Wednesday, 6 October 2010

லட்சுமி கதை- பாகம் 1

கதைன்னு தலைப்புல போட்டிருந்தாலும் நான் சொல்லப் போறது கதை இல்லீங்க.. நிஜம்; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த மறக்க முடியாத சம்பவம். சவால் சிறுகதைப் போட்டிக்கு எல்லாம் நம்ம எது எழுதினாலும் படிக்காம கூடத் திரும்பி ஓடியாந்திடும்ங்கறதால மனசத் தேத்திகிட்டு இப்படி ஒரு பகிர்வு. தமாசு லேசா சீரியசு கலந்து கொஞ்சம் நீளங்கறதால ரெண்டு மூணு பாகமா எழுதலாம்ன்ட்டுங்க.

கதைல நான், என் தம்பி பிரபு , எங்கப்பா, அம்மாயி, பழனிச்சாமி போலீஸ்காரர் அப்படீன்னு நாலஞ்சு கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், கில்லாடி லட்சுமி தான் ஹீரோயின். லட்சுமி எங்க வீட்டுக்கு என்னோட கல்யாண சமயத்துல வேலை செய்ய வந்த ஒரு அக்கா. வயசு ஒரு 38 இருக்கும். சின்னவங்க எல்லாரயும் சாமின்னு தான் கூப்பிடும், என்னை பாப்பான்னு கொஞ்சம் பாசமா கூப்பிடும். 

என்னோட நிச்சயதார்த்தம் எங்க ஊர்ல ஒரு மண்டபத்துல நடந்ததால வீட்ல அம்மாயி கிட்ட அம்மாயி, நீயிரு, லட்சுமி வந்தா எந்த ரூமையும் தெறக்க வேண்டாம், மத்தியானமா வீட்டுக்கு யாராச்சும் வந்ததுக்கப்புறம் மண்டபத்துக்கு ரெண்டு பேரும் சாப்புட வந்துருங்கன்னு சொல்லிட்டு எல்லாரும் கெளம்பிட்டோம். நமக்கு சுண்ணாம்பு அடிச்சு, பொடவை எல்லாம் சுத்திட்டு, நகநட்டு பூட்டிகிட்டு மண்டபத்துக்குக் கெளம்புற அவசரத்துக்கு ஒரு கெரகமும் நெனப்புக்கு வரல; கெடக்கறதல்லாம் கெடக்கட்டும், பீரோவுல நகையெல்லாம் வெச்சு மட்டும் பூட்டிட்டு மத்ததெல்லாம் அப்புடியே போட்டுட்டு  ஓடியாச்சு.

நிச்சயமெல்லாம் முடிஞ்சு வேத்துவடிஞ்சாலும் நல்லா தின்னுட்டு மூணு மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தாச்சு அத்தைகூட்டத்தோட. அம்மாயி வரலன்னுட்டு வீட்டுக்கே சாப்பாடு குடுத்தும் விட்டாச்சு. எல்லாரும் டீ குடிச்சுகிட்டே பேசிகிட்டு இருந்தோம். லட்சுமி குப்பை கூட்டிகிட்டு இருந்திச்சு.

"அட லட்சுமீ , உன்னைய மண்டபத்துக்கு சாப்புடறதுக்கு வரச் சொன்னோமில்ல வர வேண்டீது தான?" -இது எங்கத்தை. 
"இல்லீங்க நான் அம்மாய்ங்க தனியா இருக்கறாங்கன்ட்டு வீட்டுக்கு போயி சாப்ட்டும் வந்து இங்கியே இருந்துட்டங். "
"அப்புடியா, செரி செரி"
கூட்டிகிட்டே இருக்கும்போது லட்சுமி என்னுடைய Imitation தோடு ஒன்ன கீழ கெடந்து  அத்தை கிட்ட எடுத்துக் கொடுத்திச்சு.
"பாருங், இது பாப்பளுதுங்களா, கீழ கெடந்துச்சுங்" 
"அட அஆம். அவ தான் இந்த மாரி போட்டுட்டுக் கெடப்பா" 

எனக்கு ஒன்னும் புரியல. இது டிரெஸ்ஸிங் டேபிள்ல ஒரு டப்பாவுல இல்ல இருந்திச்சு, நான் எடுக்கவே இல்லியே, எப்புடி ஒன்னு மட்டும் கீழ கெடக்குது.. நம்ம அவரசரக்குடுக்கை மட்டுமில்லாம மறதி மண்டையும் ஆச்சே..வேற எதையாச்சும் எடுக்கப் போயி இது விழுந்தாலும் விழுந்திருக்கும். லட்சுமி பரவா இல்ல போன்னுட்டு எல்லாரும் மறுபடி நாயத்துல முசுவா எறங்கிட்டோம். அதுக்குள்ள அப்பா அந்தப்பக்கமிருந்து கூப்பிட்டாரு. 

"எனக்கு ஒரு தலைவலி மாத்தர வாங்கிட்டு வரச் சொல்லு, பயங்கரமா வலிக்குது"
"பிரபு, போயி ஒரு மாத்தர வாங்கிட்டு வாடா"
"எங்கிட்ட சில்லறை இருக்காதுன்னு நெனைக்கறேன், உன்கிட்ட இருந்தாக் குடு"
என்னோட Walletல சில்லறை எடுக்கலாம்ன்னு ஹேன்ட் பேக்க தூக்கினா , பொங்குன்னு இருந்திச்சு பேக். இதென்னடா எப்பவும் வெயிட்டா இருக்கும் இப்ப கனமே இல்லியேன்னு  தெறந்தா உள்ள Wallet  இல்ல. சரி இங்க தான இருக்கும்ன்னு பீரோவுல, பெட்டிக்கு அடிய, அங்க இங்கன்னு அந்த ரூமுலயும் தேடிட்டேன், பக்கத்து ரூமுலயும் தேடிட்டேன். இருக்கற மாதிரி காணம். 

"டேய் பிரபு , என்னோட Wallet டக் காணம், அப்புறமா தேடனும், உன்கிட்ட சில்லறை இருக்கா பாருடா"

அந்தப் பொறுப்பாளி காலைல தான் ஊருக்கே வந்துச்சு.  குளிச்சுட்டு அவனோட 
Wallet -ட பான்ட் பாக்கட்டுலையே விட்டுட்டு அதையும் பாத்ரூமுலையே போட்டுட்டு மண்டபத்துக்கு வந்துடுச்சு.. சில்லறை கொண்டு வருவான்னு பாத்தா ஒரு பத்து நிமிஷம் ஆளக் காணோம். 

அப்புறம் வர்றான், "என்னோட பர்சையும் காணோம் டீ" ன்னுகிட்டு.


No comments:

Post a Comment

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......