Wednesday, 15 December 2010

முடிவெட்டப் போலாமா?

கண்ணைத் திறந்து கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதால் மூளையின் அருமை நமக்குத் தெரிவதில்லை. கேட்கும் சத்தங்களில் இருந்தே சம்மந்தப்பட்ட அந்தப் பொருள் இருக்கும் தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்லுமாம் மூளை. சில சமயம் நாம் சில பாடல்கள் ஹெட்போனில் கேட்கும்போது ,'அட, என்ன ரெக்கார்டிங் போ'ன்னு நினைப்போம் .. அந்த அளவுக்கு இடம் வலம்ன்னு மாறி கேக்கும் பாட்டு நமக்கு. அது போன்றதொரு ஒலிப்பதிவு தான் இது. பலரும் இதை முன்பே  கேட்டிருப்போம். இருந்தாலும் மேற்கூறிய மூளையின் செயல்பாட்டுத் திறனுக்காக மீண்டும் ஒருமுறை கேட்கலாம். அமைதியான வேற எந்த சத்தமும் இல்லாத இடத்தில் , கண்களை மூடிக்கொண்டு , நல்ல தரமான ஹெட்போன் வைத்து, 90% சத்தத்தில்  கேட்கவும்  (அபீஸ் மக்கள் இவ்வாறு செய்தால் தூங்கிவிட்டதாகக் கருதப்பட்டு சீட்டுக் கிழிந்தால் கம்பெனி பொறுப்பல்ல)  



புதிதாகக் கேட்பவர்களுக்கு பிரமிப்பு நீங்கவில்லை அல்லவா? எப்படி இது போல் இசையை பதிவு செய்ய முடிந்தது என கூகுள் செய்த போது இதனை Binaural Recording எனக் கண்டறிந்தேன். நம் காது எப்படி ஒரு இயந்திரம் போல வேலை செய்கிறது எனப் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். அறிவியல் அதிசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கை அதிசயங்களே மிக ஆச்சர்யம் தருகின்றன.

**********************

இப்போதைய குழந்தைகள் ரொம்பவே அறிவாளியாகவும், திறமைசாலிகளாகவும், கூர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.. அதே போலவே அம்மா அப்பாக்களும் ரொம்ப ட்டூ மச்சாக இருக்கிறார்கள். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளுக்குள் கட்டாயத்தை திணித்து எரிச்சலடையச் செய்கிறார்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்  சென்ற சீசனில் இதற்கு அருமையானதொரு எடுத்துக்காட்டு கொடுத்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் "ஸ்ரீகாந்த் அப்பா". ஒவ்வொரு கட்டத்தையும் அவன் தாண்டி வருவதற்குள் அந்தத் தகப்பன் எதிர்கொண்ட டென்ஷன் இருக்கிறதே, அப்பப்பா , அந்தக் குழந்தை கூட எதையும் பெரிதாகக்  கண்டுகொண்டிருக்காது.
அவ்வளவு தூரம் போவானேன்? என் வீட்டிலேயே நடந்த ஒரு தமாசு சொல்கிறேன்.  என் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தாயார் ஊரிலிருந்து வந்திருந்தார். தனது இரண்டு வயது பேரனையும் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். சிறிது நேரம் கழித்து பேச்சு அந்தக் குட்டிப் பையனின் பிரதாபங்கள் பற்றி ஆரம்பித்தது.
"வினய் , ஊர்ல பால் வண்டி அண்ணா பேரு என்னன்னு சொல்லுப்பா"
"மாநிக்கோ (மாணிக்கம்) அண்ணா"
"உன்னோட பொம்மை என்னன்னு பாடும்?"
"ரோ ரோ ரோ போத் " (Row Row Row your boat)
"ம்ம், அப்புறம் நீ யாரு புள்ளைன்னு சொல்லுப்பா"
"  "
"சொல்லுப்பா ராஜா"
"   "
"சொல்லுடா ராஜா "
இத்தனை நேரமும் கேட்ட கேள்விகளுக்கு அவன் எரிச்சல் அடைந்திருக்க வேண்டும். மூன்றாம் முறை சடாரென பதில் வந்தது ,
"காக்கா புள்ள"

தேவையா இது ?

**********************

பனிப்பொழிந்த வெள்ளைக் காலையில் ஒருநாள் என் ஜன்னல் வழியாக இங்கு குதித்த கவிதை(?) ஒன்று... தலைப்பில்லாமல்.

இலைகள் முழுதும்
உதிர்ந்து விட்டாலும்
வசந்தம் மீளுமென
கம்பீரமாய்க் காத்திருக்கும்
மொட்டைமரத்தின் நம்பிக்கை
சொல் மனிதா
உன்னிடம் மட்டும்
ஏன் இல்லாமல்?

**********************


6 comments:

  1. //காக்கா புள்ள //
    ஹா ஹா :)

    அந்த இசை ஆபிஸ்ல கேக்க முடியாது, வீட்ல கேட்டுட்டு சொல்றேன்..

    //சொல் மனிதா //
    ரைட்டு..

    ReplyDelete
  2. அந்த இசையைக் கேட்டேன், இரவில் ஹெட் போன் உதவியுடன், மிகச் சிறப்பாய் இருந்தது பிரதீபா!
    அதுவும் ஒரு இடத்தில் கட்டிங் மெசின் வலது காதுக்கு அருகில் வரும்போதும், கடைசியில் மெல்லிய பேச்சுக் குரல் இடது காதுக்கு அருகில் வரும் போதும் சிலிர்த்து விட்டேன். ;)
    மிக்க நன்றி பிரதீபா பகிர்ந்தமைக்கு :)

    ReplyDelete
  3. @ Balaji saravana
    எப்படி ஒரு ரெகார்டிங் பாத்தீங்களா!! என்ன அருமையா நம்ம மூளை அதை ப்ராசஸ் பண்ணிச்சு பாத்தீங்களா. அதுவும் இல்லாம இதைக் கேக்கரவங்களோட ரியாக்ஷன் யுட்யூப்ல இருக்கும், அதையும் பாருங்க, தமாஷா இருக்கும். :)

    நன்றி.

    ReplyDelete
  4. @அப்பாவி தங்கமணி
    என்னக்கா, ரொம்ப லேட்-ஆ படிச்சு சிரிக்கிறீங்க? அதுக்குள்ள அந்தப் பய்யன் பெரிய்ய பையனே ஆய்ட்டான் போங்க :)

    பாவமா, நீங்க வேற..
    இப்போ அவன் இன்னும் நிறைய பேசறான்.. "என் தலை விதி, உங்கள எல்லாம் வெச்சிட்டு" (மாதிரிக்கு) :)

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......