Wednesday, 31 March 2021

Menstrual cup (மென்சஸ் கப்)

 Menstrual cup- மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் உபயோகப்படுத்தும் sanitary pad, cloth napkin, tampon இவைகளுக்கு மாற்றாக வந்திருக்கும் சிறு உபகரணம். இதைப்பற்றிய புரிந்துணர்வு இல்லையென்பதாலும், அதிகம் கவனிக்கப்படாமலும் இருப்பதால் இந்த விளக்கப்பதிவு. பெண்களே இதன் உபயோகிப்பாளர்களாக இருப்பதால், பின்வரும் முழுக்கட்டுரையும் அவர்களை நோக்கியதாகவே எழுதப்பட்டிருக்கும்.



மென்செஸ் கப் (Menstrual cup) என்றால் என்ன?

    அதிகபட்சமாக 30 ml மட்டுமே இருக்கும் சிறிய கப் போன்ற இது, யோனிக்குழாய் மூலம் கர்ப்பப்பை வாய்க்கு நெருக்கமாக மாதவிடாய் நேரங்களில் பொருத்தப்பட்டு கசிவைச் சேகரிக்கும்.  சராசரிப் பெண்களுக்கு 4-6 மணி நேரத்தில் கப்  நிரம்பியபின், அதை வெளியில் எடுத்து டாய்லெட்டில் ஊற்றிவிட்டு, கப்பை நீரால் சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.  அதாவது pad, tampon போன்று ஒருமுறைக்கு மட்டுமல்லாது கப்பை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம்- குறைந்தபட்சம் 5 வருடங்கள். எவ்வாறு பொருத்துவது என்ற வழிமுறைகள் யூட்யூபில் காணலாம்.


எல்லாருக்கும் ஒரே அளவிலானதா?

      பெரும்பாலும் சிலிக்கோன் கொண்டு செய்யப்படும் menstrual cup, குறைந்தபட்சம் இரண்டு அளவுகளில் கிடைக்கும். தாம்பத்யத்தில் ஈடுபடாத /இயற்கை வழி பிரசவிக்காத சிறுவயது பெண்களுக்கு சிறிய சைஸ், மற்றவர்களுக்கு அடுத்த சைஸ்.


Menstrual cupபை பற்றி வீடியோவில் பார்க்கும்போது அதனுடைய சைஸ் நிஜத்தில் என்னவென்று புரியாது. தோழிகள் யாரும் உபயோகம் செய்பவர்களிடம்  எப்படி இருக்கும் என நேரில் பாருங்கள். பாதி பயம், சந்தேகம் அதிலேயே தீர்ந்து விடும். It certainly fits in, believe me.


உபயோகிப்பது குறித்த காணொளிகள்:

https://youtu.be/qgdPI7oqmRE

https://youtu.be/o2YtfxUMeV4


பொதுவான பயங்கள்:

1) உள்ள போட்டு தொலைஞ்சிட்டா?

2) வெளில எடுக்க முடியாம போய்ட்டா?

3) நழுவி விழுந்துட்டா?

4) ரொம்பி வழிஞ்சுட்டா?

5)உள்ள குத்திட்டா?


இப்படி பல 'ட்டா'க்களுக்கு ஒரே பதில் தான். கர்ப்பப்பை ஒன்றும் two-way road அல்ல, menstrual cup ஒன்றும் அட்சய பாத்திரமும் இல்லை.  சீக்கிரம் பழக முடியும், அதனால் பயமின்றி உங்கள் புதிய பயணத்தைத் தொடங்கலாம்.



டிப்ஸ்:


1. கப்பை மடக்கி உள்ளே வைக்க வேண்டும், உபயோகிக்கும் புதிதில் சரிவரப் பொருந்த 6-8 தடவை ஆகும்.


2. சரியான பொசிஷனில் நின்று/அமர்ந்து (ஒரு கால் கீழே, ஒரு கால் மேலே தூக்கி உயரமான இடத்தில் ஊன்றி வைக்கலாம்) ஒரு அளவிற்கு மேல் உள்ளே திணிக்க முடியாது, கவலை வேண்டாம்.


3. முதல் சில தடவைகள் நேரம் எடுக்கும், அமைதியான மனநிலையை ஏற்படுத்தி, மெதுவாகப் பொருத்தவும்.   சரியாக பொருத்தியாச்சா என்று லேசாக இழுத்துப்பாருங்கள். If you feel a resistance, it has fit properly.


4. உபயோகிக்கும் 3-5 நாட்களும் ஒவ்வொரு முறையும் கொதிக்க வைத்து சுத்தம் (ஸ்டெர்லைஸ்) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பீரியடின் முதல் நாள்/இறுதி நாள் மட்டுமே செய்தால் போதும்.


5. முதலில் வீட்டில் உபயோகிக்கப் பழகுங்கள். என்ன ஏது என்று புரிந்தபின் வெளியிலும் உபயோகிக்கலாம்.


6. பொதுக் கழிப்பிடங்களில் டாய்லெட்டில் கொட்டியப்பின்  wipes உபயோகித்து கப் சுத்தம் செய்து பிறகு மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். இல்லையேல் disabled டாய்லெட் with sink உபயோகியுங்கள், தவறில்லை.


7. பீரியடின் முதல் நாள் கப் நிறைய 4.5-6.30 மணி நேரம் ஆகும். உதிரப்போக்கு அதிகம் இருப்பவர்கள் 4 மணி நேரத்திற்குப் முன்பே செக் செய்யலாம். உபயோகிக்க உபயோகிக்க இதுவும் புரியும், பழகும்.


8. அருவருப்பு என்பது நிச்சயம் வேண்டாம்.  கைகளில் படத்தான் செய்யும், சுத்தமாகக் கழுவிக்கொள்ளலாம். நம் உதிரம், நம் சுத்தம்.


9. எவ்வளவு காஸ்டலியாக வாங்கினாலும்  ₹1000 க்குள் அடக்கம். அமெசானில் கிடைக்கும் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் கம்பெனி வெப்சைட்டிலேயே கிடைக்கும். ஒருமுறை வாங்கினால் குறைந்தது 5 வருடங்கள் வரும்.


10. சரியாகப் பொருத்தியிருந்தால் லீக் ஆகாது. லீக் ஆனால் சரியாகப் பொருந்தவில்லை என்ற ஒரே காரணம் தான்.


11. வெளியில் எடுக்கும்போதும் வம்படியாக இழுக்கக் கூடாது. Wall Suction holder பார்த்திருப்பீர்கள் தானே, நடுவில் பிடித்து இழுப்பதைவிட ஓரமாக லேசாக தூக்கினாற்போல் எடுத்தால் சுலபமாக விடுபடும்.  அதே லாஜிக் தான். விரல் விட்டு ஆழம் சென்று கப்பின் வாயை சிறிது மடக்கினால் suction விடுபடும்.  மெதுவாக அப்படியே வெளியே இழுத்தால் அலுங்காமல் வெளியே எடுத்துவிடலாம். படிப்பதற்கு என்னம்மோ ராக்கெட் சயின்ஸ் போல் இருந்தாலும், 2 செகண்ட் வேலை தான் பழகிய பின்.


நன்மைகள்:


A) pad உபயோகிப்பதால் வரும் Rashes(புண்) கப்-பினால்  வராது.


B) பல நூறு pads/tampons குப்பைக்குப் போவதை தவிர்க்கலாம், காட்டன் துணிகள் துவைப்பதையும் அதை உலர வைக்கும் வேலையும் தவிர்க்கலாம்.


C) இதை உபயோகிக்கப் பழகிவிட்டால் மாதவிலக்கு அசௌகரியங்களே இல்லாமல் சுதந்திரமாக, உடை நனைத்துவிடும் பயம் ஏதுமின்றி நடமாடலாம்.



இந்தத் தலைப்பில் எனக்குத் தெரிந்த எல்லாமும் சொல்லியிருக்கிறேன்.  எந்தப் புது விஷயமானாலும் உபயோகிக்கும் முறை அறிந்து, அதன் சாதக பாதகங்கள் புரிந்து, உங்களுக்குச் சரிப்படுமா என்று ஆராய்ந்தே அணுகுங்கள்.  நன்றி.


-பிரதீபா புஷ்பராஜ்


1 comment:

  1. மிக அருமையான விளக்கம். கடந்த ஒரு வருடமாக நானும் கோப்பைக்கு (மென்சஸ் கப்) மாறிட்டேன். எனக்கு பழக 6 மாதம் ஆனது. ஏறக்குறைய இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு முடிவே பண்ணிட்டேன்.அப்புறம் தான் அந்த நேக்கு தெரிஞ்சுது.இனிமே நாப்கின் பக்கம் திரும்பி பாக்க கூட யோசிக்க மாட்டேன்.

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......