Sunday 20 June 2010

என்னவனே..



காதோரம் கற்றைமுடி
சிலுப்பிவிட்டு சில்மிஷிக்க
பனியெடுத்து பரவவிட்டு
இதயம் தேடிய ஈரக்காற்று
கவிதை நிரப்பி
காதல் கிளப்பி
சுடுகாத்தாய் சென்றது

கண் பார்த்து
கை கோர்த்து
கணம் பொறுக்க
மனம் மறுக்க
இதழ் துடிக்க
இமை நெருங்க

உதடுகளின் ஈரம்
உயிர்வரை ஏறும் 
மறந்து போய் விழித்தால்
மஞ்சம்தனில் நான் 
வந்தாய் சொல்லாமலே
சென்றாய் நில்லாமலே 
என்னவனே நீ யார் !

Wednesday 9 June 2010

அழுத்தக்காரி

என்னை பார்க்கும்போதெல்லாம்
வேகம் குறைக்கும் கால்கள்
ஒளிந்து பார்க்கும் கண்கள்
கோர்க்கத் துடிக்கும் கைகள்
பிய்த்து எறியும் பாதி நகம்
கீழே விழும் கூந்தல் ரோஜா
தலை கோதும் தாவணி நுனி
எனக்குப் பிடித்த கொலுசு
உனக்கான  ஒவ்வொன்றும்
எனக்கான காதலை
சொல்லாமல் சொல்கையில்
உன் உதடுகள் மட்டும்
இன்னும் ஏன்..


....சொல்லாமலே சென்றுவிட்டாய்
என் காத்திருப்பில்
நம்பிக்கை வைத்து;
ஐந்து வருடம் கழித்து
அதே சந்தில் பார்த்து
வேகம் கூட்டி
பக்கமே பாராமல்
நடுங்கும் விரல்கள்
வெண்ணிற புடவை
வெறும் நெற்றி
வெடித்த பாதம்

நடந்ததே நடந்தது
எல்லாமே எதிர்மறையாய்
அவள் மௌனம் மட்டும் மாறாமல்
இன்னும் என்னைக் கொன்றுகொண்டும்
விதியின் வழியில் சென்றுகொண்டும்!