பாகம் -1
ரெண்டு பேரோட பர்சும் காணாம போயிடுச்சுன்னு சொன்னா அப்பா நல்லாக் கொஞ்சுவாரு ; இருந்தாலும் திருட்டாச்சே, சொல்லித் தானே ஆகணும். என்னோட பர்சுல லைசென்ஸ், PAN கார்டு, ரெண்டு மூணு ATM கார்டு, ரெண்டு கிரெடிட் கார்டு, நாலஞ்சு ஷாப்பிங் கார்டு, பணம் ஒரு 2000 கிட்ட இருந்திச்சு. பிரபு பர்சுல லைசென்ஸ், ஒரு ATM கார்டு, அறுவது ரூபா பணம் இருந்திச்சு. விஷயத்த மெதுவா அப்பாகிட்ட சொல்லும்போதே அவருக்குத் தலைவலி கிலைவலி எல்லாம் பறந்துருச்சு. எல்லாரும் கெளம்பினதுக்கு அப்புறம் ஆரம்பிச்சாரு.
"சரி, யாரோ எடுத்திருக்காங்க ரெண்டையும், கண்டுபுடிக்கணும், ஆனா எல்லாரும் மண்டபத்துல தானே இருந்தோம்? இங்க யாராரு இருந்தா?"
"அம்மாயி, லட்சுமி. வேற யாரும் வரலீங்ப்பா "
அப்பா லட்சுமியைக் கூப்பிட லட்சுமி அக்கா வந்தது. பிரபுவோட பர்சும் காணோம்ங்கறதச் சொல்லாமையே கேட்டாரு,"லட்சுமி, தீபா பர்சக் காணமாம்; நல்லா யோசிச்சுச் சொல்லு, யாராச்சும் புதுசா வந்தாங்களா இங்க?"
"இல்லீங், நானும் அம்மாய்ங்களும் மட்டும் இருந்தமுங்; நாங்கூட ரூமெல்லாம் கூட்டிட்டு நீங்க வந்ததும் கெளம்பலாம்ன்னு இருந்தங்."
அம்மாவுக்கு லேசாக சந்தேகம் வந்துச்சு. ஏம்மா, நான்தான் எந்த வேலையும் ரெண்டு பேரும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லீட்டுப் போனனே, என்னத்துக்கு பெட்ரூம் கூட்டச் சொன்னேன்னு கேக்க , அம்மாயி சொல்லிச்சு, "நான் கூட்டவே வேண்டாம்ன்னு சொன்னேன், லட்சுமி கேக்கவே மாட்டீன்ட்டா ".நாங்க இல்லாதபோது ரூமக் கூட்டுனது, நாங்க இருக்கும்போது கீழ கெடந்த தோடு எடுத்துக் குடுத்தது-எல்லாமாச் சேந்து விஷயம் வெளங்கிச்சு எனக்கும் அப்பாவுக்கும். சரி தூண்டில் போடுவோம்ன்னு ஆரம்பிச்சோம் லட்சுமி அக்கா கிட்ட.
"லட்சுமி, போயி நீயும் தேடு, நாங்களும் நல்லாத் தேடுறோம். வாசல்பக்கம் எங்கியாச்சும் கெடக்குதான்னு பாரு"ன்னுட்டு நாங்க லட்சுமி அக்காவைக் கவனிக்க ஆரம்பிச்சோம்.லட்சுமியும் தேடுவதைப் போல பாவலா காட்டுச்சு நல்லா.கொஞ்சம் கூட டென்ஷன் ஆகலை , சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்ன்னு மட்டும் சொல்லிட்டு நிறுத்திகிச்சு..
குட்டு வெளி வரதுக்கு எதாச்சும் க்ளு வேணுமே எங்களுக்கு? நான் ஆஸ்க்கார் ரேஞ்சுக்கு ஒரு அழுவாச்சி அழுதேன். "அக்கா, எனக்குப் பர்சு கூட முக்கியமில்ல, அதுல ஒரு கார்டு இருக்கும், அது இல்லீன்னா வெளிநாட்டுக்கு போகவே முடியாதக்கா, ஐயோ, நான் மாப்பிளைட்ட என்ன சொல்றது, நான் எப்புடி வெளிநாடு போறது" - பாஸ்போர்ட், ATM கார்டு எல்லாம் அந்தக்காவுக்கு எதுவுமே தெரியாது. பர்சுல ஏதோ பணத்த விட முக்கியம்ன்னு மட்டும் புரிஞ்சுது.
"கண்ணு , யாரேடுத்தாங்கன்னே தெரிலயே பாப்பா, இத்தன முக்கியமா அதுல இருந்துச்சா சாமி" (தெரிஞ்சிருந்தா பணத்த மட்டும் எடுத்திருப்பனேன்னு லேசா பீலிங் தெரிஞ்சுது).ஆனா உண்மைய மட்டும் சொல்லல.
அப்பா போன் எடுத்துப் பேச ஆரம்பிச்சாரு.
"பழனிச்சாமி, தீபா பர்சு திருடு போய்டிச்சு, என்ன பண்ணலாம்?"
" Beep, Beep, Beep" (ஹி ஹி , போன் தான் யாருக்குமே பண்ணலையே)
"ம்ம், அவுங்க அம்மாயி, அப்புறம் லட்சுமின்னு வேலைசெய்ய வந்த பொண்ணு"
"Beep, Beep, Beep"
"ஆமாம், புது ஆளு லட்சுமி தான்"
"Beep Beep"
" லட்சுமி யாரும் புதுசா வரலேன்னு சொல்லுது"
(மறுபடி மறுபடி லட்சுமியையே டார்கெட் செஞ்சாரு)
"சரி, அட்றஸ் தானே, வாங்கி வெக்கறேன், நீங்க ஒரு அரை மணி நேரத்துல வந்திருங்க"
அப்பா அம்மாயக் கூப்பிட்டு சும்மாச்சுக்கும் அட்ரஸ் எழுதிகிட்டார். லட்சுமியக்கா கிட்ட அட்ரஸ் சொல்லுன்னு கேட்டா,வீட்டுக்குப் போகணும், யாரோ வீட்டுக்குப் புது ஆளு வந்தா மாதிரி இருந்திச்சு , நாஞ் சத்தியமாத் திருடலைங்க்ன்னு மாத்தி மாத்தி ஒளறிட்டே இருந்திச்சு. அப்பக் கூட தப்பிக்கலாம்ன்னு தான் பாத்துச்சே ஒழிய கொஞ்சங்கூட பயக்கல.
சரி நம்ம ஆஸ்கார கண்டின்யூ பண்ணுவம்ன்னு எச்சா அழுதேன், "அக்கா , எப்புடியாச்சும் கண்டுபுடிக்கனுமக்கா, பணம் போனாத் தொலையுது , அந்த கார்டு தான் வேணும், இல்லீன்னா ஆயுசுக்கும் என்னால வெளிநாடு போகமுடியாது ".திரும்பத் திரும்ப பணம் முக்கியமில்லை, கார்டு தான் முக்கியம்ன்னு சொல்லிட்டே இருந்தோம். சரி கார்டெல்லாம் தந்துடலாம்ன்னு முடிவு பண்ணினா , திருப்பித் தர்றதுக்கு வாய்ப்புக் குடுக்கணுமே?
"லட்சுமி, நீ எடுத்திருக்க மாட்டே, ஆனா அந்தப் பக்கங்கீது எங்காச்சும் குப்பை கூட்டும்போது கீழ விழுந்துருக்கும், போயித் தேடிப்பாரு" ன்னு சொல்லிட்டு நாங்க இந்தப் பக்கம் வந்துட்டோம்.
தேடறேன்னு சொல்லிட்டு குப்பைக் கூடையை கிளர்ற சத்தம் கேட்டுச்சு. அஞ்சு நிமிஷங்கழிச்சு இங்க இல்ல பாப்பான்னு குரல்.
அடுத்த அஸ்திரம்-மறுபடியும் அம்மாயி தான் பாவம்.
"இந்த அம்மாயி வயசாயிடிச்சு, எதுவும் பாக்கவே பாக்காது, கீழ கெடக்கறது குப்பையா, இல்ல வாழைப்பழத் தோலான்னு கூடப் பாக்காம கூட்டித் தள்ளீரும், ஒரு வேளை வெளில குப்பைத் தொட்டிக்கு எங்கியாச்சும் போயிக் கொட்டியிருந்தா? லட்சுமி கொஞ்சம் போயிப் பாத்துட்டு வர்றியா?"
"எங்கீங்க இருட்டுல போயித் தேடறது, எனக்கு வேற ஊட்டுக்குப் போறக்கு நேரமாச்சுங்க" (மறுபடியும் 'சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்?')
கையில டார்ச் ஒன்னு குடுத்து லட்சுமியக்காவப் போயி வெளில தேடித் பாத்துட்டு வரச் சொன்னோம். போன அஞ்சாவது நிமிஷமே திரும்பி வந்துச்சு, கைல ஏதோ ஒரு கார்டக் கொண்டுட்டு.
கதை சூப்பரா போகுது ... அப்படியே பிரபுவ படமா எடுக்க சொன்னா கூட நல்லா இருக்கும் . . கதை முடிவுக்கு waiting !
ReplyDelete@dj-haran
ReplyDeleteநன்றி. படமா? ஓ , எடுக்க சொல்லலாமே :) முடிவு நாளை அல்லது மறுநாள்.