Wednesday 31 March 2021

Menstrual Cup - கவலையில்லா உதிர நாட்கள்

Menstrual cup- மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின், துணி, டேம்ப்போன் போன்றவைகளுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்படும் சிலிகோனால் ஆன சிறு கப். இதைப்பற்றிய புரிந்துணர்வு சிலருக்குத் தேவைப்படலாம் என்பதால் இந்த விளக்கப்பதிவு. பெண்களே இதன் உபயோகிப்பாளர்களாக இருப்பதால், பின்வரும் முழுக்கட்டுரையும் அவர்களை நோக்கியதாகவே எழுதப்பட்டிருக்கும்.

மென்செஸ் கப் (Menstrual cup) என்றால் என்ன?

    அதிகபட்சமாக 30 மில்லி மட்டுமே இருக்கும் M-கப் , மாதவிடாய் நேரங்களில் சேனிட்டரி நேப்கின்களுக்கு மாற்றாக யோனிக்குழாய் மூலம் கர்ப்பப்பை வாய்க்கு நெருக்கமாகப் பொருத்தப்பட்டு கசிவைச் சேகரிக்கும். ஒவ்வொரு முறையும் கப்  நிரம்பியபின் (சராசரி 4-6 மணி நேரம்), அதை வெளியில் எடுத்து டாய்லெட்டில் ஊற்றிவிட்டு, கப்பை நீரால் சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.  அதாவது சேனிடரி நேப்கின், டேம்போன் போன்று ஒருமுறை உபயோகித்தபின் தூக்கி வீசும் அவசியம் இல்லாமல் குறைந்தபட்சம் 5 வருடங்கள் மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம். விலையும் ரூபாய் 300 முதல் 600 வரையே!

 எல்லாருக்கும் ஒரே அளவிலானதா?

      பெரும்பாலும் சிலிக்கோனால் செய்யப்படும் M-கப் , suction கொண்டு வேலை செய்கிறது. டீனேஜ் பெண்கள், தாம்பத்யத்தில் ஈடுபடாத அல்லது இயற்கை வழியில் பிரசவிக்காத 30 வயதின் கீழ் உள்ள பெண்களுக்கு S சைஸிலும், மற்றவர்களுக்கு மீடியம் சைஸிலும் கிடைக்கிறது. A , B என்ற அளவிலும் சில பிராண்டுகள் இருக்கும், உங்களுக்கு எது சரியானது என்று படித்துப்பார்த்து வாங்கலாம். எவ்வாறு பொருத்துவது, வெளியே எடுப்பது என்ற வழிமுறைகள் யூட்யூபில் காணலாம்.

 பொதுவான சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் பதில்கள்:

1) உள்ள போட்டு தொலைஞ்சிட்டா?

2) வெளில எடுக்க முடியாம போய்ட்டா?

3) நழுவி விழுந்துட்டா?

4) ரொம்பி வழிஞ்சுட்டா?

5) உள்ள குத்திட்டா?

 இப்படி பல 'ட்டா'க்களுக்கு ஒரே பதில் தான். கர்ப்பப்பை ஒன்றும் two-way road அல்ல, M-கப் ஒன்றும் அட்சயப் பாத்திரமும் இல்லை. இதைக் குறித்த ஆரம்ப மனத்தடைகளை உடைக்க ஒரே வழி உபயோகிக்கத் தொடங்குவது மட்டுமே! 2-3 மாதங்களில் சுலபமாகப் பழக முடியும், அதனால் பயமின்றி உங்கள் புதிய பயணத்தைத் தொடங்கலாம்.

 1. M-கப்பை மடக்கி உள்ளே வைக்க வேண்டும், உபயோகிக்கும் புதிதில் சரிவரப் பொருந்த 6-8 தடவை ஆகும்.

 2. சரியான பொசிஷனில் நின்று அல்லது அமர்ந்து (ஒரு கால் கீழே, ஒரு கால் மேலே உயரமான இடத்தில் ஊன்றி வைக்கலாம்) பொருத்தலாம். ஒரு அளவிற்கு மேல் உள்ளே திணிக்க முடியாது, கவலை வேண்டாம்.

 3. முதல் சில தடவைகள் 5 நிமிடங்கள் நேரம் எடுக்கும். அமைதியான, ரிலாக்ஸான மனநிலையை ஏற்படுத்தி, மெதுவாகப் பொருத்தவும். சரியாகபப் பொருந்தியுள்ளதா என்று லேசாக இழுத்துப்பாருங்கள். கர்ப்பவாயின் அருகே சென்று suction செட் ஆகி விட்டால் நழுவி வெளியே வராது.

 4. பீரியடின் முதல் நாள்/இறுதி நாள் மட்டுமே ஸ்டெர்லைஸ் செய்தால் போதும். உபயோகிக்கும் 3-5 நாட்களும் ஒவ்வொரு முறையும் கொதிக்க வைத்து சுத்தம் (ஸ்டெர்லைஸ்) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 5. முதலில் வீட்டில் உபயோகிக்கப் பழகுங்கள். என்ன ஏது என்று புரிந்தபின் வெளியிலும் உபயோகிக்கலாம்.

 6. பொதுக் கழிப்பிடங்களில் டாய்லெட்டில் கொட்டியப்பின் wipes உபயோகித்து கப் சுத்தம் செய்து பிறகு மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். சில பொது இடங்களில் வாஷ் பேசினுடன் கூடிய டாய்லெட்டை உபயோகிக்கலாம் ,சௌகரியமாக இருக்கும்.

 7. அவரவர் உதிரப்போக்கிற்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் 3-6.30 மணி நேரம் ஆகும், அடுத்தடுத்த நாட்களில் இந்த நேரக்கணக்கு கூடவோ குறையவோ செய்யும். பழகப்பழக எப்போது கப் நிரம்பும் என்பது உடலின் சங்கேத மொழிகளில் (ஈரம் உணர்தல்) புரியத்தொடங்கும் .

 8. அருவருப்பு என்பது நிச்சயம் வேண்டாம்.  கைகளில் படத்தான் செய்யும், சுத்தமாகக் கழுவிக்கொள்ளலாம். நம் உதிரம், நம் சுத்தம்.

 9. ஒரு மாதத்திற்கு சானிட்டரி பேட் வாங்கும் அதே விலையில் இந்த M கப்பை வாங்கி விடலாம். இது குறித்த விழிப்புணர்வு நிறைய பேருக்கு இருப்பதால் இப்போது மருந்தகங்களில், அமேசானில் என்று பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது. ஒருமுறை வாங்கினால் குறைந்தது 5 வருடங்கள் வரும்.

 10. சரியாகப் பொருத்தியிருந்தால் கப் வைத்த உடனேயே லீக் ஆகாது. லீக் ஆனால் சரியாகப் பொருந்தவில்லை என்ற ஒரே காரணம் தான்.

 11. வெளியில் எடுக்கும்போதும் வம்படியாக இழுக்கக் கூடாது. Wall Suction holder பார்த்திருப்பீர்கள் தானே, நடுவில் பிடித்து இழுப்பதைவிட ஓரமாக லேசாக தூக்கினாற்போல் எடுத்தால் சுலபமாக விடுபடும்.  அதே லாஜிக் தான் இங்கேயும்! படபடப்பாக இல்லாது அமைதியான மனநிலையில், உங்களுக்கேற்ற பொஷிஷனில் நின்று அல்லது அமர்ந்து கப்பின் அடிப்பகுதியை ஓரமாக சிறிது அழுத்தினால் suction விடுபடும்.  பிறகு மெதுவாக இழுத்தால் சுலபமாக வெளியே எடுத்துவிடலாம். படிப்பதற்கு என்னம்மோ ராக்கெட் சயின்ஸ் போல் இருந்தாலும், பழகிய பின் 30 செகண்ட் வேலை தான். 

12. M-கப்பை வெளியே இழுக்க உதவும் stem - உபயோகித்துப்பழகியபின் உங்கள் வசதிக்கேற்ப அதன் நீளத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

நன்மைகள்:

  1. சேனிட்டரி பேட் உபயோகிப்பதால் வரும் Rashes(புண்) கப்-பினால்  வராது.
  2. பல நூறு சேனிடரி பேடுகள் குப்பைக்குப் போவதை தவிர்க்கலாம், காட்டன் துணிகள் துவைப்பதையும் அதை உலர வைக்கும் வேலையும் தவிர்க்கலாம்.
  3. மாதவிலக்கு அசௌகரியங்களே இல்லாமல் சுதந்திரமாக, உடையில் கறை படியும் பயம் ஏதுமின்றி நடமாடலாம்.
  4. யூரின், மலம், மாதவிடாய் மூன்றையும் தனித்தனியாய் டீல் செய்யலாம்.
  5. எதிர்பாராமல் தண்ணீரில் அல்லது மழையில் நனைந்தால் உடை நாஸ்தியாகும் என்ற கவலை வேண்டாம்.
  6. லீக் பற்றிய எண்ணம் இல்லாது, இரவில் எந்த பொஷிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம்.
  7. சேனிடரி பேடுகளைப் போல எங்கே டிஸ்போஸ் செய்வது, வாங்குவதை மறந்தால் என்ன செய்வது என்ற கவலை இதில் இல்லை.
  8. வீட்டில் இருந்தாலும், வெளியே எங்கு செல்லும்போதும், குறைந்தபட்சம் டாய்லெட், flushable toilet wipes இருந்தாலே போதும், சுவடே இல்லாமல் மாதவிடாய் நாட்களை சுலபமாகக் கடக்கலாம்.

இந்தத் தலைப்பில் எனக்குத் தெரிந்த எல்லாமும் சொல்லியிருக்கிறேன்; உபயோகிக்கும் முறை அறிந்து, உங்கள் உடலமைப்பைப் புரிந்து, பயமின்றி உங்கள் M-cup புதிய பயணத்தைத் தொடங்க வாழ்த்துக்கள்!

 

-பிரதீபா புஷ்பராஜ்