Thursday, 14 October 2010

லட்சுமி கதை- பாகம் 4 (இறுதிப் பாகம்)


முந்தின நாள் என்ன தான் நடந்திருந்தாலும், எதுவுமே நடக்காத மாதிரி தூங்கற டைப் நானு. மணி சுமார் ஆறு இருக்கும். காலிங் பெல் சத்தம் கேட்டு எந்திரிச்சு (நாம்போயி எந்திரிப்பேனா?) என்னை வந்து எழுப்பினார் அப்பா. கீழ லட்சுமி வந்திருக்கு ன்னு சொன்னதும் தான் நேத்திக்கு நடந்ததும், நான் செம்ம கோபமா இருந்ததும் நியாபகத்துக்கே வந்திச்சு. சரின்னு போயி பாத்தா, இன்னும் ரெண்டு மூணு கார்டு  !

இனிமேலும் தேடுன்னு அனுப்பி, கார்டு எதுவும் டேமேஜ் ஆக்கிக் கொண்டு வந்தாத் தாங்காது சாமின்னு அப்பாவைப் பாத்தேன், அவரும்  ரெடி ஆன மாதிரி தெரிஞ்சுது. இப்ப நேரடியா லட்சுமி கிட்ட கேட்டா நான் திருடலன்னு சொல்லிட்டுப் பட்சி பறந்திரும், ஊரெல்லாம் போயி நாங்க அதுக்குத் திருட்டுப் பட்டம் கட்றதா வேற சொல்லிரும்ன்னு அம்மாயி சொன்னாங்க.. சரி மேல வா லட்சுமின்னு சொல்லிட்டு பழனிச்சாமி போலீஸ்காரருக்கு போன்ல கூப்பிட்டு விஷயத்த சொன்னோம்.

எங்களுக்குத் தான் வாய் அடங்காதே ! அதுக்குள்ள நான், அம்மாயி, அம்மா மூணு பேரும் பொறுக்க முடியாம கேட்டே போட்டோம்.
லட்சுமி, நீ தான் எடுத்தேன்னு தெளிவாத் தெரிஞ்சு போச்சு. உன்னையப் போயி நம்புனம் பாரு
ஐயோ, காணாம போனதைத் தேடிக் கொண்டாந்து குடுத்தாத் திருட்டுப் பட்டம் கட்றீங்களா அழுகுது வேற ! (நான் குடுத்த அதே ஆஸ்கார் ஆக்டிங்க எனக்கே திருப்பிக் குடுத்துச்சு)
இந்த பாரு, பொய்யெல்லாம் பேசீட்டிருந்தா வேலைக்காகாது. வா, போயி மினியப்ப சாமிகிட்ட காசு வெச்சு பாப்போம்; சாமி கண்டீப்பா காமிச்சுக் குடுத்துரும்
( முனியப்ப சாமி லட்சுமியக்காவோட குல காவல் தெய்வம்; அங்க போயி நூத்தியொரு ரூவா குடுத்து திருடுன பொருள் திரும்பி வரணும்னு வேண்டீட்டா திருடுன பொருளு திரும்பி வருதோ இல்லையோ, திருடுனவனுக்கு எதாச்சும் ஆகும்-இது நம்பிக்கை, ரெண்டு மூணு தடவை நடந்தும் இருக்கு )

ஹ, இந்த மெரட்டலுக்கெல்லாம் லட்சுமியக்கா பயப்படுமா?

வாங்க கோயலுக்கே போலாம், உண்மையாத் திருடுனவன சாமிதான் காமிக்கணும்
அப்ப நீ எடுக்கலைங்கற?
சத்தீமா, சாமிக்குப் பொதுவா எடுக்கலைங்
அப்பறம் எப்படி தீபா பர்சுல இருந்து ஒன்னொன்னா கரக்டா கொண்டுட்டு வந்தே?
அவிங்க தேடச் சொன்னாங்க, நல்லாத் தேடித் பாத்தேன். அங்கங்க  கெடந்துச்சுங்க ஒன்னோன்னும்
காசு வேணும்ன்னா கேட்டாக் குடுக்கறோம், இப்படித் திருட்டுப் பெரட்டுப் பண்ணாட்டி என்ன ?
தேடிக் கண்டுபுடிச்சுக் குடுத்ததுக்கு திருட்டுப் பட்டம் கட்டறீங்க பாத்தீங்களா?
இப்ப தீபாங்கப்பா போலீசுக்கு போன் பண்ணிருக்கறாரு. உண்மையச் சொல்லீட்டீனா இதோட விட்ருவோம். இல்லீனா ஜெயிலு தான்

அப்பக் கூட எடுத்தேன்னு சொல்லி இருந்தா விட்டுரலாம்ன்னு தான் அவங்கெல்லாம் நெனச்சாங்க (நான் அப்டி நெனைக்கல; ரெண்டு அடியாவது போடனும் போல எனக்கு இருந்துச்சு). ஆனா மறுபடியும் அந்தக்கா பொய் சொல்லிட்டே தான் இருந்துது.

ஆக்ஷன் கிங் பழனிச்சாமி போலீஸ்காரர் வந்தார். எங்கள மாதிரி வெட்டி நாயம் எல்லாம் பேசல அவரு.
பர்ஸ் எங்கே?
ஐயோ சாமீ நான் திருடவே இல்லீங்க
வேலை செய்ய வந்துட்டு கை வேச்சிருக்கற; எல்லாம் எனக்குத் தெரியும். உணர பொய்யெல்லாம் வேற எங்காச்சும் வெச்சுக்க. ஒழுங்கா உண்மையச் சொல்லீரு
இல்லீங்க. நாந்தாங்க காணாம போனது ஒன்னோன்னும் தேடிக் கண்டுபுடிச்சேன். திருட்டுப் பட்டம் கட்டறாங்க
 போலீஸ்காரர் உட்டாரு பாருங்க ஒரு அறை; ப்பொளீர்ன்னு. நாங்களே எதிர்பாக்கல.
இப்ப என்ன பண்றே, ஓடிப்போயி, பர்சு, அதுல இருந்த காசு, மிச்சமிருக்கற கார்டு எல்லாத்தையும் ஒன்னு விடாம கொண்டு வர்றே. பத்தே நிமிஷம், நீ இங்கிருக்கணும்

அடி ஒதவ மாதிரி அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்கன்னு சொல்றது ரொம்ப கரெக்ட். சொன்ன மாதிரி பத்தாவது நிமிஷம் லட்சுமி அக்கா என்னோட பர்சோட வந்து நின்னுச்சு.
இப்ப எப்படி காசு வந்துச்சு?
என்ற கைக்காசு போட்டு, கடன் வாங்கிக் கொண்டுவந்தங்க (சத்தியமா சிரிக்க ஆரம்பிச்சுட்டோம் எல்லாரும்)
யாரு நீயி? அரிச்சந்திரன் பொண்டாட்டி, உன்னைய நம்பி கடன் வேற குடுக்கறாங்களா? மறுபடி மறுபடி பொய் சொன்னே, ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவேன். எல்லாம் சரியா இருக்கான்னு பாரு தீபா
என்னோடது எல்லாம் சரியாத்தான் இருந்திச்சு. ஆனா பிரபுவோடது? நாங்க யாரும் அதை கவனிக்கல, அவன் பர்ச நைசா சுருட்டீரலாம்ன்னு நெனச்சிருக்கு.
என்னோடது எல்லாம் இருக்குங்கண்ணா. பிரபுவோட பர்சு இன்னும் வரலைங். அதையும் தான் எடுத்துட்டுப் போயிருக்கு

பழனிச்சாமி அண்ணன் லட்சுமியப் பாத்து ஒரு மொறை மொறச்சாரு. அவ்வளவு தான்; அடுத்த அஞ்சாவது நிமிஷம் பிரபுவோட பர்சும் வந்தாச்சு.
இனிமே எங்கியாச்சும் திருடுனே, நீயி, உன் வீட்ல இருக்கற எல்லாரையும் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவேன். இவங்க பாவப்பட்டு கேஸ் குடுக்கல, அதனால தப்பிச்சே. ஒழுக்கமா இருந்துக்கோ என்றபடி கிளம்பினார்.
காணாம போனதைத் தேடிக் கொண்டாந்து குடுத்தாத் திருட்டுப் பட்டம் கட்றாங்க என்று முணுமுணுத்தபடி கிளம்பியது அரிச்சந்திரன் பொண்டாட்டி.


Wednesday, 13 October 2010

லட்சுமி கதை- பாகம் 3


ஊரெல்லாம் தேடு தேடுன்னு தேடி லட்சுமி கொண்டுவந்தது ATM கார்ட் இல்லிங்க, என்னோட கல்யாண பிளவுஸ் தெக்கக் குடுத்த டைலரோட இங்கிலீஸ் விசிடிங் கார்ட். அதுவும் என்ன கதையோட வந்துச்சுன்னு கேளுங்க..

நானும் குப்ப மேடே பூரா தேடீட்டனுங், கறுப்புப் பர்ஸ் ஒண்ணுமே காணங்(எப்ப சொன்னோம் பர்ஸ் கருப்புன்னு?), இருட்டு வேற ஆனதால டார்ச் வெச்சுத் தேடினா எல்லாரும் என்ன என்னன்னு கேக்கறாங், குப்பைல கெடந்தாலும் வேற யாராச்சும் எடுத்துட்டுப் போய்ட்டாங்கன்னா? (யாராச்சும்? எப்புடியெல்லாம் யோசிக்காறாங்க பாருங்க!). ரொம்பத் தேடினதுல இந்த கார்டு மட்டும் இருந்துதுங் (அந்த கார்டு வெச்சு நான் வெளிநாடு போக முடியும்ன்னு நெனச்சிடுச்சு)- எப்படி?

ஆனாலும் பர்சுல இருந்த எல்லாமே வரணுமே ! அதுவும் இல்லாம பிரபுவோடதும் திருப்பிக் குடுக்கணும். சரி, லட்சுமி போற ரூட்டுலையே போக வேண்டியதுதான்...லட்சுமியக்கா இது என்னோட பர்சுல இருந்தது தான், இதே மாதிரி சைசுல மத்த வெளிநாடு போற கார்டு இருக்கும், என்னோட போட்டோ கூட அதுல ஒட்டியிருக்குமக்கா. இன்னும் கொஞ்சம் கூடத் தேடித் பாருங்க மறுபடியும் ரீலு விட்டேன்.

லட்சுமியோட அறிவுக்கு எட்டின அளவுக்கு மத்த கார்டுல எதோ ஒன்னு தான் எனக்கு முக்கியமாத் தேவைன்னு புரிஞ்சுது; ஆனா அது எதுன்னு தான் புரியல. இந்தத் தடவை தேடிக்(?) கொண்டு வந்தது என்னோட ஒரு ATM கார்டு-கண்ண்டபடி மடக்கி கால்ல போட்டு மிதிச்சது, சாணி அப்பின Globus Membership கார்டு, அப்புறம் PAN கார்டு (அதுல தான் போட்டோ இருக்கே). இதெல்லாம் யாரோ குப்பையில போட்டாங்களாம், நாங்க நம்பனுமாம்? டைலாக் என்னன்னு சொல்லலையே? என்ற பையனும் வந்து தேடித் பாத்தான், அவன் கையிக்கு இதெல்லாம் சிக்குச்சுங். ஆனா அந்த சாமிக்கே பொறுக்காது, இப்படிப் பண்ணிப் போட்டானே. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு.

பண்ற திருட்டையும் பண்ணிட்டு கார்ட மடக்கிக் குடுத்தா எப்படியிருக்கும்? எனக்கு ஆத்திர ஆத்திரமா வந்துச்சு. மவளே, உனக்கு இன்னிக்கு இருக்குடீ ஆப்புன்னு பல்ல வெறுவீட்டு திட்டறதுக்கு வாயத் தொறந்தேன்; எங்கப்பா என்னை அப்போதைக்குத் பேசாம இருன்னுட்டார்.. இந்நேரத்துக்கு போலீசைக் கூப்பிடவும் முடியாது, மிச்ச கார்டையும் ஒரேயடியாகக் கேட்டா புரிஞ்சு போயி குறுக்க திரும்பீருவா, காலைல வரைக்கும் விட்டுப் பிடிப்போம்ன்னு என்னை சமாதானப் படுத்திட்டு லட்சுமி கிட்ட,
லட்சுமி, இதுவும் இல்ல, வேற கார்டு. பர்சத் தூக்கிட்டுப் போன நாயி (தப்பேயில்லை) வேற குப்பத் தொட்டியில கூடப் போட்டிருக்கும். நீ டார்ச்ச எடுத்துட்டுப் போ; நாளைக்குக் காலைல நல்லாத் தேடித் பாரு மறுபடியும். கண்டிப்பா எங்கியாச்சும் மத்ததெல்லாம் கெடக்கும் ன்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள நானும், அக்கா, உங்க கண்ணுக்குத் தான் ஆண்டவன் இதெல்லாம் காட்டி இருக்கான் பாருங்க, நீங்க தெய்வமாட்ட எனக்கு (போடு படத்த); மத்ததெல்லாம் எப்படியாச்சும் தேடிக் குடுத்திருங்கக்கா.. பணம் போனாத் தொலையுது போங்க (ரிப்பீட்டேய்) அந்த கார்டெல்லாம் மட்டும் கண்டுபுடிங்கக்கா அப்படீன்னேன்.

லட்சுமியக்கா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனமாதிரி தெரிஞ்சுது. சரி பாப்பா, நான் நாளைக்குக் காலைல எப்படியாச்சும் தேடிக் கண்டுபுடிச்சுக் கொண்டுவர்றேன்னு சொல்லிட்டு ஜாலியா வீட்டுக்குக் கிளம்பிருச்சு.
      
                               (அடுத்த பாகத்தில் முடியும்)

Sunday, 10 October 2010

லட்சுமி கதை- பாகம் 2

பாகம் -1

ரெண்டு பேரோட பர்சும் காணாம போயிடுச்சுன்னு சொன்னா அப்பா நல்லாக் கொஞ்சுவாரு ; இருந்தாலும் திருட்டாச்சே, சொல்லித் தானே ஆகணும். என்னோட பர்சுல லைசென்ஸ், PAN கார்டு, ரெண்டு மூணு ATM கார்டு, ரெண்டு கிரெடிட் கார்டு, நாலஞ்சு ஷாப்பிங் கார்டு, பணம் ஒரு 2000 கிட்ட இருந்திச்சு. பிரபு பர்சுல லைசென்ஸ், ஒரு ATM கார்டு, அறுவது ரூபா பணம் இருந்திச்சு. விஷயத்த மெதுவா அப்பாகிட்ட சொல்லும்போதே அவருக்குத் தலைவலி கிலைவலி எல்லாம் பறந்துருச்சு. எல்லாரும் கெளம்பினதுக்கு அப்புறம் ஆரம்பிச்சாரு.

"சரி, யாரோ எடுத்திருக்காங்க ரெண்டையும், கண்டுபுடிக்கணும், ஆனா எல்லாரும் மண்டபத்துல தானே இருந்தோம்? இங்க யாராரு இருந்தா?"
"அம்மாயி, லட்சுமி. வேற யாரும் வரலீங்ப்பா  "
அப்பா லட்சுமியைக் கூப்பிட லட்சுமி அக்கா வந்தது. பிரபுவோட பர்சும் காணோம்ங்கறதச்  சொல்லாமையே கேட்டாரு,"லட்சுமி, தீபா பர்சக் காணமாம்; நல்லா யோசிச்சுச் சொல்லு, யாராச்சும் புதுசா வந்தாங்களா இங்க?"
"இல்லீங், நானும் அம்மாய்ங்களும் மட்டும் இருந்தமுங்; நாங்கூட ரூமெல்லாம் கூட்டிட்டு நீங்க வந்ததும் கெளம்பலாம்ன்னு இருந்தங்."

அம்மாவுக்கு லேசாக சந்தேகம் வந்துச்சு. ஏம்மா, நான்தான் எந்த வேலையும் ரெண்டு பேரும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லீட்டுப் போனனே, என்னத்துக்கு பெட்ரூம் கூட்டச் சொன்னேன்னு கேக்க , அம்மாயி சொல்லிச்சு, "நான் கூட்டவே வேண்டாம்ன்னு சொன்னேன், லட்சுமி கேக்கவே மாட்டீன்ட்டா ".நாங்க இல்லாதபோது ரூமக் கூட்டுனது, நாங்க இருக்கும்போது கீழ கெடந்த தோடு எடுத்துக் குடுத்தது-எல்லாமாச் சேந்து விஷயம் வெளங்கிச்சு எனக்கும் அப்பாவுக்கும். சரி தூண்டில்  போடுவோம்ன்னு ஆரம்பிச்சோம் லட்சுமி அக்கா கிட்ட.

"லட்சுமி, போயி நீயும் தேடு, நாங்களும் நல்லாத் தேடுறோம். வாசல்பக்கம் எங்கியாச்சும் கெடக்குதான்னு பாரு"ன்னுட்டு நாங்க லட்சுமி அக்காவைக் கவனிக்க ஆரம்பிச்சோம்.லட்சுமியும் தேடுவதைப் போல பாவலா காட்டுச்சு நல்லா.கொஞ்சம் கூட டென்ஷன் ஆகலை , சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்ன்னு மட்டும் சொல்லிட்டு நிறுத்திகிச்சு..

குட்டு வெளி வரதுக்கு எதாச்சும் க்ளு வேணுமே எங்களுக்கு? நான் ஆஸ்க்கார் ரேஞ்சுக்கு ஒரு அழுவாச்சி அழுதேன். "அக்கா, எனக்குப் பர்சு கூட முக்கியமில்ல, அதுல ஒரு கார்டு இருக்கும், அது இல்லீன்னா வெளிநாட்டுக்கு போகவே முடியாதக்கா, ஐயோ, நான் மாப்பிளைட்ட என்ன சொல்றது, நான் எப்புடி வெளிநாடு போறது" - பாஸ்போர்ட், ATM கார்டு  எல்லாம் அந்தக்காவுக்கு எதுவுமே தெரியாது. பர்சுல ஏதோ பணத்த விட முக்கியம்ன்னு மட்டும் புரிஞ்சுது.
"கண்ணு , யாரேடுத்தாங்கன்னே தெரிலயே பாப்பா, இத்தன முக்கியமா அதுல இருந்துச்சா சாமி" (தெரிஞ்சிருந்தா பணத்த மட்டும் எடுத்திருப்பனேன்னு லேசா பீலிங் தெரிஞ்சுது).ஆனா உண்மைய மட்டும் சொல்லல.

 அப்பா போன் எடுத்துப் பேச ஆரம்பிச்சாரு.
"பழனிச்சாமி, தீபா பர்சு திருடு போய்டிச்சு, என்ன பண்ணலாம்?"
" Beep, Beep, Beep" (ஹி ஹி , போன் தான் யாருக்குமே பண்ணலையே)
"ம்ம், அவுங்க அம்மாயி, அப்புறம் லட்சுமின்னு வேலைசெய்ய  வந்த பொண்ணு"
"Beep, Beep, Beep"
"ஆமாம், புது ஆளு லட்சுமி தான்"
"Beep Beep"
" லட்சுமி யாரும் புதுசா வரலேன்னு சொல்லுது"
 (மறுபடி மறுபடி லட்சுமியையே டார்கெட் செஞ்சாரு)
"சரி, அட்றஸ் தானே, வாங்கி வெக்கறேன், நீங்க ஒரு அரை மணி நேரத்துல வந்திருங்க"

அப்பா அம்மாயக் கூப்பிட்டு சும்மாச்சுக்கும் அட்ரஸ் எழுதிகிட்டார். லட்சுமியக்கா கிட்ட அட்ரஸ் சொல்லுன்னு கேட்டா,வீட்டுக்குப் போகணும், யாரோ வீட்டுக்குப் புது ஆளு வந்தா மாதிரி இருந்திச்சு  , நாஞ் சத்தியமாத் திருடலைங்க்ன்னு மாத்தி மாத்தி ஒளறிட்டே இருந்திச்சு. அப்பக் கூட தப்பிக்கலாம்ன்னு தான் பாத்துச்சே ஒழிய கொஞ்சங்கூட பயக்கல.

சரி நம்ம ஆஸ்கார கண்டின்யூ பண்ணுவம்ன்னு எச்சா அழுதேன், "அக்கா , எப்புடியாச்சும் கண்டுபுடிக்கனுமக்கா, பணம் போனாத் தொலையுது , அந்த கார்டு தான் வேணும், இல்லீன்னா ஆயுசுக்கும் என்னால வெளிநாடு போகமுடியாது ".திரும்பத் திரும்ப பணம் முக்கியமில்லை, கார்டு தான் முக்கியம்ன்னு சொல்லிட்டே இருந்தோம். சரி கார்டெல்லாம் தந்துடலாம்ன்னு முடிவு பண்ணினா , திருப்பித் தர்றதுக்கு வாய்ப்புக் குடுக்கணுமே?

"லட்சுமி,  நீ எடுத்திருக்க மாட்டே, ஆனா அந்தப் பக்கங்கீது  எங்காச்சும் குப்பை கூட்டும்போது கீழ விழுந்துருக்கும், போயித் தேடிப்பாரு" ன்னு சொல்லிட்டு நாங்க இந்தப் பக்கம் வந்துட்டோம்.
தேடறேன்னு சொல்லிட்டு குப்பைக் கூடையை கிளர்ற சத்தம் கேட்டுச்சு. அஞ்சு நிமிஷங்கழிச்சு இங்க இல்ல பாப்பான்னு குரல்.

அடுத்த அஸ்திரம்-மறுபடியும் அம்மாயி தான் பாவம்.
"இந்த அம்மாயி வயசாயிடிச்சு, எதுவும் பாக்கவே பாக்காது,  கீழ கெடக்கறது குப்பையா, இல்ல வாழைப்பழத் தோலான்னு கூடப் பாக்காம கூட்டித் தள்ளீரும், ஒரு வேளை வெளில குப்பைத் தொட்டிக்கு எங்கியாச்சும் போயிக் கொட்டியிருந்தா? லட்சுமி கொஞ்சம் போயிப் பாத்துட்டு வர்றியா?"
"எங்கீங்க இருட்டுல போயித் தேடறது, எனக்கு வேற ஊட்டுக்குப் போறக்கு நேரமாச்சுங்க" (மறுபடியும் 'சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்?')

கையில டார்ச் ஒன்னு குடுத்து லட்சுமியக்காவப் போயி வெளில தேடித் பாத்துட்டு வரச் சொன்னோம். போன அஞ்சாவது நிமிஷமே திரும்பி வந்துச்சு, கைல ஏதோ ஒரு கார்டக் கொண்டுட்டு.

Wednesday, 6 October 2010

லட்சுமி கதை- பாகம் 1

கதைன்னு தலைப்புல போட்டிருந்தாலும் நான் சொல்லப் போறது கதை இல்லீங்க.. நிஜம்; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த மறக்க முடியாத சம்பவம். சவால் சிறுகதைப் போட்டிக்கு எல்லாம் நம்ம எது எழுதினாலும் படிக்காம கூடத் திரும்பி ஓடியாந்திடும்ங்கறதால மனசத் தேத்திகிட்டு இப்படி ஒரு பகிர்வு. தமாசு லேசா சீரியசு கலந்து கொஞ்சம் நீளங்கறதால ரெண்டு மூணு பாகமா எழுதலாம்ன்ட்டுங்க.

கதைல நான், என் தம்பி பிரபு , எங்கப்பா, அம்மாயி, பழனிச்சாமி போலீஸ்காரர் அப்படீன்னு நாலஞ்சு கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், கில்லாடி லட்சுமி தான் ஹீரோயின். லட்சுமி எங்க வீட்டுக்கு என்னோட கல்யாண சமயத்துல வேலை செய்ய வந்த ஒரு அக்கா. வயசு ஒரு 38 இருக்கும். சின்னவங்க எல்லாரயும் சாமின்னு தான் கூப்பிடும், என்னை பாப்பான்னு கொஞ்சம் பாசமா கூப்பிடும். 

என்னோட நிச்சயதார்த்தம் எங்க ஊர்ல ஒரு மண்டபத்துல நடந்ததால வீட்ல அம்மாயி கிட்ட அம்மாயி, நீயிரு, லட்சுமி வந்தா எந்த ரூமையும் தெறக்க வேண்டாம், மத்தியானமா வீட்டுக்கு யாராச்சும் வந்ததுக்கப்புறம் மண்டபத்துக்கு ரெண்டு பேரும் சாப்புட வந்துருங்கன்னு சொல்லிட்டு எல்லாரும் கெளம்பிட்டோம். நமக்கு சுண்ணாம்பு அடிச்சு, பொடவை எல்லாம் சுத்திட்டு, நகநட்டு பூட்டிகிட்டு மண்டபத்துக்குக் கெளம்புற அவசரத்துக்கு ஒரு கெரகமும் நெனப்புக்கு வரல; கெடக்கறதல்லாம் கெடக்கட்டும், பீரோவுல நகையெல்லாம் வெச்சு மட்டும் பூட்டிட்டு மத்ததெல்லாம் அப்புடியே போட்டுட்டு  ஓடியாச்சு.

நிச்சயமெல்லாம் முடிஞ்சு வேத்துவடிஞ்சாலும் நல்லா தின்னுட்டு மூணு மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தாச்சு அத்தைகூட்டத்தோட. அம்மாயி வரலன்னுட்டு வீட்டுக்கே சாப்பாடு குடுத்தும் விட்டாச்சு. எல்லாரும் டீ குடிச்சுகிட்டே பேசிகிட்டு இருந்தோம். லட்சுமி குப்பை கூட்டிகிட்டு இருந்திச்சு.

"அட லட்சுமீ , உன்னைய மண்டபத்துக்கு சாப்புடறதுக்கு வரச் சொன்னோமில்ல வர வேண்டீது தான?" -இது எங்கத்தை. 
"இல்லீங்க நான் அம்மாய்ங்க தனியா இருக்கறாங்கன்ட்டு வீட்டுக்கு போயி சாப்ட்டும் வந்து இங்கியே இருந்துட்டங். "
"அப்புடியா, செரி செரி"
கூட்டிகிட்டே இருக்கும்போது லட்சுமி என்னுடைய Imitation தோடு ஒன்ன கீழ கெடந்து  அத்தை கிட்ட எடுத்துக் கொடுத்திச்சு.
"பாருங், இது பாப்பளுதுங்களா, கீழ கெடந்துச்சுங்" 
"அட அஆம். அவ தான் இந்த மாரி போட்டுட்டுக் கெடப்பா" 

எனக்கு ஒன்னும் புரியல. இது டிரெஸ்ஸிங் டேபிள்ல ஒரு டப்பாவுல இல்ல இருந்திச்சு, நான் எடுக்கவே இல்லியே, எப்புடி ஒன்னு மட்டும் கீழ கெடக்குது.. நம்ம அவரசரக்குடுக்கை மட்டுமில்லாம மறதி மண்டையும் ஆச்சே..வேற எதையாச்சும் எடுக்கப் போயி இது விழுந்தாலும் விழுந்திருக்கும். லட்சுமி பரவா இல்ல போன்னுட்டு எல்லாரும் மறுபடி நாயத்துல முசுவா எறங்கிட்டோம். அதுக்குள்ள அப்பா அந்தப்பக்கமிருந்து கூப்பிட்டாரு. 

"எனக்கு ஒரு தலைவலி மாத்தர வாங்கிட்டு வரச் சொல்லு, பயங்கரமா வலிக்குது"
"பிரபு, போயி ஒரு மாத்தர வாங்கிட்டு வாடா"
"எங்கிட்ட சில்லறை இருக்காதுன்னு நெனைக்கறேன், உன்கிட்ட இருந்தாக் குடு"
என்னோட Walletல சில்லறை எடுக்கலாம்ன்னு ஹேன்ட் பேக்க தூக்கினா , பொங்குன்னு இருந்திச்சு பேக். இதென்னடா எப்பவும் வெயிட்டா இருக்கும் இப்ப கனமே இல்லியேன்னு  தெறந்தா உள்ள Wallet  இல்ல. சரி இங்க தான இருக்கும்ன்னு பீரோவுல, பெட்டிக்கு அடிய, அங்க இங்கன்னு அந்த ரூமுலயும் தேடிட்டேன், பக்கத்து ரூமுலயும் தேடிட்டேன். இருக்கற மாதிரி காணம். 

"டேய் பிரபு , என்னோட Wallet டக் காணம், அப்புறமா தேடனும், உன்கிட்ட சில்லறை இருக்கா பாருடா"

அந்தப் பொறுப்பாளி காலைல தான் ஊருக்கே வந்துச்சு.  குளிச்சுட்டு அவனோட 
Wallet -ட பான்ட் பாக்கட்டுலையே விட்டுட்டு அதையும் பாத்ரூமுலையே போட்டுட்டு மண்டபத்துக்கு வந்துடுச்சு.. சில்லறை கொண்டு வருவான்னு பாத்தா ஒரு பத்து நிமிஷம் ஆளக் காணோம். 

அப்புறம் வர்றான், "என்னோட பர்சையும் காணோம் டீ" ன்னுகிட்டு.


Tuesday, 5 October 2010

சன் பிக்சர்ஸ் கில்லாடிகள்

நானும் எந்திரன் விமர்சனம் எழுதி உங்களை எல்லாம் 'எத்தன பேரு'ன்னு எரிச்சலாக்கற எண்ணம் எதுவும் இல்லீங்க; ஆதி அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தாரு(இங்கே). அதை ஆமோதிச்சுப் பின்னூட்டம் போடப் போயி இத்தனையும் எழுதிட்டேன்.

சன் பிக்சர்ஸ் மக்கள் 'எந்திரன்'-ன்னு ஒன்னொன்னையும் விளம்பரப்படுத்தறதும் காசாக்கறதும் இருக்கே, அடேயப்பா !! மத்த படத்துக்குப் போடறா மாதிரி திருப்பி திருப்பி வெறும் விளம்பரத்தைப் போட்டா வேற சேனல் மாத்தாம மக்கள் டிவியே ஆப் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சு போய்டிச்சு அவங்களுக்கு. ரஜினி, ஐஸ், ரஹ்மான் அவங்கெல்லாம்  படத்தப் பத்தி சொல்ற மாதிரி விளம்பரப்படுத்தறாங்க. இன்னா ப்ளானிங்கு,  இன்னா ப்ளானிங்கு !!  ஞாயித்துக்கிழமை போட்டிருந்தானே ஒரு நிகழ்ச்சி, 'எந்திரன் வெளியீட்டுக் கொண்டாட்டங்கள்'ன்னு. பாலபிஷேகங்கற கேணத்தனம் எப்பவும் நடக்கறது ; இப்போ உடம்புல குத்தி தேரிழுக்கறதும், மொட்டை போட்டுக்கறதும், பச்சை குதிக்கறதும், பால்குடம் எடுக்கறதும்.. ஹ்ம் சொந்த மக, புருஷன்/பொண்டாட்டி, அப்பா/அம்மாவுக்காக இப்படி என்னிக்காச்சும் வேண்டியிருக்காங்களா? பார்க்கப் பார்க்க கோபம், எரிச்சல் தான் வந்துச்சு. எல்லாம் சரி, நிகழ்ச்சி முடியும்போது ரெண்டு லைன் போட்டாங்களே !! "நீங்களும் எந்திரனை கொண்டாடி விட்டீர்களா?  இது போல் கொண்டாட்டங்கள் இருந்தால் , DVD அனுப்பவும்"ன்னு. அடப்பாவிகளா, மிச்சமிருக்கற மக்களையும் சட்டையக் கிழிச்சுட்டுத் திரியச் சொல்றீங்களாடான்னு நெனச்சேன்.

ஆதி அவர்கள் சொன்னபடி //குறைந்த பட்சம் ‘நான், கடவுள் அல்ல, என் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்ற நான்சென்ஸுகளையாவது கைவிடுங்கள்’ என ஒரு அறிக்கை விடலாம்தான்// மனிதநேயமிக்க ஒவ்வொருவரின் எண்ணமும் இதுவே !! அதக்கூடவா ரஜினி செய்ய மாட்டாரு?

இத்தோட நம்மள எல்லாம் விட்டுட்டா எப்படி? இன்னும் வரும்.. "எந்திரன் படப்பிடிப்புக் காட்சிகள்", "எந்திரன் பாடல்கள் உருவான விதம்", "எந்திரன் சந்தித்த சோதனைகள்", "எந்திரன்-நடிகர்கள் பார்வையில்", "எந்திரன் பற்றி ஹாலிவுட் நடிகர்கள்" , "எந்திரன்- தொழில்நுட்பம்",  "எந்திரன்-100 வது நாள்", "எந்திரன்-250 வது நாள்", "எந்திரன்-366 வது நாள்", "எந்திரன்-500 வது நாள்" --இருங்க கொஞ்சம்  தண்ணியக் குடிக்கறேன்.

சாமீ இதெல்லாம் எந்திரனப் பாத்துட்டு எழுதுனது இல்லீங்க; படத்துக்கு சம்மந்தம் இருந்தாலும் நடக்கற விஷயங்கள்ல இவங்களுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் மனசாட்சிக்கே தப்புன்னு தோணாதாங்கற ஆதங்கம், வேறொன்னும் இல்லீங்க.

ஹ்ம்ம்.. என்ன பேசி என்ன? என்னை யாரும் எந்திரன் பாக்கக் கூட்டிட்டுப் போக மாட்டீங்கறான்களே !!
ஹ்ம்ம்..