Monday, 21 February 2011

மலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை

இசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய்  மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.


முதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் !! அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.

கோடைக் காலக் காற்றே ...
https://youtu.be/tBmfvRpTkNY

ஆகாய கங்கை....
https://youtu.be/bfFT7danA_A

பொதுவாக எம்மனசு தங்கம்....
https://youtu.be/PrTibJi6q9I

ஆசை நூறு வகை....
https://youtu.be/rpg32O9udHA

என்னம்மா கண்ணு.....
https://youtu.be/EmO6YJl3nm8

இது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.

https://youtu.be/eXFqHsWDNkE








Friday, 18 February 2011

மின்சாரக் கண்ணா...எல்லாருக்கும் உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா?

தலைமுறை கடந்த கலைஞர் அவர்; சக கலைஞர்களின் அன்புக்கும் உரியவர்; திரையில் தோன்றும் அந்த நொடி  விசில் பறக்கும்; என் பையனுக்கு, எனக்கு, என் அப்பாவுக்கு, அட எங்க அம்மாயிக்கு கூட பிடிக்கும்ன்னா பாருங்களேன்..  நடிப்போ ,ஸ்டைலோ,  நல்ல மனசோ, எளிமையோ- ஏதாவது ஒரு விஷயத்தில் அவரை எல்லோருக்கும் பிடிக்கும் காரணம் இதுதான்.
Super Star Rajinikanth


NDTV வழங்கிய இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் விருதுக்கு ஒரு ரசிகையாக, ஒரு தமிழ்மகளாக வாழ்த்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்வை அடைகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஜினி சார் !!

வில்லனோ ஹீரோவோ, கலக்குவார். நக்கல் பண்ணிகிட்டே சுத்துற பரட்டை, ஷீலான்னு கூப்பிட்டுகிட்டே நடந்து வர்ற அலெக்ஸ் பாண்டியன், பில்லா, அயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன், சம்போ சிவசம்போ தீபக், தளபதி சூர்யா, மன்னன் கிருஷ்ணா, மாணிக் பாஷா, ஆறுபடையப்பன் , வேட்டையன் ராஜா, மொட்டை MGR , சிட்டி ம்ம்ம்...மே இதெல்லாம் அசத்தோ அசத்துன்னு அசத்தின பாத்திரங்கள்.

மிக ரசிக்கப்பட்ட,/கைதட்டப்பட்ட/விசிலடிக்கபட்ட சில காட்சிகள் ..




வாழும் நாள் வரை வெற்றி நடைபோடுங்கள் !!

டிஸ்கி: (இது தானா உன்னோட டக்கு-ன்னு நினைப்பவர்களுக்காக..ஹி ஹி )இரண்டு நாளுக்கு முன்பே போட்டிருக்க வேண்டியது; ஒரு முக்கியமான வேலை குறுக்கிட்டதால் தாமதம். 

Wednesday, 26 January 2011

மௌன (தேசிய) கீதம்

நம் தேசிய கீதத்துக்காக இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடத் தோன்றாத மக்களையும் பார்க்கிறோம்; இவர்களையும் பார்க்கிறோம் -ஒரே பாரதத்தில்.





(பகிர்ந்தே ஆகவேண்டிய ஒன்றாய் நெகிழ்வித்தது-ஆதலால்)

Wednesday, 15 December 2010

முடிவெட்டப் போலாமா?

கண்ணைத் திறந்து கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதால் மூளையின் அருமை நமக்குத் தெரிவதில்லை. கேட்கும் சத்தங்களில் இருந்தே சம்மந்தப்பட்ட அந்தப் பொருள் இருக்கும் தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்லுமாம் மூளை. சில சமயம் நாம் சில பாடல்கள் ஹெட்போனில் கேட்கும்போது ,'அட, என்ன ரெக்கார்டிங் போ'ன்னு நினைப்போம் .. அந்த அளவுக்கு இடம் வலம்ன்னு மாறி கேக்கும் பாட்டு நமக்கு. அது போன்றதொரு ஒலிப்பதிவு தான் இது. பலரும் இதை முன்பே  கேட்டிருப்போம். இருந்தாலும் மேற்கூறிய மூளையின் செயல்பாட்டுத் திறனுக்காக மீண்டும் ஒருமுறை கேட்கலாம். அமைதியான வேற எந்த சத்தமும் இல்லாத இடத்தில் , கண்களை மூடிக்கொண்டு , நல்ல தரமான ஹெட்போன் வைத்து, 90% சத்தத்தில்  கேட்கவும்  (அபீஸ் மக்கள் இவ்வாறு செய்தால் தூங்கிவிட்டதாகக் கருதப்பட்டு சீட்டுக் கிழிந்தால் கம்பெனி பொறுப்பல்ல)  



புதிதாகக் கேட்பவர்களுக்கு பிரமிப்பு நீங்கவில்லை அல்லவா? எப்படி இது போல் இசையை பதிவு செய்ய முடிந்தது என கூகுள் செய்த போது இதனை Binaural Recording எனக் கண்டறிந்தேன். நம் காது எப்படி ஒரு இயந்திரம் போல வேலை செய்கிறது எனப் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். அறிவியல் அதிசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கை அதிசயங்களே மிக ஆச்சர்யம் தருகின்றன.

**********************

இப்போதைய குழந்தைகள் ரொம்பவே அறிவாளியாகவும், திறமைசாலிகளாகவும், கூர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.. அதே போலவே அம்மா அப்பாக்களும் ரொம்ப ட்டூ மச்சாக இருக்கிறார்கள். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளுக்குள் கட்டாயத்தை திணித்து எரிச்சலடையச் செய்கிறார்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்  சென்ற சீசனில் இதற்கு அருமையானதொரு எடுத்துக்காட்டு கொடுத்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் "ஸ்ரீகாந்த் அப்பா". ஒவ்வொரு கட்டத்தையும் அவன் தாண்டி வருவதற்குள் அந்தத் தகப்பன் எதிர்கொண்ட டென்ஷன் இருக்கிறதே, அப்பப்பா , அந்தக் குழந்தை கூட எதையும் பெரிதாகக்  கண்டுகொண்டிருக்காது.
அவ்வளவு தூரம் போவானேன்? என் வீட்டிலேயே நடந்த ஒரு தமாசு சொல்கிறேன்.  என் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தாயார் ஊரிலிருந்து வந்திருந்தார். தனது இரண்டு வயது பேரனையும் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். சிறிது நேரம் கழித்து பேச்சு அந்தக் குட்டிப் பையனின் பிரதாபங்கள் பற்றி ஆரம்பித்தது.
"வினய் , ஊர்ல பால் வண்டி அண்ணா பேரு என்னன்னு சொல்லுப்பா"
"மாநிக்கோ (மாணிக்கம்) அண்ணா"
"உன்னோட பொம்மை என்னன்னு பாடும்?"
"ரோ ரோ ரோ போத் " (Row Row Row your boat)
"ம்ம், அப்புறம் நீ யாரு புள்ளைன்னு சொல்லுப்பா"
"  "
"சொல்லுப்பா ராஜா"
"   "
"சொல்லுடா ராஜா "
இத்தனை நேரமும் கேட்ட கேள்விகளுக்கு அவன் எரிச்சல் அடைந்திருக்க வேண்டும். மூன்றாம் முறை சடாரென பதில் வந்தது ,
"காக்கா புள்ள"

தேவையா இது ?

**********************

பனிப்பொழிந்த வெள்ளைக் காலையில் ஒருநாள் என் ஜன்னல் வழியாக இங்கு குதித்த கவிதை(?) ஒன்று... தலைப்பில்லாமல்.

இலைகள் முழுதும்
உதிர்ந்து விட்டாலும்
வசந்தம் மீளுமென
கம்பீரமாய்க் காத்திருக்கும்
மொட்டைமரத்தின் நம்பிக்கை
சொல் மனிதா
உன்னிடம் மட்டும்
ஏன் இல்லாமல்?

**********************


Thursday, 14 October 2010

லட்சுமி கதை- பாகம் 4 (இறுதிப் பாகம்)


முந்தின நாள் என்ன தான் நடந்திருந்தாலும், எதுவுமே நடக்காத மாதிரி தூங்கற டைப் நானு. மணி சுமார் ஆறு இருக்கும். காலிங் பெல் சத்தம் கேட்டு எந்திரிச்சு (நாம்போயி எந்திரிப்பேனா?) என்னை வந்து எழுப்பினார் அப்பா. “கீழ லட்சுமி வந்திருக்கு” ன்னு சொன்னதும் தான் நேத்திக்கு நடந்ததும், நான் செம்ம கோபமா இருந்ததும் நியாபகத்துக்கே வந்திச்சு. சரின்னு போயி பாத்தா, இன்னும் ரெண்டு மூணு கார்டு  !

இனிமேலும் தேடுன்னு அனுப்பி, கார்டு எதுவும் டேமேஜ் ஆக்கிக் கொண்டு வந்தாத் தாங்காது சாமின்னு அப்பாவைப் பாத்தேன், அவரும்  ரெடி ஆன மாதிரி தெரிஞ்சுது. இப்ப நேரடியா லட்சுமி கிட்ட கேட்டா நான் திருடலன்னு சொல்லிட்டுப் பட்சி பறந்திரும், ஊரெல்லாம் போயி நாங்க அதுக்குத் திருட்டுப் பட்டம் கட்றதா வேற சொல்லிரும்ன்னு அம்மாயி சொன்னாங்க.. சரி மேல வா லட்சுமின்னு சொல்லிட்டு பழனிச்சாமி போலீஸ்காரருக்கு போன்ல கூப்பிட்டு விஷயத்த சொன்னோம்.

எங்களுக்குத் தான் வாய் அடங்காதே ! அதுக்குள்ள நான், அம்மாயி, அம்மா மூணு பேரும் பொறுக்க முடியாம கேட்டே போட்டோம்.
“லட்சுமி, நீ தான் எடுத்தேன்னு தெளிவாத் தெரிஞ்சு போச்சு. உன்னையப் போயி நம்புனம் பாரு”
“ஐயோ, காணாம போனதைத் தேடிக் கொண்டாந்து குடுத்தாத் திருட்டுப் பட்டம் கட்றீங்களா” –அழுகுது வேற ! (நான் குடுத்த அதே ஆஸ்கார் ஆக்டிங்க எனக்கே திருப்பிக் குடுத்துச்சு)
“இந்த பாரு, பொய்யெல்லாம் பேசீட்டிருந்தா வேலைக்காகாது. வா, போயி மினியப்ப சாமிகிட்ட காசு வெச்சு பாப்போம்; சாமி கண்டீப்பா காமிச்சுக் குடுத்துரும்”
( முனியப்ப சாமி லட்சுமியக்காவோட குல காவல் தெய்வம்; அங்க போயி நூத்தியொரு ரூவா குடுத்து திருடுன பொருள் திரும்பி வரணும்னு வேண்டீட்டா திருடுன பொருளு திரும்பி வருதோ இல்லையோ, திருடுனவனுக்கு எதாச்சும் ஆகும்-இது நம்பிக்கை, ரெண்டு மூணு தடவை நடந்தும் இருக்கு )

ஹ, இந்த மெரட்டலுக்கெல்லாம் லட்சுமியக்கா பயப்படுமா?

“வாங்க கோயலுக்கே போலாம், உண்மையாத் திருடுனவன சாமிதான் காமிக்கணும்”
“அப்ப நீ எடுக்கலைங்கற?”
“சத்தீமா, சாமிக்குப் பொதுவா எடுக்கலைங்”
“அப்பறம் எப்படி தீபா பர்சுல இருந்து ஒன்னொன்னா கரக்டா கொண்டுட்டு வந்தே?”
“அவிங்க தேடச் சொன்னாங்க, நல்லாத் தேடித் பாத்தேன். அங்கங்க  கெடந்துச்சுங்க ஒன்னோன்னும்”
“காசு வேணும்ன்னா கேட்டாக் குடுக்கறோம், இப்படித் திருட்டுப் பெரட்டுப் பண்ணாட்டி என்ன ?”
“தேடிக் கண்டுபுடிச்சுக் குடுத்ததுக்கு திருட்டுப் பட்டம் கட்டறீங்க பாத்தீங்களா?”
“இப்ப தீபாங்கப்பா போலீசுக்கு போன் பண்ணிருக்கறாரு. உண்மையச் சொல்லீட்டீனா இதோட விட்ருவோம். இல்லீனா ஜெயிலு தான்”

அப்பக் கூட எடுத்தேன்னு சொல்லி இருந்தா விட்டுரலாம்ன்னு தான் அவங்கெல்லாம் நெனச்சாங்க (நான் அப்டி நெனைக்கல; ரெண்டு அடியாவது போடனும் போல எனக்கு இருந்துச்சு). ஆனா மறுபடியும் அந்தக்கா பொய் சொல்லிட்டே தான் இருந்துது.

ஆக்ஷன் கிங் பழனிச்சாமி போலீஸ்காரர் வந்தார். எங்கள மாதிரி வெட்டி நாயம் எல்லாம் பேசல அவரு.
“பர்ஸ் எங்கே?”
“ஐயோ சாமீ நான் திருடவே இல்லீங்க”
“வேலை செய்ய வந்துட்டு கை வேச்சிருக்கற; எல்லாம் எனக்குத் தெரியும். உணர பொய்யெல்லாம் வேற எங்காச்சும் வெச்சுக்க. ஒழுங்கா உண்மையச் சொல்லீரு”
“இல்லீங்க. நாந்தாங்க காணாம போனது ஒன்னோன்னும் தேடிக் கண்டுபுடிச்சேன். திருட்டுப் பட்டம் கட்டறாங்க”
 போலீஸ்காரர் உட்டாரு பாருங்க ஒரு அறை; ப்பொளீர்ன்னு. நாங்களே எதிர்பாக்கல.
“இப்ப என்ன பண்றே, ஓடிப்போயி, பர்சு, அதுல இருந்த காசு, மிச்சமிருக்கற கார்டு எல்லாத்தையும் ஒன்னு விடாம கொண்டு வர்றே. பத்தே நிமிஷம், நீ இங்கிருக்கணும்”

அடி ஒதவற மாதிரி அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்கன்னு சொல்றது ரொம்ப கரெக்ட். சொன்ன மாதிரி பத்தாவது நிமிஷம் லட்சுமி அக்கா என்னோட பர்சோட வந்து நின்னுச்சு.
“இப்ப எப்படி காசு வந்துச்சு?”
“என்ற கைக்காசு போட்டு, கடன் வாங்கிக் கொண்டுவந்தங்க” (சத்தியமா சிரிக்க ஆரம்பிச்சுட்டோம் எல்லாரும்)
“யாரு நீயி? அரிச்சந்திரன் பொண்டாட்டி, உன்னைய நம்பி கடன் வேற குடுக்கறாங்களா? மறுபடி மறுபடி பொய் சொன்னே, ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவேன். எல்லாம் சரியா இருக்கான்னு பாரு தீபா ”
என்னோடது எல்லாம் சரியாத்தான் இருந்திச்சு. ஆனா பிரபுவோடது? நாங்க யாரும் அதை கவனிக்கல, அவன் பர்ச நைசா சுருட்டீரலாம்ன்னு நெனச்சிருக்கு.
“என்னோடது எல்லாம் இருக்குங்கண்ணா. பிரபுவோட பர்சு இன்னும் வரலைங். அதையும் தான் எடுத்துட்டுப் போயிருக்கு”

பழனிச்சாமி அண்ணன் லட்சுமியப் பாத்து ஒரு மொறை மொறச்சாரு. அவ்வளவு தான்; அடுத்த அஞ்சாவது நிமிஷம் பிரபுவோட பர்சும் வந்தாச்சு.
“இனிமே எங்கியாச்சும் திருடுனே, நீயி, உன் வீட்ல இருக்கற எல்லாரையும் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவேன். இவங்க பாவப்பட்டு கேஸ் குடுக்கல, அதனால தப்பிச்சே. ஒழுக்கமா இருந்துக்கோ” என்றபடி கிளம்பினார்.
“காணாம போனதைத் தேடிக் கொண்டாந்து குடுத்தாத் திருட்டுப் பட்டம் கட்றாங்க” என்று முணுமுணுத்தபடி கிளம்பியது அரிச்சந்திரன் பொண்டாட்டி.


Wednesday, 13 October 2010

லட்சுமி கதை- பாகம் 3






ஊரெல்லாம் தேடு தேடுன்னு தேடி லட்சுமி கொண்டுவந்தது ATM கார்ட் இல்லிங்க, என்னோட கல்யாண பிளவுஸ் தெக்கக் குடுத்த டைலரோட இங்கிலீஸ் விசிடிங் கார்ட். அதுவும் என்ன கதையோட வந்துச்சுன்னு கேளுங்க..

“நானும் குப்ப மேடே பூரா தேடீட்டனுங், கறுப்புப் பர்ஸ் ஒண்ணுமே காணங்(எப்ப சொன்னோம் பர்ஸ் கருப்புன்னு?), இருட்டு வேற ஆனதால டார்ச் வெச்சுத் தேடினா எல்லாரும் என்ன என்னன்னு கேக்கறாங், குப்பைல கெடந்தாலும் வேற யாராச்சும் எடுத்துட்டுப் போய்ட்டாங்கன்னா? (யாராச்சும்? எப்புடியெல்லாம் யோசிக்காறாங்க பாருங்க!). ரொம்பத் தேடினதுல இந்த கார்டு மட்டும் இருந்துதுங் (அந்த கார்டு வெச்சு நான் வெளிநாடு போக முடியும்ன்னு நெனச்சிடுச்சு)”- எப்படி?

ஆனாலும் பர்சுல இருந்த எல்லாமே வரணுமே ! அதுவும் இல்லாம பிரபுவோடதும் திருப்பிக் குடுக்கணும். சரி, லட்சுமி போற ரூட்டுலையே போக வேண்டியதுதான்...“லட்சுமியக்கா இது என்னோட பர்சுல இருந்தது தான், இதே மாதிரி சைசுல மத்த வெளிநாடு போற கார்டு இருக்கும், என்னோட போட்டோ கூட அதுல ஒட்டியிருக்குமக்கா. இன்னும் கொஞ்சம் கூடத் தேடித் பாருங்க” –மறுபடியும் ரீலு விட்டேன்.

லட்சுமியோட அறிவுக்கு எட்டின அளவுக்கு மத்த கார்டுல எதோ ஒன்னு தான் எனக்கு முக்கியமாத் தேவைன்னு புரிஞ்சுது; ஆனா அது எதுன்னு தான் புரியல. இந்தத் தடவை தேடிக்(?) கொண்டு வந்தது என்னோட ஒரு ATM கார்டு-கண்ண்டபடி மடக்கி கால்ல போட்டு மிதிச்சது, சாணி அப்பின Globus Membership கார்டு, அப்புறம் PAN கார்டு (அதுல தான் போட்டோ இருக்கே). இதெல்லாம் யாரோ குப்பையில போட்டாங்களாம், நாங்க நம்பனுமாம்? டைலாக் என்னன்னு சொல்லலையே? “என்ற பையனும் வந்து தேடித் பாத்தான், அவன் கையிக்கு இதெல்லாம் சிக்குச்சுங். ஆனா அந்த சாமிக்கே பொறுக்காது, இப்படிப் பண்ணிப் போட்டானே”. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு.

பண்ற திருட்டையும் பண்ணிட்டு கார்ட மடக்கிக் குடுத்தா எப்படியிருக்கும்? எனக்கு ஆத்திர ஆத்திரமா வந்துச்சு. மவளே, உனக்கு இன்னிக்கு இருக்குடீ ஆப்புன்னு பல்ல வெறுவீட்டு திட்டறதுக்கு வாயத் தொறந்தேன்; எங்கப்பா என்னை அப்போதைக்குத் பேசாம இருன்னுட்டார்.. இந்நேரத்துக்கு போலீசைக் கூப்பிடவும் முடியாது, மிச்ச கார்டையும் ஒரேயடியாகக் கேட்டா புரிஞ்சு போயி குறுக்க திரும்பீருவா, காலைல வரைக்கும் விட்டுப் பிடிப்போம்ன்னு என்னை சமாதானப் படுத்திட்டு லட்சுமி கிட்ட,
“லட்சுமி, இதுவும் இல்ல, வேற கார்டு. பர்சத் தூக்கிட்டுப் போன நாயி (தப்பேயில்லை) வேற குப்பத் தொட்டியில கூடப் போட்டிருக்கும். நீ டார்ச்ச எடுத்துட்டுப் போ; நாளைக்குக் காலைல நல்லாத் தேடித் பாரு மறுபடியும். கண்டிப்பா எங்கியாச்சும் மத்ததெல்லாம் கெடக்கும்” ன்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள நானும், “அக்கா, உங்க கண்ணுக்குத் தான் ஆண்டவன் இதெல்லாம் காட்டி இருக்கான் பாருங்க, நீங்க தெய்வமாட்ட எனக்கு (போடு படத்த); மத்ததெல்லாம் எப்படியாச்சும் தேடிக் குடுத்திருங்கக்கா.. பணம் போனாத் தொலையுது போங்க (ரிப்பீட்டேய்) அந்த கார்டெல்லாம் மட்டும் கண்டுபுடிங்கக்கா” அப்படீன்னேன்.

லட்சுமியக்கா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனமாதிரி தெரிஞ்சுது. சரி பாப்பா, நான் நாளைக்குக் காலைல எப்படியாச்சும் தேடிக் கண்டுபுடிச்சுக் கொண்டுவர்றேன்னு சொல்லிட்டு ஜாலியா வீட்டுக்குக் கிளம்பிருச்சு.
      
                               (அடுத்த பாகத்தில் முடியும்)





Sunday, 10 October 2010

லட்சுமி கதை- பாகம் 2

பாகம் -1

ரெண்டு பேரோட பர்சும் காணாம போயிடுச்சுன்னு சொன்னா அப்பா நல்லாக் கொஞ்சுவாரு ; இருந்தாலும் திருட்டாச்சே, சொல்லித் தானே ஆகணும். என்னோட பர்சுல லைசென்ஸ், PAN கார்டு, ரெண்டு மூணு ATM கார்டு, ரெண்டு கிரெடிட் கார்டு, நாலஞ்சு ஷாப்பிங் கார்டு, பணம் ஒரு 2000 கிட்ட இருந்திச்சு. பிரபு பர்சுல லைசென்ஸ், ஒரு ATM கார்டு, அறுவது ரூபா பணம் இருந்திச்சு. விஷயத்த மெதுவா அப்பாகிட்ட சொல்லும்போதே அவருக்குத் தலைவலி கிலைவலி எல்லாம் பறந்துருச்சு. எல்லாரும் கெளம்பினதுக்கு அப்புறம் ஆரம்பிச்சாரு.

"சரி, யாரோ எடுத்திருக்காங்க ரெண்டையும், கண்டுபுடிக்கணும், ஆனா எல்லாரும் மண்டபத்துல தானே இருந்தோம்? இங்க யாராரு இருந்தா?"
"அம்மாயி, லட்சுமி. வேற யாரும் வரலீங்ப்பா  "
அப்பா லட்சுமியைக் கூப்பிட லட்சுமி அக்கா வந்தது. பிரபுவோட பர்சும் காணோம்ங்கறதச்  சொல்லாமையே கேட்டாரு,"லட்சுமி, தீபா பர்சக் காணமாம்; நல்லா யோசிச்சுச் சொல்லு, யாராச்சும் புதுசா வந்தாங்களா இங்க?"
"இல்லீங், நானும் அம்மாய்ங்களும் மட்டும் இருந்தமுங்; நாங்கூட ரூமெல்லாம் கூட்டிட்டு நீங்க வந்ததும் கெளம்பலாம்ன்னு இருந்தங்."

அம்மாவுக்கு லேசாக சந்தேகம் வந்துச்சு. ஏம்மா, நான்தான் எந்த வேலையும் ரெண்டு பேரும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லீட்டுப் போனனே, என்னத்துக்கு பெட்ரூம் கூட்டச் சொன்னேன்னு கேக்க , அம்மாயி சொல்லிச்சு, "நான் கூட்டவே வேண்டாம்ன்னு சொன்னேன், லட்சுமி கேக்கவே மாட்டீன்ட்டா ".நாங்க இல்லாதபோது ரூமக் கூட்டுனது, நாங்க இருக்கும்போது கீழ கெடந்த தோடு எடுத்துக் குடுத்தது-எல்லாமாச் சேந்து விஷயம் வெளங்கிச்சு எனக்கும் அப்பாவுக்கும். சரி தூண்டில்  போடுவோம்ன்னு ஆரம்பிச்சோம் லட்சுமி அக்கா கிட்ட.

"லட்சுமி, போயி நீயும் தேடு, நாங்களும் நல்லாத் தேடுறோம். வாசல்பக்கம் எங்கியாச்சும் கெடக்குதான்னு பாரு"ன்னுட்டு நாங்க லட்சுமி அக்காவைக் கவனிக்க ஆரம்பிச்சோம்.லட்சுமியும் தேடுவதைப் போல பாவலா காட்டுச்சு நல்லா.கொஞ்சம் கூட டென்ஷன் ஆகலை , சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்ன்னு மட்டும் சொல்லிட்டு நிறுத்திகிச்சு..

குட்டு வெளி வரதுக்கு எதாச்சும் க்ளு வேணுமே எங்களுக்கு? நான் ஆஸ்க்கார் ரேஞ்சுக்கு ஒரு அழுவாச்சி அழுதேன். "அக்கா, எனக்குப் பர்சு கூட முக்கியமில்ல, அதுல ஒரு கார்டு இருக்கும், அது இல்லீன்னா வெளிநாட்டுக்கு போகவே முடியாதக்கா, ஐயோ, நான் மாப்பிளைட்ட என்ன சொல்றது, நான் எப்புடி வெளிநாடு போறது" - பாஸ்போர்ட், ATM கார்டு  எல்லாம் அந்தக்காவுக்கு எதுவுமே தெரியாது. பர்சுல ஏதோ பணத்த விட முக்கியம்ன்னு மட்டும் புரிஞ்சுது.
"கண்ணு , யாரேடுத்தாங்கன்னே தெரிலயே பாப்பா, இத்தன முக்கியமா அதுல இருந்துச்சா சாமி" (தெரிஞ்சிருந்தா பணத்த மட்டும் எடுத்திருப்பனேன்னு லேசா பீலிங் தெரிஞ்சுது).ஆனா உண்மைய மட்டும் சொல்லல.

 அப்பா போன் எடுத்துப் பேச ஆரம்பிச்சாரு.
"பழனிச்சாமி, தீபா பர்சு திருடு போய்டிச்சு, என்ன பண்ணலாம்?"
" Beep, Beep, Beep" (ஹி ஹி , போன் தான் யாருக்குமே பண்ணலையே)
"ம்ம், அவுங்க அம்மாயி, அப்புறம் லட்சுமின்னு வேலைசெய்ய  வந்த பொண்ணு"
"Beep, Beep, Beep"
"ஆமாம், புது ஆளு லட்சுமி தான்"
"Beep Beep"
" லட்சுமி யாரும் புதுசா வரலேன்னு சொல்லுது"
 (மறுபடி மறுபடி லட்சுமியையே டார்கெட் செஞ்சாரு)
"சரி, அட்றஸ் தானே, வாங்கி வெக்கறேன், நீங்க ஒரு அரை மணி நேரத்துல வந்திருங்க"

அப்பா அம்மாயக் கூப்பிட்டு சும்மாச்சுக்கும் அட்ரஸ் எழுதிகிட்டார். லட்சுமியக்கா கிட்ட அட்ரஸ் சொல்லுன்னு கேட்டா,வீட்டுக்குப் போகணும், யாரோ வீட்டுக்குப் புது ஆளு வந்தா மாதிரி இருந்திச்சு  , நாஞ் சத்தியமாத் திருடலைங்க்ன்னு மாத்தி மாத்தி ஒளறிட்டே இருந்திச்சு. அப்பக் கூட தப்பிக்கலாம்ன்னு தான் பாத்துச்சே ஒழிய கொஞ்சங்கூட பயக்கல.

சரி நம்ம ஆஸ்கார கண்டின்யூ பண்ணுவம்ன்னு எச்சா அழுதேன், "அக்கா , எப்புடியாச்சும் கண்டுபுடிக்கனுமக்கா, பணம் போனாத் தொலையுது , அந்த கார்டு தான் வேணும், இல்லீன்னா ஆயுசுக்கும் என்னால வெளிநாடு போகமுடியாது ".திரும்பத் திரும்ப பணம் முக்கியமில்லை, கார்டு தான் முக்கியம்ன்னு சொல்லிட்டே இருந்தோம். சரி கார்டெல்லாம் தந்துடலாம்ன்னு முடிவு பண்ணினா , திருப்பித் தர்றதுக்கு வாய்ப்புக் குடுக்கணுமே?

"லட்சுமி,  நீ எடுத்திருக்க மாட்டே, ஆனா அந்தப் பக்கங்கீது  எங்காச்சும் குப்பை கூட்டும்போது கீழ விழுந்துருக்கும், போயித் தேடிப்பாரு" ன்னு சொல்லிட்டு நாங்க இந்தப் பக்கம் வந்துட்டோம்.
தேடறேன்னு சொல்லிட்டு குப்பைக் கூடையை கிளர்ற சத்தம் கேட்டுச்சு. அஞ்சு நிமிஷங்கழிச்சு இங்க இல்ல பாப்பான்னு குரல்.

அடுத்த அஸ்திரம்-மறுபடியும் அம்மாயி தான் பாவம்.
"இந்த அம்மாயி வயசாயிடிச்சு, எதுவும் பாக்கவே பாக்காது,  கீழ கெடக்கறது குப்பையா, இல்ல வாழைப்பழத் தோலான்னு கூடப் பாக்காம கூட்டித் தள்ளீரும், ஒரு வேளை வெளில குப்பைத் தொட்டிக்கு எங்கியாச்சும் போயிக் கொட்டியிருந்தா? லட்சுமி கொஞ்சம் போயிப் பாத்துட்டு வர்றியா?"
"எங்கீங்க இருட்டுல போயித் தேடறது, எனக்கு வேற ஊட்டுக்குப் போறக்கு நேரமாச்சுங்க" (மறுபடியும் 'சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்?')

கையில டார்ச் ஒன்னு குடுத்து லட்சுமியக்காவப் போயி வெளில தேடித் பாத்துட்டு வரச் சொன்னோம். போன அஞ்சாவது நிமிஷமே திரும்பி வந்துச்சு, கைல ஏதோ ஒரு கார்டக் கொண்டுட்டு.