுட்டீங்களா, சூப்பர்டா. நான் பயந்துட்டே இருந்தேன், வழக்கம் போல எதாச்சும் சொதப்பிடுமோன்னு.. முடிஞ்சுதுல்ல, போயி சாப்ட்டுட்டு வாங்க மொதல்ல'

'இருடி, என்னப்  பேசவே உட மாட்டியா? மச்சானோட பாஸ்போர்ட், விசா  காப்பி மட்டும் பத்தாதாம், உன்னுதும் வேணுமாம். நான் பிரௌசிங் செண்டர்ல தாண்டி இருக்கேன், இப்பவே அனுப்பு, அனுப்பீட்டுப் போயி தூங்குடி. சீக்கிரம் அனுப்பு'

இப்ப என் முறை ..'இருடா, என்னப் பேசவே உட மாட்டியா? என்னோட விசா காப்பி எங்கிருக்குன்னு பாத்து அனுப்பறேன். அஞ்சு நிமிஷம் இரு, பறக்காதே; அதுதான் மூணு மணி வரைக்கும் டைம் இருக்கே ! '

கிழிஞ்சுது போ, இந்த தடவையுமா?ன்னு நெனச்சுட்டே மேலோட்டமாத் தேடித் பாத்தேன் . என்னோட பாஸ்போர்ட் எப்படியும் ஸ்கேன் பண்ணி வெச்சிருக்கேன், ஆனா விசா காப்பி எதுவும் இருக்கறா மாதிரி இல்ல. மறுபடி கொஞ்சம் சீரியஸா தேடித் பாத்தேன்.. அய்யய்யோ, இல்லையே ! இப்பத் தான் ஓங்கி ஒரு அறை விட்டா மாதிரி தூக்கம்  தெளியுது. மறுபடியும் தம்பிக்கு போன் பண்ணி, 

"டே ஒரு அரை மணி நேரம்டா, தேடித் பாத்துட்டு இருக்கேன், மறுபடி கூப்பிடறேன்."

மணி 5
வேற வழி இல்ல, ரங்கமணிய  எழுப்பித்தான் ஆகணும் (வாங்கிக்கட்டிக்கறதுக்குத் தான் எவ்ளோ ஆசை !!).ரெண்டு பேருமா சேர்ந்து தேடினோம், தேடினோம், தேடிட்டே இருக்கோம்.. நானும் வர்றேன்னு குட்டிப் பையன் வேற எந்திரிச்சு, அவன் பங்குக்கு ரெண்டு மூணு பேப்பர் கிழிச்சுப்போட்டான். அவன சம்மதானப்படுத்தலாம்ன்னா, ஒரே அழுகை. ஸ்ஸ்ஸ், அப்பா ...

"சரி ஜெராக்ஸ் இல்லேன்னா பரவாயில்ல, பாஸ்போர்ட் எடு, ஸ்கேன் பண்ணி அனுப்பிருவோம்"
(பாஸ்போர்ட் இருந்தா மொதல்லயே ஸ்கேன் பண்ணியிருக்க மாட்டோமா?) 

"பாஸ்போர்ட் இப்போ என்கிட்டே இல்லங்க. டிரைவிங் லைசென்ஸ் அப்ளிகேஷன் கூட வெச்சு அனுப்பியிருக்கேனே!!"

ப்ப்ப்ப் ...ப்யூஸ்

ட்ரிங் ங் ங் ங் ங் ங்

"என்னடி நான் எவ்ளோ நேரம் பிரௌசிங் சென்டர்ல உக்காந்துட்டு இருக்கறது?"

"இல்லடா, நீங்க ரூமுக்கு போங்க, நானே கூப்புடறேன்"

மணி 6
ஊர்ல தேடசொல்லுவோம்ன்னா, அம்மா வீட்ட இன்டெக்ஸ் பண்ணி வெச்ச கணக்கா சீக்கிரம் எடுத்துருவாங்க போ ன்னு நெனச்சிட்டு, 
ட்ரிங் ட்ரிங்...
"என்ன சொல்லு"
"மா என்னோட விசா ஜெராக்ஸ் இருக்கான்னு தேடும்மா"
"உனக்கு பொழப்பே இல்லையா, எப்பப் பாரு இதே வேலைதான்"
"மா மா கொஞ்சம் பாரும்மா"
"இங்க இல்ல போ.."
"மா அந்த ப்ளூ பைல் ல?"
"பைலே இல்ல இங்க !!"

ட்ட்டட்ட்......டமால் !!

மணி 7
"ஏங்க, letting agency ல என்னோட விசா காப்பி ஒன்னு குடுத்தோம்ன்னு நெனைக்கிறேன்"
"ஏழு மணிக்கு எவன் அங்க உக்காந்திருக்கப் போறான் உனக்கு? எட்டரைக்குத் தான் வருவான்"
"கொஞ்சம் தேடுங்க அந்த ரூம்ல எதாச்சும் கவர்ல இருக்கும்"
..நற நற..

மணி 8
"ஹாஸ்பிடல் ரிசெப்ஷன் திறந்திருப்பாங்க, ரெஜிஸ்டர் பண்ணும்போது விசா காப்பி குடுத்ததா ஞாபகம் .. அங்க போன் பண்ணி கேட்டா?"
"சரி கேளு"
அரை மணி நேரம் அங்கேயும் தொங்கு தொங்குனு தொங்கிட்டு..
"இல்லேங்க, அங்கயும் இல்லையாமா...."

 புஸ்ஸ்ஸ்ஸ்...

மணி 8.30
டிரைவிங் லைசன்சுக்கு அனுப்பி வெச்ச பாஸ்போர்ட் அந்த 'ஆப்'பீசுக்கு போயிருக்குமே, அவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி ஒரு காப்பி ஸ்கேன் பண்ணி அனுப்ப சொல்லுவோம்னு யோசிச்சு(மூளை எப்புடி கவுட்டி கவுட்டியா வேலை செய்யுது பாருங்க ), ரங்கமணிக்கு சொல்லாம அலுங்காம ஒரு போன் அவங்களுக்கு.
Your application reference number please...
"____________"
"We have not received your application yet"

நாசமாப் போச்சு !!


மணி 9 
நேரமாச்சு நேரமாச்சு Letting Agency தெறந்திருப்பான்
ஹலோ
(லெட்டிங் ஏஜென்சி விளம்பரம் ஓடுகிறது)

4 நிமிடங்களுக்குப் பிறகு ..
ஹலோ..
(லெட்டிங் ஏஜென்சி விளம்பரம் ஓடுகிறது)
ம்ஹூம், இது வேலைக்காவாது, நான் நேர்ல போயி பாத்துட்டு வர்றேங்க. குட்டியையும் கூட்டிட்டுப் போறேன் 
ரங்கமணி கூவுகிறார், 'இங்க பாரு ஆய் போயி வெச்சுட்டான் '

அடங்கப்பா , நீயுமா? கண்ணக் கட்...டி..ருச்சே !!

9.30 , லெட்டிங் ஏஜென்சி 
அங்க கேட்டா, இல்லைன்னு பதில் வருது. கண்டிப்பாக இங்க இருக்கணுமே, இந்த வீட்டுக்கு மாறும்போது எத வெச்சு சாமி என்னை நம்ம்ம்பி குடுத்தே? நொந்துகிட்டே நானே அவனோட பைல் வாங்கி தேடித் பாத்தேன். அப்புறம் அவன் என்னக் கேட்டான், போட்டோ ஒட்டி இருக்குமான்னு; ஆமா ஆமா ...ஆஹா, மகராசா அதே தான், எடுத்துட்டு வாப்பான்னேன். கொண்டு வந்து குடுத்தான்,மடிச்சு இருந்திச்சு. 

பாருங்க, நான் அப்பவே சொன்னேன்ல இங்க கண்டிப்பா இருக்கும்ன்னு. 

பிரிச்சுப் பாத்தா, என்னோடதில்ல, ரங்கமணியோட விசா காப்பி ! 
பனால்..யாராச்சும் காப்பாத்துங்களேன் !! 
இருங்க இன்னும் முடியல..

மணி : இந்தூரு நேரம் முக்கியமில்லை , இந்திய நேரம்: விசா ஆபீஸ் முடிய இன்னும் அரை மணி நேரம் 
கடைசி நம்பிக்கை, HSBC-ல கேட்டுப் பாப்போங்க, வெச்சிருந்தா நல்லது, வெச்சிருக்காட்டி ரொம்ப நல்லது, இருந்தா வாங்கிப்போம், இல்லேன்னா அப்பாவக் கெளம்ப சொல்லுவோம் (நான் பேசலை ஆறு மணி நேரத்து நீதி பேசுது )
அங்க போன உடனே வங்கி ஊழியர் ஒரு பொண்ணு என்கிட்டே வந்து என்ன வேணும்ன்னு கேட்டுச்சு -இப்படியெல்லாம் 'உடனே' எதுவும் நடக்காதான்னு நெனச்சுட்டே உக்காந்தேன். நீங்க வேற, நமக்குத்தான் இன்னிக்கு எல்லாமே எழரையாச்சே, உடனே வந்துட்டாலும் !! அந்தப் பொண்ணு வேற ஒரு கஸ்டமர பாத்துட்டு மெ.....துவா என் பக்கம் வந்த போது...

...கடவுளுக்கு இவ பாவம்ன்னு தோணுன இந்திய நேரம் மதியம் 2:45
அந்தப் பொண்ணு கிட்ட நான் என்னோட விசா காப்பி உங்க பைல்ல இருக்கான்னு பாத்து சொல்றீங்களான்னு கேக்க, அந்தப் பொண்ணுக்கு சந்தேகம். உன்னோட பாஸ்போர்ட் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சிருச்சு. ஒரு நிமிஷம் நான் வாசலைப் பாத்தேன், அவசரத்துல மாறி போலீஸ் ஸ்டேஷன் வந்துட்டமான்னு நெனச்சுட்டே என்சோகக் கதைய சொன்னேன். என்ன தோணிச்சோ என்னம்மோ, என்னோட டெபிட் கார்ட் வாங்கி கடக்கு முடக்குன்னு என்னம்மோ கம்ப்யூட்டர்ல தட்டிச்சு, சொய்ங்-என்னோட விசா பிரிண்ட் ஆகிருச்சு !!

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஒடுஒடு

அலோ, அப்பா நான் விசா வாங்கிட்டேன் (என்னம்மோ மொதல் தடவை வாங்கின மாதிரி) இப்பவே ஸ்கேன் பண்ணி ஈமெயில் பண்றேன், பிரிண்ட் எடுத்து குடுத்துடுங்க ...

"இன்னும் அஞ்சே நிமிஷம் தான இருக்கு"

தோ தோ, அனுபிட்டே இருக்கேன்..
வீட்டுக்குப் போனா நேரமாகும்ன்னு, வழியில டீக்கட ஒண்ணுல பூந்து(இந்த ஊரு டீக்கடைல அதுக்கெல்லாம் வசதி இருக்கு பாருங்க !!) ஸ்கேன் பண்ணி அனுப்பியாச்!! அப்பாஆஆஆஆஆடி. எங்கப்பா மூளைக்காரர் !! ஆபீஸ் மூடினா தானே உள்ள போக உட மாட்டாங்க, உள்ளயே நின்னுகிட்டா? ஏற்கனவே பிரௌசிங் சென்டர்ல இருந்த என் தம்பி கில்லி மாதிரி பிரிண்ட் எடுத்து அப்பாகிட்ட குடுத்துட்டான்.. 

சர்ரியா, மூணு மணி .. 
அப்பா தேவையான எல்லா டாக்குமெண்டுகளையும் எடுத்துட்டு உள்ள போயி ஆபீஸ்ல குடுத்துட்டார்.

ஒரு பாஸ்போர்ட்டை அனுப்பிட்டு நான் படும் பாடு இருக்கிறதே !! தூது வந்த புறாவை வறுத்துத் தின்ற புலிகேசிய விட மகா மட்டமா இருக்குங்க !! எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து பொறுமையா, என்னோட சுட்டு விரல என்னையே பாத்து நீட்டி கேட்டேன்..
"டிரைவிங் லைசென்ஸ் உனக்கு தேவையா?"


டிஸ்கி: இத்தன ட்ராஜெடி இருந்திச்சே என் கதைல, யாரக் கொல்லப் போறேன்னு கேக்கறீங்களா? இன்னிக்கு காலைல இருந்து மதியானத்து வரைக்கும் இருந்த பரபரப்பு, கோபம், ஆத்திரம், இதுக்கெல்லாம் கொலைவெறியோட யாரையாச்சும் "உன்னக் கொல்லாம விட மாட்டேன்" ன்னு சொல்லிட்டே தொரத்தனும் போல இருந்திச்சு,  அதனால தாங்க .. .. ஹி ஹி...


Sunday 20 June 2010

என்னவனே..



காதோரம் கற்றைமுடி
சிலுப்பிவிட்டு சில்மிஷிக்க
பனியெடுத்து பரவவிட்டு
இதயம் தேடிய ஈரக்காற்று
கவிதை நிரப்பி
காதல் கிளப்பி
சுடுகாத்தாய் சென்றது

கண் பார்த்து
கை கோர்த்து
கணம் பொறுக்க
மனம் மறுக்க
இதழ் துடிக்க
இமை நெருங்க

உதடுகளின் ஈரம்
உயிர்வரை ஏறும் 
மறந்து போய் விழித்தால்
மஞ்சம்தனில் நான் 
வந்தாய் சொல்லாமலே
சென்றாய் நில்லாமலே 
என்னவனே நீ யார் !

Wednesday 9 June 2010

அழுத்தக்காரி

என்னை பார்க்கும்போதெல்லாம்
வேகம் குறைக்கும் கால்கள்
ஒளிந்து பார்க்கும் கண்கள்
கோர்க்கத் துடிக்கும் கைகள்
பிய்த்து எறியும் பாதி நகம்
கீழே விழும் கூந்தல் ரோஜா
தலை கோதும் தாவணி நுனி
எனக்குப் பிடித்த கொலுசு
உனக்கான  ஒவ்வொன்றும்
எனக்கான காதலை
சொல்லாமல் சொல்கையில்
உன் உதடுகள் மட்டும்
இன்னும் ஏன்..


....சொல்லாமலே சென்றுவிட்டாய்
என் காத்திருப்பில்
நம்பிக்கை வைத்து;
ஐந்து வருடம் கழித்து
அதே சந்தில் பார்த்து
வேகம் கூட்டி
பக்கமே பாராமல்
நடுங்கும் விரல்கள்
வெண்ணிற புடவை
வெறும் நெற்றி
வெடித்த பாதம்

நடந்ததே நடந்தது
எல்லாமே எதிர்மறையாய்
அவள் மௌனம் மட்டும் மாறாமல்
இன்னும் என்னைக் கொன்றுகொண்டும்
விதியின் வழியில் சென்றுகொண்டும்!

Thursday 27 May 2010

இவர்கள் தான் "மாம்" "டாட்"

குழந்தைகள் பெறுவதற்கு முன் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. தந்தையென தாயென ஆனபின்பு அத்தனையும், அதற்கும் மேலும் நன்றாய் புரிகின்றது. முன்பெல்லாம் வழியில் பார்க்கின்ற எந்த குழந்தையாவது அழுது கொண்டிருந்தால் 'அடடா அழுகிறதே பாப்பா'வோடு கவலை முடிகிறது ; இதே பின்னாளில் மனம் பதறுகிறது, ஓடிச் சென்று பார்க்க துடிக்கிறது; வாரி எடுத்துத் தேற்ற அலைகின்றது.

குசும்பன் அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார், தொட்டில் கைதி------no குசும்பு என்று! அதன் மீட்சியாகவோ இல்லை நீட்சியாகவோ இந்த என் அனுபவத்தை சொல்லலாம்;
.
கார்முகிலுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வகுப்புகள் இருக்கும். அதில் ஒன்று எல்லாரும் தத்தமது குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு பழக விட்டு, கடைசியில் கிளம்பும்போது ரைம்ஸ் பாடி முடிப்பது. இன்று மேற்குறிப்பிட்ட அந்த வகுப்பு இருந்தது. முதல் ஒரு மணி நேரம் எல்லா குழந்தைகளும் மழலைகூட இல்லாத ஒரு சத்தங்களில் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், இழுத்துக்கொண்டும், தவழ்ந்து கொண்டும், விழுந்துகொண்டும் மகிழ்வாய் விளையாடிக்கொண்டு இருந்தனர். திடீரென ஒரு குழந்தை என் துப்பட்டாவை பிடித்து இழுத்து, வாயில் வைக்கப் போனது.  அப்போது அதன் அம்மா சடாரென பிடித்து அந்த குழந்தையை இழுத்துக் கோபத்தோடு "No, its hers" என்று சொன்னாள். அந்த ஏழு மாதக் குழந்தைக்குத் தெரியுமா, அது என்னுடைய துப்பட்டா என்று?  ஒழுக்கம் கற்றுக்கொடுங்கள், ஆனால் இப்போதிருந்தே வேண்டாமே! வருடங்கள் ஓடுகையில் தானாகவே சேட்டைகள் தொலைக்கட்டுமே, நாம் ஏன் அடக்க வேண்டும்?

இன்னொரு குழந்தை மற்றொரு குழந்தையின் கையைக் கிள்ள முயன்று கொண்டிருந்தது. நான் பிரித்து விடலாம் என்று முற்படுகையில் திடீரென அந்த குழந்தையின் அம்மா அதன் சட்டையை பின்னாலிருந்து கொத்தாகப் பற்றி அப்படியே தூக்கி வேறிடத்தில் கொண்டு விட்டாள். "Oh Emiley, your mom turned you as a flying girl" என்று பாராட்டுக்கள் வேறு!! என்ன கொடுமைடா சாமி!! இப்படி நம் ஊரில் செய்தால் "சீ நீயும் ஒரு தாயா" என்று தான் 'பாராட்டுக்கள்' வரும்.

எரிச்சலோடு வகுப்பு முடித்து வெளியில் வந்தால், உச்சமோ உச்சம். அங்கு ஒரு 'dad' ஸ்ட்ரோலரில்(குழந்தைகளை உக்கார வைத்து தள்ளும் வண்டி) இரண்டு குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு இருந்தார். ஒன்று வீரிட்டு கத்துகிறது, பலமாக அழுதுகொண்டே இருக்கிறது; அழும் குழந்தையைக் கையில்  எடுக்காமலேயே அந்தப் பாவி முன்னும் பின்னும் வண்டியை தள்ளிக்கொண்டு இருந்தான். ஒரு நிமிடம் இரண்டு நிமிடங்களல்ல, அரை மணி நேரம். எனக்கு நெஞ்செல்லாம் பதறியது, எந்த பொருளும் வாங்க முடியாமல் கவனம் முழுதும் எப்போது அழுகையை நிறுத்தும் என்றே இருக்கிறது.  ஓங்கி ஒரு அறை அவனை விட்டாலென்ன என்று கூட கோபம் எழுந்தது. அழுது அழுது ஓய்ந்து கடைசியில் அந்தக் குழந்தை தூங்கியே விட்டது. நமக்கு இருக்கும் அந்த பரிதவிப்பு, அந்த அரவணைப்பு இவர்களிடம் ஏன் இல்லை? என்ன சொல்லித் தருகிறார்கள் குழந்தைகளுக்கு? சத்தியமாய் புரியவில்லை.

நம் மக்களைப் பொறுத்தவரை குழந்தைக்கு அர்த்தம் குறும்பு என்று தான் தெரியும்; கடிந்து கொண்டாலும் கூட ரசிக்கத்தான் தெரியும்.இவர்களிடத்தும் பாசம் இருக்கிறது, ஆனால் அதை காண்பிக்கும் முறை நம்மைக் கொஞ்சம் அதிர்ச்சியடையத்தான் செய்கிறது.

Tuesday 25 May 2010

உச்சகட்ட "பொறுப்பு"

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் "பௌண்டரி"




"இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்"

Thursday 20 May 2010

வாழ்க்கையை சலித்துக்கொள்(ல்)பவர்களுக்கு...

எங்க அத்தை ஒருத்தங்க சொன்ன கதை இது ...

வண்டியில் போனவன் விமானத்தில் போறவனை பாத்து நெனச்சானாம், என்னடா நம்மால அப்படி போக முடியலையேன்னு ; அவன் முன்னாடி ஒருத்தன் நடந்து போய்கிட்டிருந்தானாம். வண்டியில போற அளவுக்காச்சும் கடவுள் வெச்சிருக்காரே பரவாயில்லைன்னு வேலைய பாக்க போனானாம். நடந்து போறவன் கார்ல போனவன பாத்து நெனச்சானாம், நமக்கு அப்படி முடியலையேன்னு ; அப்போ காலே இல்லாத ஒருத்தர் இன்னொருத்தர் உதவியோட ரோடு கிராஸ் பண்றத பாத்தானாம். நடந்து போற அளவுக்காச்சும் கடவுள் நம்மள வெச்சிருக்காரே சந்தோஷமப்பான்னு நெனச்சிட்டு போயிட்டானாம்.



இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு கடவுள் அருளிய வாழ்க்கை திருப்திகரமாகத் தோன்றியது; நல்லா இருந்தும் என்னத்த சாதிச்சு கிழிச்சிருக்கோம் என்றும் தோன்றியது.ஆனாலும் நிக் சொல்வது போல நானும் சொல்கிறேன், I Love my life.

பார்த்து முடித்தபின் நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்பது உறுதி !!

இதோ தொடங்கிவிட்டேன் நானும்...

இன்று நாளை
நாளை மறுநாள்
வாரக் கடைசியில் கண்டிப்பாய்
அடுத்த வாரம் நிச்சயமாய்

திரும்பிப் பார்த்தேன்
திரும்பாமலே காலம்
நாட்களாய் வாரமாய்
இறுதியில் வருடமாய்
பெரும்பாலும் வெறுமையாய்
ஓடியே போனது

சோம்பலே சொந்தமென்றுவிட்டு
கற்பனைத் திறனா
கொக்கலித்துவிட்டு
என்தமிழ் காதலை
திட்டித் தீர்த்துவிட்டு

வேலை அதிகம்
முகில் தூங்கலை
ரைம்ஸ் கிளாஸ்
தலைவலி சளி?

உச்சத்தின் உச்சமாய்
'நல்லா ஆரம்பிக்கனுமே'

எனக்கே பிடிக்கவில்லை
நானுரைக்கும் பொய்கள்
(கிழிக்கவே தொடங்கலை
அதற்குளொரு கவலை
கத்தி மொன்னைஎன்று  :-)

எதுவோ இன்று
உந்தியது என்று
தொடக்கத்தை தொடங்கினேன்
சிந்தித்த சிலதுகளை
சிரித்துவிட்ட பலதுகளை

வழுக்கிவிட்ட வெண்பனி
வெள்ளையர் காதல்
ஈஸ்ட்ஹேம் ஈஸ்வரர்
தீயத்துவிட்ட இட்லி
திமிர்பிடித்த பூனை
மிகரசித்த வீடியோ
மிகப்பிடித்த பொழுதுகள்
எழுதவா பொருளில்லை
அத்தனைக்கும் மேல்

இதோ என் கைகளில் 
'கார்முகில்'

கவிதைஎன்று
கவினுருவாய்
சிரித்துக்கொண்டு
சிறுமுத்தாய்
எழுதம்மா எழுது !!


எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உந்திய என் கார்முகில், எழுத்தாளர்கள் பரிசல், கார்க்கி, குசும்பன்,ஆதி, அப்துல்லா, அனுஜன்யா, நர்சிம், இன்னும் எனக்கு ஊற்று கொடுத்த  எனது அன்பிற்குரிய எழுத்தாளர்கள்  அனைவருக்கும் இந்த வலைப்பூ வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடனும் சமர்ப்பணம்.

இனி வரும் பதிவுகள் அனைத்தும் என் டைரியின் பக்கங்கள், எனக்கு நானே முதல் ரசிகையாய் !! (அலெர்ட் ஆகி ஓடிராதீங்க ப்ளீஸ் !!)