Thursday, 27 May 2010

இவர்கள் தான் "மாம்" "டாட்"

குழந்தைகள் பெறுவதற்கு முன் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. தந்தையென தாயென ஆனபின்பு அத்தனையும், அதற்கும் மேலும் நன்றாய் புரிகின்றது. முன்பெல்லாம் வழியில் பார்க்கின்ற எந்த குழந்தையாவது அழுது கொண்டிருந்தால் 'அடடா அழுகிறதே பாப்பா'வோடு கவலை முடிகிறது ; இதே பின்னாளில் மனம் பதறுகிறது, ஓடிச் சென்று பார்க்க துடிக்கிறது; வாரி எடுத்துத் தேற்ற அலைகின்றது.

குசும்பன் அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார், தொட்டில் கைதி------no குசும்பு என்று! அதன் மீட்சியாகவோ இல்லை நீட்சியாகவோ இந்த என் அனுபவத்தை சொல்லலாம்;
.
கார்முகிலுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வகுப்புகள் இருக்கும். அதில் ஒன்று எல்லாரும் தத்தமது குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு பழக விட்டு, கடைசியில் கிளம்பும்போது ரைம்ஸ் பாடி முடிப்பது. இன்று மேற்குறிப்பிட்ட அந்த வகுப்பு இருந்தது. முதல் ஒரு மணி நேரம் எல்லா குழந்தைகளும் மழலைகூட இல்லாத ஒரு சத்தங்களில் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், இழுத்துக்கொண்டும், தவழ்ந்து கொண்டும், விழுந்துகொண்டும் மகிழ்வாய் விளையாடிக்கொண்டு இருந்தனர். திடீரென ஒரு குழந்தை என் துப்பட்டாவை பிடித்து இழுத்து, வாயில் வைக்கப் போனது.  அப்போது அதன் அம்மா சடாரென பிடித்து அந்த குழந்தையை இழுத்துக் கோபத்தோடு "No, its hers" என்று சொன்னாள். அந்த ஏழு மாதக் குழந்தைக்குத் தெரியுமா, அது என்னுடைய துப்பட்டா என்று?  ஒழுக்கம் கற்றுக்கொடுங்கள், ஆனால் இப்போதிருந்தே வேண்டாமே! வருடங்கள் ஓடுகையில் தானாகவே சேட்டைகள் தொலைக்கட்டுமே, நாம் ஏன் அடக்க வேண்டும்?

இன்னொரு குழந்தை மற்றொரு குழந்தையின் கையைக் கிள்ள முயன்று கொண்டிருந்தது. நான் பிரித்து விடலாம் என்று முற்படுகையில் திடீரென அந்த குழந்தையின் அம்மா அதன் சட்டையை பின்னாலிருந்து கொத்தாகப் பற்றி அப்படியே தூக்கி வேறிடத்தில் கொண்டு விட்டாள். "Oh Emiley, your mom turned you as a flying girl" என்று பாராட்டுக்கள் வேறு!! என்ன கொடுமைடா சாமி!! இப்படி நம் ஊரில் செய்தால் "சீ நீயும் ஒரு தாயா" என்று தான் 'பாராட்டுக்கள்' வரும்.

எரிச்சலோடு வகுப்பு முடித்து வெளியில் வந்தால், உச்சமோ உச்சம். அங்கு ஒரு 'dad' ஸ்ட்ரோலரில்(குழந்தைகளை உக்கார வைத்து தள்ளும் வண்டி) இரண்டு குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு இருந்தார். ஒன்று வீரிட்டு கத்துகிறது, பலமாக அழுதுகொண்டே இருக்கிறது; அழும் குழந்தையைக் கையில்  எடுக்காமலேயே அந்தப் பாவி முன்னும் பின்னும் வண்டியை தள்ளிக்கொண்டு இருந்தான். ஒரு நிமிடம் இரண்டு நிமிடங்களல்ல, அரை மணி நேரம். எனக்கு நெஞ்செல்லாம் பதறியது, எந்த பொருளும் வாங்க முடியாமல் கவனம் முழுதும் எப்போது அழுகையை நிறுத்தும் என்றே இருக்கிறது.  ஓங்கி ஒரு அறை அவனை விட்டாலென்ன என்று கூட கோபம் எழுந்தது. அழுது அழுது ஓய்ந்து கடைசியில் அந்தக் குழந்தை தூங்கியே விட்டது. நமக்கு இருக்கும் அந்த பரிதவிப்பு, அந்த அரவணைப்பு இவர்களிடம் ஏன் இல்லை? என்ன சொல்லித் தருகிறார்கள் குழந்தைகளுக்கு? சத்தியமாய் புரியவில்லை.

நம் மக்களைப் பொறுத்தவரை குழந்தைக்கு அர்த்தம் குறும்பு என்று தான் தெரியும்; கடிந்து கொண்டாலும் கூட ரசிக்கத்தான் தெரியும்.இவர்களிடத்தும் பாசம் இருக்கிறது, ஆனால் அதை காண்பிக்கும் முறை நம்மைக் கொஞ்சம் அதிர்ச்சியடையத்தான் செய்கிறது.

8 comments:

  1. :))

    டெம்ப்ளேட் சூப்பர்

    ReplyDelete
  2. @கார்க்கி
    என்ன கொடுமை இது, பதிவு போட்டு அதப்பத்தி எதாச்சும் சொல்லுவீங்கன்னு பாத்தா டெம்ப்ளேட் பத்தி பேசறீங்களா?(இன்னும் பயிற்சி தேவையோ ) :))

    ReplyDelete
  3. ம்ம்ம்.. இப்படியும் இருக்கிறாங்க மக்கள்.

    //வருடங்கள் ஓடிகையில் தானாகவே சேட்டைகள் தொலைக்கட்டுமே, நாம் ஏன் அடக்க வேண்டும்? //
    நிறைய பேருக்கு இந்த புரிதல் இல்லை.

    நல்லா எழுதிருக்கீங்க பிரதீபா!

    ReplyDelete
  4. @ ஸ்ரீவி சிவா
    நன்றிங்க.

    ReplyDelete
  5. வலையுலகிற்கு வரவேற்புகள். ஏற்கனவே நாம் பேசிக் கொண்டபடி ஒரு கலக்கு கலக்குங்கள். ஒருசில மகிழ்ச்சிகள் உங்கள் பதிவில்..

    1)எழுத்து கோர்வையாக இருக்கிறது.

    2) எழுத்துப் பிழைகள் இல்லை.

    3) சுவாரஸ்யம் கைவருகிறது.


    நிறைய எழுதுங்கள். முகிலுக்கும், அவருக்கும் என் அன்பு.

    ReplyDelete
  6. @பரிசல்
    ரொம்ப நன்றிங்க, நீங்க வந்ததுக்கும் வாழ்த்தினதுக்கும், உங்க அன்புக்கும்.

    "ஏற்கனவே நாம் பேசிக் கொண்டபடி"-அப்பாடா, நீங்களே வாக்குமூலம் குடுத்துட்டீங்க. இனிமே யாராச்சும் என்ன பதிவு இதுன்னு கேட்டா என் குரு ஒருத்தர் கிட்ட பேசிட்டு தான் இப்படி மொக்கை போடறேன்னு உங்க பக்கம் கைய்ய நீட்டி எஸ்கேப்பு ஆகிருவோமே !! ஹி ஹி. சும்மா தமாசுக்குங்க..

    டவுட்-1 :
    எழுத்து கோர்வை-குளிருல போர்வையப் போர்த்திகிட்டே எழுதினேனா, அதனால கோர்வையா வந்திருக்குமோ? :))

    எழுத்துப் பிழைகள்-வந்தா நீங்கெல்லாம் அடி கும்மி எடுத்துட மாட்டீங்க? அந்த பயம் தான் :))

    சுவாரஸ்யம்-திட்டித் திட்டி எழுதினா அப்படித் தான் வரும் போல!! ஹி ஹி..

    உற்சாகம் ஊட்டியதற்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  7. //ஒழுக்கம் கற்றுக்கொடுங்கள், ஆனால் இப்போதிருந்தே வேண்டாமே! வருடங்கள் ஓடுகையில் தானாகவே சேட்டைகள் தொலைக்கட்டுமே, நாம் ஏன் அடக்க வேண்டும்?//

    சில குழந்தைகள் நம்மை ஒருமையில் விளிக்கும்.. அது அதனுடைய இயல்பு மற்றும் அந்த விளித்தல் என்பது குழந்தைகளுக்கான தொடர்பு மொழி அவ்வளவே. ஆனால் ‘அங்கிள நீ ன்னு சொல்லக்கூடாது.. நீங்கன்னுதான் சொல்லணும்’ என்று கட்டாயப்படுத்துபவர்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    க. சுரேந்திரன்
    அகம் புறம்.

    ReplyDelete
  8. @ksurendran
    நீங்க சொன்ன விஷயத்துல என்னோட கருத்து என்னன்னா, ஒருமையில விளிக்கறது பண்பாடு இல்லை-ங்கறது தாங்க. இதே குழந்தை வான்னு சொல்றது பரவா இல்லைங்க, வாடான்னு சொல்லிட்டா? :-)

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......